இது நம்ம ஆளு: ஒரு பார்வை
23 மே, 2016 - 10:56 IST
கடந்த 3 வருடங்களாக இதோ வருகிறது, அதோ வருகிறது என்று தள்ளிப்போய்கொண்டே இருந்த சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' வருகிற 27ந் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது (கடைசி நேரத்தில் தள்ளிப்போகவும் வாய்ப்புண்டு). இது நம்ம ஆளு படம் பற்றிய ஒரு பார்வை...
- ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம், சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா எல்லோருமே ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறவர்களாக நடித்திருக்கிறார்கள். பாண்டிராஜ் இயக்கும் முதல் நகரத்து காதல் கதை.
- சிம்புவுக்கு நயன்தாரா இன்னாள் காதலியாக நடித்திருக்கிறார். அவரது முன்னாள் காதலியாக வருகிறார் ஆண்ட்ரியா. இதுதவிர இன்னொரு காதலும் இருக்கிறது. அதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.
- சிம்புவும், நயன்தாராவும் தீவிரமாக காதலிக்கிறார்கள். அந்த காதல் காட்சிகள் புதிதாக இருக்கும். அவர்களின் நிஜ காதலை நினைவுபடுத்துவதாக இருக்கும். சிம்புவின் பழைய காதல் பற்றி தெரிய வந்ததும் நயன்தாராவுக்கும், சிம்புவிற்கும் சண்டை வந்து பிரிந்து விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் கதையின் ஒன் லைன்.
- வழக்கமாக சந்தானத்துடன் காமெடி செய்யும் சிம்பு இந்தப் படத்தில் சூரியுடன் காமெடி செய்கிறார். சூரி, சிம்புவை செமயாக கலாய்ப்பதுதான் காமெடியில் ஹைலைட். ஒரு சின்ன சாம்பிள். ஒருவர் சிம்புவை காட்டி அவருக்கு பெண்களை பிடிக்குமா? என்று கேட்பார். அதற்கு சூரி பொண்ணுன்னு பேப்பர் எழுதி காட்டினாலே அவனுக்கு பிடிக்கும் என்பார்.
- ஐ.டி துறையில் பணியாற்றும் பெண்ணாக நடித்திருந்தாலும் படம் முழுக்க நயன்தாரா சேலை, சுடிதார் மட்டுமே அணிந்து நடித்துள்ளார். இதற்கு நேர்மாறாக ஆண்டரியா மார்டன் உடைகளில் கலக்குவார்.
- படத்தின் பெரும்பாலான காட்சி காப்பி ஷாப்புகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. காதல் வருவது, முறிவது, இணைவது எல்லாமே காப்பி ஷாப்பில்தான். சென்னையில் உள்ள 20 காப்பி ஷாப்புகளில் படப்பிடிப்பு நடத்துப்பட்டுள்ளது.
Advertisement