Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தமிழை மறந்த தமிழ்த் திரையுலகம்...!

14 ஏப், 2015 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Tamil-Cinema-forgets-Tamil-tradition

இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய திரையுலகமாக விளங்கி வருபவற்றில் தமிழ்த் திரையுலகமும் ஒன்று. இந்திய மொழிகளில் அதிகப்படியான படங்களை வெளியிடுவதிலும் தமிழ்த் திரைப்படங்கள் முன்னிலையில்தான் இருக்கின்றன.


உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்களாலும், தமிழ்த் திரைப்படங்களின் மார்க்கெட் விரிவடைந்து அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை பல நாடுகளிலும் வெளியாகிறது. திரைப்படங்கள் என்பது அந்தந்த மாநில, பிராந்திய மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. உலகத் திரைப்படங்கள் என்று பொதுவாக பேசும் போது அவற்றில் தமிழ்ப் படங்கள் இடம் பிடிக்கிறதா என்பது கேள்விதான்.


ஈரானிய படங்களும், ஜப்பானிய படங்களும், கொரிய படங்களும் கூட உலகப் படங்களாக அங்கீகரிக்கப்பட்டு பார்க்கப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் படங்கள் அந்த நாடுகளின், மக்களின் கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளன. ஆனால், எத்தனை தமிழ்ப் படங்களில் அப்படிப்பட்ட கலாச்சாரப் பதிவு என்பது இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் அம்மாதிரியாக எந்தப் படங்களாக ஒரு அழுத்தமான பதிவை ஏற்படுத்தியிருக்கிறதா ?. தமிழ்ப் படங்கள் தங்களது கலாச்சார அடையாளத்தை தொலைத்து விட்டதோ என்றுதான் யோசிக்க வைக்கிறது.


தமிழில் சிறந்த இயக்குனர்கள், படைப்பாளிகள் என்று சொல்லப்படுபவர்கள் தங்கள் இனம் சார்ந்த, மொழி சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த எத்தனை படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அனைவருமே வணிகம் சார்ந்த படைப்புகளைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலையை மாற்ற யாரும் முயற்சிக்கவில்லை.


பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் கூட தொடர்ந்து அந்த மாதிரியான படைப்புகளைக் கொடுக்க முயலவில்லை. நாம் கொண்டாடிய மகேந்திரன் அதன் பின் படங்களை இயக்குவதையே விட்டுவிட்டார். இன்றைய முன்னணி இயக்குனர்கள் என்று சொல்லப்படும் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது படங்கள் ஏதாவது கலாச்சாரப் பதிவு, தமிழர்களின் பெருமை பதிவு செய்யப்பட்டுள்ளதா ?.


எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மற்ற மொழிகளின் தாக்கம், மேற்கத்திய கலாச்சாரம், பேச்சிலிருந்து, ஆடையிலிருந்து, அனைத்திலும் மற்ற மொழிகளின், மற்ற கலாச்சாரத்தின் கலப்பு மிதமிஞ்சிக் கிடக்கிறது. நமது வாழ்க்கை முறைகளையும், நமது உறவு முறைகளையும், நமது மொழியின் மாண்பினையும் வெளிப்படுத்தும் ஏதாவது ஒரு சில படங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்களா? அல்லது ஒரு காட்சியிலாவது அதை பதிவு செய்திருக்கிறார்களா? என்ற கேள்விக்கு இல்லை என்றுதான் பதிலளிக்க வேண்டும்.


தலைப்பு


ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பதற்குக் கூட அவர்களுக்கு வரி விலக்கு என்ற ஒன்றைச் சொல்லி கட்டாயப்படுத்தித்தான் தமிழை வளர்க்க வேண்டியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் ஆங்கிலம் மற்ற மொழிகள் கலந்து படங்களுக்கு தலைப்புகள் வைக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அரசாங்கமே தமிழில் படங்களுக்குத் தலைப்பு வைத்தால்தான் வரி விலக்கு என்று அறிவித்தது. அதன் பிறகே திரைக் கலைஞர்கள் தங்களது தமிழ்ப் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க ஆரம்பித்தனர். இல்லையென்றால் அதைக் கூடச் செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.


இன்றும் சில தமிழல்லாத பெயர்களைக் கூட ஏதேதோ காரணத்தைச் சொல்லி அவற்றை தமிழ்ப் பெயர்கள் என கற்பிக்க முயன்று வருகிறார்கள். சமீபத்தில் கூட ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த லிங்கா படத்தின் தலைப்பு கூட தமிழ்ப் பெயர் அல்ல என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்படி தமிழல்லாத பெயர்களை வைப்பதற்குக் கூட இன்னும் பல காரண காரியங்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் கூட ஓகே கண்மணி, என்ற தலைப்பு கூட ஓ காதல் கண்மணி ஆக மாறியது.


விளம்பரம்


படங்களுக்கு செய்யப்படும் விளம்பரங்களில் கூட எத்தனை எத்தனை ஆங்கிலக் கலப்புகள். “சூப்பர் ஹிட், மாஸ் ஹிட், சக்சஸ், சூப்பர் ஹிட் சாங்ஸ், பிளாக் பஸ்டர் ஹிட், ஆடியோ சூப்பர் ஹிட்,” என பலப் பல வார்த்தைகளைத்தான் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். படத்துக்கு மட்டும் தமிழில் பெயர் வைத்தால் போதுமா, அது தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும் தமிழைப் பயன்படுத்தலாமே. விளம்பரங்கள் என்பது அனைவரையும் சென்று சேர்வது, எளிதில் மனதில் இடம் பிடித்து விடுவது, இவற்றில் தமிழை அதிகம் பயன்படுத்தினால் அதன் மூலம் இன்றைய தலைமுறையும் இந்த வார்த்தைகளை கொஞ்சம் அதிகம் பயன்படுத்துவார்களே.


வசனம்


நாம் பேசும் போதும், எழுதும் போதும் அனைத்திலும் ஆங்கிலக் கலப்பு வந்து விட்டது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் எது தமிழ், எது வட மொழிச் சொல் என்ற சந்தேகம் வரும் அளவிற்கு நாமும் புரையோடிப் போயிருக்கிறோம். திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது என்பது மிகவும் எளிது என்று சிலர் நினைத்துக் கொண்டு, யதார்த்தமாகப் பேசுகிறோம் என்று நினைத்துக் கொண்டு எதை எதையோ எழுதி வருகிறார்கள். ஒரு காலத்தில் அண்ணா, கருணாநிதி, ஆரூர்தாஸ், பஞ்சு அருணாச்சலம், தூயவன், வியட்நாம் வீடு சுந்தரம் போன்றோர் அவர்களது வசனங்களுக்காகவும் தனியாக பாராட்டப்பட்டார்கள், பேசப்பட்டார்கள். ஆனால், இன்று ஒரு சொல் வசனத்தையே நாமும் கைதட்டி பாராட்டும் நிலைக்கு வந்து விட்டோம்.


பாடல்கள்


கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சிகள், வானொலிகள், மொபைல் போன்களில் அதிகம் ஒலிக்கும் பாடலாக டங்கா மாரி ஊதாரி.... என்ற ஒரு பாடல் காதைக் கிழிய வைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாடலை எழுதிய ரோகேஷ் என்ற பாடலாசிரியரைத் தேடி படத் தயாரிப்பாளர்கள் படையெடுக்கிறார்கள் என்றெல்லாம் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாட்டு மறைவதற்குள்ளாகவே அடுத்து டண்டனக்கா...டண்டனக்கா என அடுத்த பாட்டுடன் அவர் வந்து விட்டார். நம் வீட்டிலும், பக்கத்து வீட்டிலும் உள்ள சிறுவர்கள், சிறுமியர்கள் இந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டு மனப்பாடம் செய்வதை கண்முன்னே பார்த்து வருத்தப்படத்தான் முடிந்தது. நல்ல வேளை வைரமுத்து, நா.முத்துக்குமார், தாமரை போன்றோர் கொஞ்சம் தமிழ்த் திரையிசைப் பாடல்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.


கதைகள்


இந்த வாரம் தமிழ்த் திரையுலகில் ஒரு கலாச்சார அதிர்ச்சி ஏற்பட உள்ளது என்று வைரமுத்துவே சொல்லும் அளவிற்கு படங்களின் கதைகள் வர ஆரம்பித்துவிட்டன. தமிழ் இலக்கியங்களில் உள்ள காதலையும் அதில் உள்ள கதாபாத்திரங்களையும் வைத்தே பல கதைகளை எழுதித் தள்ளலாம். ஆனால், நம்மவர்களோ, கொரிய மொழிப் படங்களிலிருந்து, ஆப்பிரிக்க படங்களிலிருந்து பல மொழிப் படங்களைத் தழுவி கதைகளை உருவாக்கி வருகிறார்கள். இப்போதைய அதிகப்படியான கதையாக ஒரு காதலன், ஒரு காதலி, அவர்களுடைய காதலுக்கு ஒரு எதிரி அல்லது ஒரு எதிர்ப்பு, அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு இணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கிறது. இன்றைய தலைமுறையினர் ரசிக்கிறார்கள் என்பதற்காக கதைகளில் கூட மேற்கத்திய கலாச்சாரத்தைத்தான் அதிகம் புகுத்துகிறார்கள். மண் மணத்துடன் கூடிய காதல் கதைகளையும், குடும்பக் கதைகளையும் பார்ப்பது அரிதாகி விட்டது.


ஆடை, அலங்காரம்


இந்திப் படங்களிலும், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிப் படங்களிலும் திருமணக் காட்சி என்றால் அவர்கள் பாரம்பரியப்படி காட்சிகளை வைப்பதுதான் வழக்கம். அதில் மட்டும் அவர்கள் எந்தக் குறையையும் வைக்க மாட்டார்கள். ஆனால், தமிழ்ப் படங்களில் திருமணக் காட்சிகளைக் கூட மாடர்ன் மேற்கத்திய கலாச்சாரத்திற்கேற்றபடிதான் அதிகம் காட்டுகிறார்கள். இன்றைய நாயகனும், நாயகியும் தமிழ்க் கலாச்சாரப்படி அணியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்கள் அணியும் ஆடைகளைப் பார்த்து ரசிக்கும்படியாகவா இருக்கிறது. 40 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டும் ஆண்களாக இருந்தால வேட்டி, சட்டையையும், பெண்களாக இருந்தால் புடவையையும் அணிவித்து விடுகிறார்கள். இதற்கு இன்றைய தலைமுறையைக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அவர்களே கலாச்சார ஆடைகளை நிஜ வாழ்வில் விரும்பித்தான் அணிகிறார்கள்.


ஒரு கலாச்சாரத்தை பிரதிபலிப்பதில் பேச்சு, உடை, பழக்க, வழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்றைய அறிவியில் உலகில் திரைப்படம் என்பது ஒரு மதிப்பு மிக்க, எளிதில் மனதில் பதியக் கூடிய ஒரு ஊடகமாக அமைந்துவிட்டது. இந்த ஊடகத்தை முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஏதோ ஒன்றிரண்டு திரைப்படங்களையாவது நமது தமிழ்க் கலாச்சாரத்தின் அடிப்படையில் தயாரித்தால் இந்த தமிழ் கூறும் நல்லுலகம் அவர்களை என்றுமே பாராட்டிக் கொண்டிருக்கும்.


வணிகத்திற்கு ஒரு படத்தை எடுத்தால் தமிழுக்காக, தமிழர்களுக்காக ஒரு படத்தையும் எடுக்கலாமே....?!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in