Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கோச்சடையான்

கோச்சடையான்,Kochadaiyaan
  • கோச்சடையான்
  • ரஜினிகாந்த்
  • தீபிகா படுகோனே
  • இயக்குனர்: செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்
03 ஜூன், 2014 - 17:53 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கோச்சடையான்

தினமலர் விமர்சனம்



உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் திரைப்படம், ஒருவழியாக தடை பல கடந்து, உலகமெங்கும் இன்று முதல் கோலோச்ச களம் இறங்கியுள்ளது!


கறுப்பு வெள்ளை காலத்தில், திரையுலகில் அடியெடுத்து வைத்து, ஈஸ்ட்மென் கலர், கலர் என்று பல ஆண்டுகளை கடந்து இன்று சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம் எனும் அனிமேஷன் உலகிலும் அதிரடியாக அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி, அத்தொழில்நுட்பத்தை தன் மகள் செளந்தர்யா ரஜினியின் இயக்கத்தின் மூலம் மிக பிரமாண்டமாக அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார். திரையுலகின் மேற்கண்ட நான்காவது காலக்கட்டத்திலும், தன் கோச்சடையான் ஸ்டைலால் தனி முத்திரையை பதித்திருக்கும் ரஜினி, இப்படத்தில் கோச்சடையான், ராணா, சேனா என்று மூன்று முகங்களை காட்டி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இனி கோச்சடையான் ரசிகர்கள் மனதில், வெற்றி சிம்மாசனம் போட்டு கோலோச்சும் விதம் குறித்து, கதை, களம் குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் பார்ப்போம்...


பல நூறு ஆண்டுகளாக அருகருகே இருக்கும் கோட்டைபட்டினம் நாட்டுக்கும், கலிங்காபுரி நாட்டுக்கும் பெரும் பகை. இருநாட்டு அரசர்களுக்கும் பரம்பரை பரம்பரையாக பெரும்பகை இருந்து வருகிறது... கோட்டைபட்டினம் நாட்டை சார்ந்த ராணா, சிறு வயதிலேயே, வீட்டை பிரிந்து காடு, மலை எல்லாம் கடந்து கலிங்காபுரிக்கு வந்து, தான் எந்த நாட்டை சார்ந்தவர் என்பதை காண்பித்து கொள்ளாமலேயே அந்த ஊர் அரசன் ஜாக்கி ஷெரப்பிற்கு, பெரியவனானதும் போர்படை தளபதியாகிறார். ஜாக்கியின் மகனும், இளவரசருமான ஆதியின் நட்பையும் பெறும் ராணா ரஜினி, தங்கள் கோட்டைபட்டினம் நாட்டு போர் கைதிகளை அடிமைகளாக பிடித்து வைத்திருக்கும் கலிங்காபுரி மன்னர் ஜாக்கியிடமிருந்தும், மகன் ஆதியிடமிருந்தும் காபந்து செய்ய வேண்டி அவர்களையே கலிங்காபுரி போர் வீரர்களாவும் ஆக்கி பெரும்படையுடன் கோட்டைபட்டினத்தின் மீது படை எடுக்க போகிறார் ராணா ரஜினி. அவ்வாறு போன இடத்தில் கோட்டைபட்டினத்தின் இளவரசரும், தன் பால்ய சிநேகிதனுமான சரத்குமாரிடம், தான் இன்னார் என்பதை புரிய வைத்து., கோட்டைபட்டின வீரர்களை சொந்த நாட்டு போர்படையில் சேர்த்து, தானும் சேர்ந்து எஞ்சிய கலிங்காபுரி வீரர்களை மட்டும் கலிங்காபுரிக்கு ஓட விடுகிறார். இதற்கெல்லாம் காரணம், ராணா ரஜினியின் அப்பா, கோச்சடையான் ரஜினி, நயவஞ்சகமாக கோட்டைபட்டினம் அரசர், நாசரால் கொல்லப்பட்டதும், அவர் போட்டு சென்ற சபதமும் தான் என்று ப்ளாஷ்பேக் விரிகிறது...


அப்பா கோச்சடையான் ரஜினி விட்டு சென்ற பணியை மகன் ராணா ரஜினி எப்படி சிரமேற்கொண்டு முடிக்கிறார். தளபதி கோச்சடையான் புகழ் பிடிக்காமல் கோட்டைப்பட்டினம் மன்னர் நாசர் அவரை கொல்லத்துணியும் அளவு செய்த சதி என்ன? கலிங்காபுரி மன்னர் ஜாக்கிக்கும், கோச்சடையானின் சபதத்திற்கும் என்ன சம்பந்தம்? அந்த சபதத்தை ராணா ராஜினி எப்படி நிறைவேற்றுகிறார்? கோச்சடையானின் எதிரி, துரோகிகளை ராணா ரஜினி எப்படி பழிதீர்க்கிறார்? தீபிகா படுகோன் யார்? அவரை ராணா ரஜினி காதலித்து கைபிடிப்பது எப்படி? சரத்-ரஜினியின் பால்யகால சிநேகம், மாமன்-மச்சான் பந்தமாவது எப்படி? மூத்த மகன் சேனாவை மிஞ்சி கோச்சடையானின் இளைய மகன் ராணா வீரனாக திகழ்வது எப்படி? எனும் எண்ணற்ற கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும், பில்டப்பாகவும் பதில் அளிக்கும் கோச்சடையான் படத்தின் க்ளைமாக்ஸில் வந்து சேரும் சேனா ரஜினி - ராணா ரஜினியின் மோதலை கோச்சடையான் பகுதி-2ல் பார்க்கலாம் என எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டு படத்தை முடிக்கிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.


ஹாலிவுட் படங்களுக்கு நிகரான சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம்(அதாங்க, அனிமேஷன்...) பிரமாண்ட செட்டுகள், பில்-டப்பான ஷாட்டுகள், ரஜினியின் ஸ்டைல் குதிரை சாகஸ என்ட்ரி, கப்பலில் குதிரையுடன் தாவி, தாவி ரஜினி போடும் சண்டைகள், மாறுவது ஒன்றே மாறதது, சூரியனுக்கு முன் எழு, சூரியனையே வெற்றி கொள்ளலாம், வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்து கொள்ள வேண்டும்... உள்ளிட்ட பன்ச்கள், ஆன்மிக அவதாரங்கள், என சகலத்திலும் கோச்சடையான், ராணா என ரஜினி ஜொலித்திருக்கிறார்.


ரஜினிக்கு இணையாக, தீபிகா படுகோனும் ஆக்ஷ்னில் பொளந்து கட்டியிருக்கிறார். அனிமேஷன் என்பதையும் தாண்டி சிற்பமாக அற்புதமாக ஜொலித்திருக்கிறார் அம்மணி!


சரத்குமார், நாசர் ஜாக்கி ஷெரப், ஆதி, ஷோபனா உள்ளிட்ட எல்லோரும் பாத்திமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.


ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து - வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!


கோச்சடையான் , சேனா, ராணா, செங்கோடகன், வீர மகேந்திரா, பீஜூ மகேந்திரா, ரிஷி கோடம் என அரசர் காலத்து பாத்திர பெயர்களுக்கே பெரிதும் யோசித்து இருப்பார்கள் போலும்... பேஷ், பேஷ்!


மலை மீது பிரமாண்ட அரண்மனைகள், அரங்குகள், அழகிய நீர்வீழ்ச்சிகள், இன்னும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகள், பிரமாண்ட காலற்படை, குதிரைபடை, யானைபடை என்று நம்மை அரசர் காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றால் மிகையல்ல.


லதா ரஜினிகாந்தின் பின்னணி குரலில், படத்தின் டைட்டில் கார்டு திரையில் ஓடும் போதே ஒரு பெப் தொற்றிக் கொள்கிறது. அது இந்தி நடிகர் அமிதாப்பின் முன்னோட்டம், கதை, களம் என தொடர்ந்து அது க்ளைமாக்ஸ் வரை நீங்காது இருப்பதில் கோச்சடையான் ஜெயித்திருக்கிறான்!


சிறியவர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்., பெரியவர்களுக்கும் பிடிக்கும்... எனும் அளவில் இருக்கிறது கோச்சடையான்!


ஆகமொத்தத்தில், கோச்சடையான் - கோலோச்சுகிறான் - இன்னும் கோலோச்சுவான்!!





--------------------------------------------------------------------







நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...


வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்




அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com


கோட்டைப்பட்டினம் நாட்டின் தலைமைத்தளபதி கோச்சடையான், தன் படை வீரர்களுடன் போருக்குப்போறார். அங்கே வஞ்சகமாக எதிரி நாட்டு ஆட்களால் விஷம் வைத்து அவர் வீரர்கள் சாகும் தருவாயில் இருக்காங்க. விஷ முறிவு மூலிகை மருந்துக்கு முயற்சி பண்றப்போ எதிரி “ படை வீரர்கள் எனக்கே கொடுத்துடனும், டீலா? நோ டீலா? என்கிறார். வீரர்களை தானமா கொடுத்துட்டு நாட்டுக்குத்திரும்பும் தளபதி தன் மன்னனால் தேச துரோகி பட்டம் சுமத்தப்படறார். மன்னரை விட தளபதிக்கு நாட்டில் நல்ல பேரு. இது மன்னருக்கு பிடிக்கலை. சமயம் பார்த்திட்டிருக்காரு தளபதியைப்பழி வாங்க, இந்த சான்ஸ் கிடைச்சதும் தளபதிக்கு மரண தண்டனை விதிக்கறார். கோச்சடையானின் மகன் எதிரியை எப்படி பழி வாங்குறார்? என்பதே மீதிக்கதை. சுருக்கமாச்சொல்லப்போனால் அப்பாவை அநியாயமா கொன்னவங்களை பழி வாங்கும் மாமூல் பழைய கதைதான். ஆனால் சவுந்தர்யாவின் உழைப்பு, முயற்சி, பட்ட பாட்டுக்கு எல்லாம் நல்ல பலன். கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதை, வசனம், வரலாற்று பின்னணியில் இருந்தும் போர் அடிக்காமல் போகிறது.


ஹீரோவாக தி ஒன் - ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினி. ஓப்பனிங்க் ஷாட்டில் குதிரையில், வரும்போது , அப்பா ரஜினி ஓப்பனிங்க் சீன் , க்ளைமாக்ஸில் 3 வது ரஜினி ஓப்பனிங்க் சீன் என தான் ஒரு மாஸ் ஓப்பனிங்க் ஹீரோ என்பதை நிரூபிக்கிறார். அவர் நடை, தோற்றம் எல்லாம் முடிந்தவரை அப்படியே இருக்கு. குறிப்பாக அவர் கம்பீரக்குரல், ஸ்டைலிஸ் கலக்கல். அவர் பஞ்ச் டயக்லாக் பேசும்போது மட்டும் சவுண்ட் எஞ்சினியர் ஸ்பெஷல் எஃபக்ட் கொடுத்து ரசிகர்களைக்கை தட்டத்தூண்டுகிறார்


ஹீரோயினாக தீபிகா படுகோன். மெழுகு பொம்மை மாதிரி அழகிய வடிவழகு கொண்டவரை நிஜமாகவே பொம்மை மாதிரி ஆக்கி விட்டார்கள். அய்யோ பாவம்.


பாடல் காட்சிகள் பிரமாண்டம். லொக்கேஷன் செலக்சன் குட்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசை குட். பின்னணி இசையில் எப்போதும் இரைச்சல். கொஞ்சம் அமைதியாக விடவே மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.


சரத் குமார் வந்து திரையில் தோன்றும்போது ராதிகாவுக்கே அடையாளம் தெரியாது. என்ன கொடுமை மாயா இது?



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. கோச்சடையான் கேரக்டர் வடிவமைப்பு, அவர் பேசும் கூர்மையான டயலாக்ஸ் கலக்கல் ரகம்.


2. படம் போட்ட 10 நிமிடங்களில் இது அனிமேஷன் படம் என்பதை மறந்து கதைக்குள் ஆடியன்சை அழைத்துச்செல்லும் லாவகம்.


3. இண்ட்டர் நேசனல் மார்க்கெட்டுக்காக புக் செய்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ட்யூன் வாங்கிய சாமார்த்தியம், பார்த்தாயா? என் ரத கஜ துரக பதாதிகளை என ரஜினி பேசும்போது பின்னணி இசை கலக்கல். அரங்கம் அதிர்கிறது. குட் பிஜிஎம்.


சி.பி.கமெண்ட் : கோச்சடையான் - சவுந்தர்யாவின் உழைப்பு, ரஜினி மாஸ், வாய்ஸ், வசனம், திரைக்கதை, ப்ளஸ் பொம்மை படம் என்ற மக்கள் மவுத் டாக்.


கோச்சடையான் திரைக்கதை நல்லா இருக்குனு பாரீன் ரிசல்ட்.





---------------------------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்







லேட்டாக வந்தாலும், அனிமேஷனாய் வந்தாலும், எப்படி வந்தாலும் ரஜினி, ரஜினிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும், சௌந்தர்யாவும். மோஷன் ஃபோட்டோ கேப்சர், 3டி, அனிமேஷன், கிராஃபிக்ஸ் என்று விஞ்ஞானத்தின் அத்தனை உச்சங்களையும், மெல்லத் தொட்டு கொஞ்சம் அவதார் நிகழ்த்தியிருக்கிறது கோச்சடையான்.


கதை?


வெற்றிவீரனாகத் திகழும் தளபதி கோச்சடையானின் புகழால் பொறாமைப்பட்ட மன்னன் நாசர், வஞ்சகமாக கோச்சடையானைப் போட்டுத் தள்ளுகிறான் கோச்சடையானின் மகன், நாசரைக் கொன்று, மன்னன் மகள் தீபிகாவைக் கைப்பிடிக்கிறான். வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், கே.எஸ். ரவிக்குமாரின் திரைக்கதை, பிரமாண்ட காட்சியமைப்புகள், சின்னச் சின்னத் திருப்பங்கள், எழிலான பாடல் காட்சிகள் என்று மனதைக் கொள்ளை கொள்ள வைத்திருக்கிறார்கள்.


சூப்பர் ஸ்டார், அனிமேஷனாய் வந்தால் என்ன? கிராஃபிக்ஸாய் வந்தால் என்ன? அந்த காந்தக் குரல் ஒன்று போதுமே என்று கொண்டாடுகிறார்கள் ரஜினி ரசிகர்கள். இது வெறும் கார்ட்டூன் படம் அல்ல, இதற்காக ரஜினி, உடல் நிலை சரியில்லாத நிலையிலும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு ரியலாக ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டியிருப்பது புத்திசாலித்தனம்.


ரஜினிக்கு இதில் மூன்று வேடங்கள். அதிலும் அந்தக் கோச்சடையானின் கம்பீரமும் வாள் உருவம் லாவகமும் தலைவர் அள்ளிக் கொண்டு போகிறார்! இரண்டு மலைகளுக்கிடையே குதிரையில் தாவுவது, தண்ணீரில் விழுந்தவரை டால்ஃபின் தூக்குவது என்று ரஜினி ஸ்டைல் அங்கங்கே தூவல்.


கோச்சடையான் தனி மனிதன் அல்ல, நாடு, எதிரிகளை ஒழிக்க முதல் வழி மன்னிப்பு போன்ற பஞ்ச் டயலாக்குகளும் பரவசப்படுத்துகின்றன. ஆனால் ரஜினி படமென்றாலே காமெடி பலமாக இருக்கும். இதில் ம்கூம்!


தீபிகா படுகோனே பளிச். மோஷன் கேப்சரிலும் அங்கங்கே கவர்ச்சி காட்டத் தவறவில்லை.


மறைந்த நாகேஷை ஒரு பாத்திரமாக, அவரது உடல் பாவத்துடன் பரிமளிக்க வைத்திருப்பது பிரில்லியண்ட் நாசரும் ஷோபனாவும் கச்சிதம். ஆனால் சரத் உருவத்தை குரலை வைத்து மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறது. (இது யார்? இது யார்? என்று பக்கத்து சீட் ஆசாமி காதைக் கிள்ளுகிறார்)


ஏ.ஆர். ரஹ்மானின் பிஜிஎம், காட்சிகளை கௌரவப்படுத்துகிறது. ரஜினி டயலாக் பேசும் பாடல் அழகு.


குறைகளும் நிறைய இருக்கின்றன. ரஜினியின் ஒன்று விட்ட சித்தப்பா மகன் போல் இருக்கிறார் ரஜினி சீக்குப் பிடித்த கோழி மாதிரி இருக்கும் ருக்மணி, உருவ ஒற்றுமையே இல்லாமல் சரத், தரையில் கால் பதியாத அனிமேஷன், க்ளோசப்பில் ஒரு தலையின் பின்னால் இன்னொரு தலை நிழலாகத் தெரிவது, ஹிரண்யா ஆப்ரேஷன் செய்தது போல் கால்களை அகட்டி நடக்கும் மனிதர்கள் என்று இன்னும் நன்றாகப் பண்ணியிருக்கலாமே? என்று பல இடங்கள் சொல்ல வைக்கின்றன.




கோச்சடையான் - புதிய முயற்சி




ஆஹா - ரஜினி, ரஜினி, ரஜினி




ஹிஹி - அங்கங்கே ஏற்படும் தொய்வு, காமெடியே இல்லாதது.




குமுதம் ரேட்டில் - நன்று



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

கோச்சடையான் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in