Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

தெனாலிராமன்

தெனாலிராமன்,Thenaliraman
02 மே, 2014 - 15:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தெனாலிராமன்

தினமலர் விமர்சனம்


இடையில் இரண்டு வருடங்கள் தன் அதிரடி அரசியல் முடிவுகளால், திரையில் காமெடி நடிகராகக் கூட காலம் தள்ள முடியாமல் காணாமல் போயிருந்த வைகைப்புயல் வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களுக்கு அப்புறம் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் தெனாலிராமன்.


36 மனைவிகள், 52 குழந்தைகள் என பிரமாண்ட குடும்பத்துடன், ஒன்பது அமைச்சர்களின் கட்டுப்பாட்டில், விகடநகரத்தை விட்டுவிட்டு அரண்மனையிலும், அந்தப்புரத்திலும் குதூகல வாழ்க்கை வாழ்ந்து வரும் மன்னர் ஒரு வடிவேலு! மன்னர் வடிவேலுவுக்கு தெரியாமல் விகடநகரம் நாட்டையே கபளீகரம் செய்ய நினைக்கும் சீன வணிகர்களுக்கு, துணை போகும் குறுநில மன்னர் பரஸ்பரம் ராதாரவியுடன் சேர்ந்து கொண்டு அந்த ஒன்பது அமைச்சர்களில், எட்டு அமைச்சர்கள் துட்டு பார்க்க நினைக்கின்றனர். அதற்கு தடையாக இருக்கும் ஒற்றை அமைச்சர் ஜோமல்லுரியை சீனர்கள் போட்டுத்தள்ள உதவும் மீதி எட்டு அமைச்சர்களும் நகருக்குள் சீன வணிகர்களை அனுமதித்து, கொள்ள லாபம் பார்க்கின்றனர்.


மன்னர் வடிவேலுக்கு அமைச்சர்கள் விஷயத்தில் நவரத்தினங்கள் எனும் 9ம் எண் தான் ராசி என்பதால், ஒருநாள் அந்த அமைச்சர் பதவிக்கு, இந்த ஊழல் எட்டு அமைச்சர்கள் புடைசூழ, மன்னர் வடிவேலு தலைமையில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. எட்டு அமைச்சர்களின் சதியையும் மீறி அதில் கலந்து கொண்டு தன் புத்திசாலிதனத்தால் வெற்றி பெறுகிறார் தெனாலிராமன் எனும் மற்றொரு வடிவேலு!


ஒழுங்காக ராஜ்ஜியம் செய்யாமல், சீன வணிகர்களுக்கு இடம் கொடுத்து, மக்களை பசி பட்டினியில் வாடவிடும் மன்னர் வடிவேலுவை கொல்லும் நோக்குடன் அந்த ராஜ்ஜியத்துக்குள் அமைச்சராக அடியெடுத்து வைக்கும் புரட்சிபடை வீரரான தெனாலிராமன் வடிவேலு., ஒரு சில நாட்களிலேயே மன்னர் வடிவேலு வெகுளி..., அவரை ஆட்டி வைப்பது அந்த எட்டு அமைச்சர்களும் தான்... என்பதை தன் புத்திசாலிதன்தால் கண்டுபிடித்து, சீன வணிகர்களிடமிருந்தும், சுயலாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட துஷ்ட, அஷ்ட அமைச்சர்களிடமிருந்தும், ராஜ்ஜியத்தையும், ராஜாவையும் காபந்து செய்வதும், புதிதாக தானும், மன்னரும் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களை உழைக்கும் உண்மைவர்க்கத்தில் இருந்து பொறுக்கி எடுத்து, விகடநகரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் தான் தெனாலிராமன் படத்தின் கதை, களம் எல்லாம்! இதனூடே தெனாலிராமன் வடிவேலுவுக்கும், மன்னர் வடிவேலுவின் மூத்த மகள் மாதுளை எனும் மீனாட்சி தீக்ஷித்துக்கும் இடையேயான காதலையும், கசிந்துருகலையும் கலந்து கட்டி, காமெடியாக, கலர்புல்லாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.


தெனாலிராமன், வெகுளி மன்னன், என இருவேறு பாத்திரங்களில் வடிவேலு வழக்கம்போலவே கம்பீரமாக கலகலப்பு ஊட்டியிருக்கிறார். அதிலும் தெனாலிராமனாக வடிவேலு செய்யும் புத்திசாலித்தன (பானைக்குள் வந்த யாதை உள்ளிட்ட தெனாலிராமன் கதைகள் ஏற்கனவே நமக்கு தெரியும் என்பதால்..) சேட்டைகளை விட, வெகுளி மன்னராக, முட்டாள் தனமாக, 36 மனைவிகளுடனும், 52 குழந்தைகளுடனும் மன்னர் வடிவேலு பண்ணும் லூட்டிகள் செம காமெடி! காமெடி நடிகர் என்றாலும் சில இடங்களில் இரண்டு வடிவேலுகளும் கதாநாயகர்களையே மிஞ்சும் விதத்தில் செய்திருக்கும் செயற்கரிய காரியங்களுக்காகவும், கொடுக்கும் லுக்குகளுக்காகவும் தெனாலிராமன் படத்தை ஒன்றுக்கு இரண்டு முறை பார்க்கலாம்! ஒருசில இடங்களில் மன்னர் வேடங்களில் ஜொலித்த எம்.ஜி.ஆரை மாதிரி தெரிகிறார் வடிவேலு என்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ!


மாதுளையாக வரும் கதாநாயகி மீனாட்சி தீக்ஷித்தும், அவரது கவர்ச்சியும் ஆகட்டும், மற்ற 36 மனைவிகளாகட்டும், பரஸ்பரம் ராதாரவி, ஜி.எம்.குமார், சண்முகராஜ், பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, நமோ நாராயணன், ஜோ மல்லூரி, சக்திவேல், செல்லதுரை, சந்தானபாரதி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆகட்டும், ராஜேஷ், புரட்சிபடை போஸ் வெங்கட், திருட்டு கும்பல் தலைவன் பெசண்ட் ரவி, மனிதகறி மன்சூர் அலிகான், கிங்காங், தேவதர்ஷினி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது தெனாலிராமன் படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது.


புரட்சிப்படை தலைவர்கள் காலம் கணிந்து வரும் வரை ஒளிந்து கொண்டு இருப்பது கூட தவறில்லை... எனும் தமிழ் உணர்வுள்ள ஆரூர் தாஸின் வசனவரிகள், டி.இமானின் எழுச்சியூட்டும் இசை, ராம்நாத் ஷெட்டியின் உயிரோட்டமுள்ள ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், யுவராஜ் தயாளனின் எழுத்து-இயக்கத்தில், ஒருசில குறைகள் இருப்பினும் தெனாலிராமன் வெறும் சிரிப்பு படம் மட்டுமல்ல, இன்றைய காலக்கட்டத்திற்கும் ஏற்ற சிந்தனையை தூண்டும் படமும் கூட.


ஆகமொத்தத்தில், தெனாலிராமன் - சிறுவர்களுக்கும், ஏன்? பெரியவர்களுக்கும் கூட திகட்டாத கருத்துள்ள காமெடி மாமன்(னன்)!










---------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்



சென்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் காணாமல் போன வைகைப் புயல், இந்தப் பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் கரைபுரண்டு வெள்ளமாக வந்திருக்கிறது!


இரட்டை அர்த்த வசனங்களோ, ஆபாசக் காட்சிகளோ இல்லாமல் உடல் மொழியாலும், பேச்சாலும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குதூகலப்படுத்த தன்னை விட்டால் ஆள் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு.


கதை?


அன்னிய முதலீட்டை நாட்டுக்குள் விட்டால், பொதுமக்களும், வியாபாரிகளும் எப்படி பாதிப்பார்கள் என்பதை மன்னர் காலத்து பேக்ரவுண்டில், எல்லோரக்கும் தெரிந்த சில தெனாலிராமன் கதைகளையும் சேர்த்து சொல்லியிருக்கிறார்கள்.


நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பும் மன்னனை, அவரது மந்திரிகள் ஏமாற்றி கல்லா கட்ட, மன்னனைக் கொல்வதற்காக வரும் கிளர்ச்சிக்காரனான தெனாலிராமன், திடீர் மந்திரியாகி, மன்னனையும் நாட்டையும் காப்பாற்றி, மன்னன் மகளையும் கைப்பிடிக்கிறார்.


வடிவேலுவுக்கு இரட்டை வேடம் ஏகப்பட்ட மனைவிகள், ஏகப்பட்ட குழந்தைகள் என்று மகாராஜாவாக ஒன்று. மதியூக மந்திரியாக மற்றொன்று. குழந்தையாக நடித்து, கீழே விழுந்து கால்களை உதைத்து அவர் கதறும் காட்சி ஒன்றே போதும் "நடிப்பு அசுரன் பட்டத்தை சுலபமாகத் தூக்கிக் கொடுத்துவிடலாம்!

கதாநாயகியாக மீனாட்சி தீட்சித். கூல்! ஆளுக்குப் பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள். மாதுளை! சென்னை வெய்யில் ஒத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது. குறைந்த ஆடையில் உள்ளம் கவர்கிறார்!


ராதாரவி உள்ளிட்ட ந(யவஞ்சக)வரத்தின மந்திரிகளும் கிச்சுகிச்சு.


ஐந்து நிமிடமே வந்தாலும் மன்சூர் அலிகான் கலகலக்க வைக்கிறார்.


படத்தின் பலம் ஓர் இளைஞரின் தகதக வசனம், அவரது பெயர் ஆரூர்தாஸ்.


பானைக்குள் யானையை நுழைப்பது, கிணற்றுக்குள் திருடர்கள் இறங்குவது, காயம் பட்ட மன்னனிடம் "எல்லாம் நன்மைக்கே என்று சொல்வது போன்ற அனைவருக்கும் தெரிந்த தெனாலிராமன் கதைகளையே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் புதிய கதைகளையும் சேர்த்திருக்கலாம்.


இமானின் இசையில் "ஆணழகு பெண்ணழகு பாடல் அழகு!


குட்டிக் கதைகள், சீன தேசம், கிராஃபிக்ஸ் காட்சிகள், நகைச்சுவை என்று தொய்வு ஏற்படாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். மன்னருக்குப் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகாராணி அமர்ந்திருப்பது கவன ஈர்ப்பு.


பல இடங்களில் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியை நினைவுபடுத்துகிறது.


தெ.ரா. - லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்!


ஆஹா - வடிவேலு, வடிவேலு, வடிவேலு


ஹிஹி - தெரிந்த கதைகள், யூகிக்க முடிந்த காட்சிகள்


குமுதம் ரேட்டிங் - ஓகே.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in