மேக்கப் போடாமல் நடித்த நடிகை வேதிகா!
பரதேசி படத்தில் நடிகை வேதிகா மேக்கப் போடாமல் நடித்திருக்கிறார். டைரக்டர் பாலா இயக்கும் புதிய படம் பரதேசி. வித்தியாசமான கதை பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் ஹீரோயினாக வேதிகா நடித்துள்ளார். பாலா படத்தில் நடித்தது குறித்து நடிகை வேதிகா கூறுகையில், சுதந்திரத்துக்கு முன் 1930களில் நடிக்கும் கதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரங்குகளை தேர்வு செய்வதில் பாலா கவனமாக செயல்பட்டிருக்கிறார். வழக்கமாக தனது படங்களில் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார். எனது கதாபாத்திரமும் அப்படிபட்ட ஒன்றுதான். சொல்லப்போனால் கூடுதலாக இப்பாத்திரத்திற்கு அக்கறை எடுத்திருக்கிறார்.
இந்த வேடத்தை பற்றி நான் எதையும் வெளியில் பேசுவதற்கு தடை இருக்கிறது. இது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்பரைஸ் பாத்திரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்த படத்திற்காக யாருமே மேக்கப் பயன்படுத்தவில்லை. அதற்கும் பாலா தடை போட்டார். இதுபோன்று எந்த வேடமும் இதுவரை நான் செய்ததில்லை. 1930களில் என்ன நிலை இருந்ததோ, அதை மனதில் வைத்து நடிப்பதற்கு கஷ்டப்பட்டேன். ஆனால் அதுதான் இப்படத்தை உண்மை சம்பவங்களை சித்தரிப்பதுபோல் வித்தியாசப்படுத்தி இருக்கிறது, என்றார்.