Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

''ஐ'' ஆடியோ விழா - 'ஹை'லைட்ஸ்!

17 செப், 2014 - 13:01 IST
எழுத்தின் அளவு:

ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்திலும், விக்ரமின் மிரட்டும் நடிப்பிலும், இந்திய சினிமாவே., ஏன் உலக சினிமாவே இந்திய படங்களை திரும்பி பார்க்கும் விதமாக உருவாகியுள்ள படம் 'ஐ'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், சிறப்பு விருந்தினராக பங்கேற்க சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடந்தது. ஐ ஆடியோ விழாவில் நடந்த நிகழ்வுகள் இதோ உங்களுக்காக...


1. 'ஐ' ஆடியோ வெளியீட்டு விழா கோலாகலத்தால் மதியம் முதலே நேரு உள்விளையாட்டு அரங்கம் 'ஐ' என ஆச்சர்யப்படும் அளவிற்கு மிளர்ந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது...


2. 'என்ட்ரி பாஸ்' மற்றும் டிக்கெட்டுகளில் அனுமதி நேரம் மாலை 3.30 முதல் 5.30 மணி வரை என போட்டுவிட்டு பார்வையாளர்களை 4.30 மணிக்கு தான் உள்ளே அனுமதித்தனர். இதுவாவது பரவாயில்லை... இரவு 8.00 மணிக்கு தான் 'ஐ' ஆட்டம் பாட்டத்தையே ஆரம்பித்தனர் படக்குழுவினர்!


3. அர்னால்டு ஸ்வாஷ்நேக்கர், ரஜினிகாந்த் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.கள் வரும் வரை ஐ ஆடியோ ரிலீஸ்க்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட ஸ்டேஜில் கலர்கலரான ஒளி வெள்ளத்தால் காண்போர் கண்களை கூச செய்து கொண்டிருந்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அதில் அதிகம் மிளிர்ந்தது நீலம் மற்றும் பச்சை வண்ணம் தான்!


4. 'ஐ' ஆடியோ விழாவுக்கு பவர்ஸ்டார் சீனிவாசனே 6.35 மணிக்குதான் வந்து சேர்ந்தார். அவருக்கு முன் சிபிராஜ் அவருக்கும் சற்றுமுன் லட்சுமிராய் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் வந்துசேர ஒரு வழியாக நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் அறிகுறி தெரிந்தது என தெம்பானால் அதுதான் இல்லை...


5. 'ஐ' ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு ஆர்வத்துடன் வந்தால், 'ஐ'ய்யகோ... என கத்தும் அளவிற்கு நேரத்தை கடந்துகின்றனரே என ரசிகர்கள் பொறுமையிழக்கும் தருவாயில் 'ஐ' எனும் டைட்டிலை ஸ்கிரீனில் ஸ்பெஷல் எபெக்டுகளுடன் மிளிர செய்து நம்பிக்கையை விதைத்தனர்.


6. 6.58 மணி சுமாருக்கு அமலாபால் - இயக்குநர் விஜய் தம்பதியினரும் அவர்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினி அஸ்வின் உள்ளிட்டவர்களும் அடுத்தடுத்து வந்தமர்ந்தனர். அனைவருக்கும் மேடையில் இருந்து விஐபி வரிசையில் இருபது 'ரோ'களுக்கு அப்புறமே சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. காரணம் நிகழ்ச்சியின் போது மேடையிலிருந்து பார்வையாளர்கள் மாடம் வரை அமைக்கப்பட்டிருந்த 'ரேம்'பில் மாடல்கள் கேட்வாக் செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்தன. இதனால் விஐபி., சீட்டுகளில் முன்வரிசையில் இருந்தவர்கள் பின்வரிசைக்கும், பின்வரிசையில் இருந்தவர்கள் முன்னுக்கும் இடம்பிடிக்க அலைந்தது தனிக்கதை!


7. சரியாக சுமார் 7.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோர் அரங்கு அதிர்ந்த கைதட்டல் மற்றும் விசில் சப்தங்களின் ஊடே அரங்கிற்குள் நுழைந்தனர். ரஜினிகாந்த் வெள்ளை காட்டன் ஷர்ட்டும், பிளாக்பேண்ட்டும் அணிந்தபடி தனக்கே உரிய ஸ்டைலில் நாலாபுறமும் ரசிகர்களை பார்த்து கை அசைத்து கை கூப்பி வணங்கினார்.


8. 7.40 மணிக்கு இயக்குநர் ஷங்கரும், அவரைத்தொடர்ந்து 7.45 மணிக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் அரங்கிற்குள் நுழைந்தனர். அர்னால்டு சிகப்பு டீசர்ட்டும், அதன்மேல் சாம்பல் நிற கோட் ஷூட்டும் உடுத்தியிருந்தார். தனக்கே உரிய பிரத்யேக புன்னகையுடன் ரஜினி மாதிரியே ரசிகர்களை பார்த்து கையசைத்து கைகூப்பியதுடன் கூடுதலாக கட்டை விரலையும் உயர்த்தி வெற்றி சின்னம் காண்பித்தார்(சூப்பர்ஸ்டார்களுக்குள் தான் எத்தனை ஒற்றுமை!)


9. 8.00 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அரங்கிற்குள் புயலாய் நுழைந்ததும் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது!


10. விழாவினை தொகுத்து வழங்கிய பின்னணி பாடகி சின்மயியும், வளர்ந்து வரும் நடிகர் 'அசால்ட்' சிம்ஹாவும் ஆங்காங்கே சொந்த சரக்கையும் எடுத்துவிட்டு பொளந்து கட்டினர். அதிலும் சின்மயி, அர்னால்டு பற்றி சொல்லும்போது ஹாலிவுட் சூப்பர் ஸ்டார், ஏழுமுறை மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர், முன்னாள் கலிபோர்னியா மாகாண கவர்னர் என்றபோது அரங்கம் அதிர்ந்தது. 'ஐ' நாயகர் நடிகர் விக்ரம் பற்றி குறிப்பிடும்போது சின்மயி, விக்ரம் எங்கள் ஊர் 'பரமக்குடிக்காரன்' என விவரித்தபோதும் கூட அரங்கம் அதிர்ச்சியில் அதிர்ந்து உறைந்தது(ஏன் இப்படி சின்மயி.?!)


11. 'ஐ' ஆடியோ வெளியீட்டின் முதல் நிகழ்வாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மற்றொரு இளம் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ள ''கடவுளே கடவுளே ஒரு தடவதான் பார்த்தேன் உன்னை மெரிசலாயிட்டேன்...'' என தொடங்கி தொடரும் பாடலை அனிருத்தே ஸ்டேஜில் மியூசிக் ட்ரூப்புடன் சேர்ந்து பாடி அசத்தினார்.


12. இரண்டாவது நிகழ்வாக ஹரிச்சரண் டீம் ''அயில அயில...'' எனத் தொடங்கி தொடரும் பாடலை பாடியது. கூடவே அதில் பாடிய பெண் பாடகி ஆடியும் அசத்தினார்.


13. மூன்றாவதாக வித்தியாசமான 'கெட்-அப்'பில், மனித உருவமும் விலங்கு மாதிரி தலையுமாக விக்ரமும் அவருடன் அழகு தேவதையாக எமியும் டான்சர்களுடன் சேர்ந்து ஸ்டேஜில் ''என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்...''எனும் பாடலுக்கு ஆடிப்பாடினர்.கூடவே மேடையை தொடர்ந்து போடப்பட்டிருந்த ரேம்பில் மிரட்டலாக நடந்து வந்து அர்னால்டு, ரஜினி, புனித் உள்ளிட்டவர்களிடம் கைகுலுக்கிய விக்ரம் பாடல் முடிந்ததும், மேடையில் அது மாதிரி, கெட்-அப்புகளுக்காக தான் எடுத்துக் கொண்ட சிரத்தையையும் கூறினார்.


14. ஐ படத்தில் அசுரன் மாதிரி, முகமெல்லாம் கொப்பளங்கள் வந்த கூனன் மாதிரி, 25 கிலோ இளைத்த இளைஞர் மாதிரி, 5-6 கெட்-அப்புகளில் விக்ரம் வருகிறாராம். ஒவ்வொருநாளும் மேற்படி கெட்-அப்புகளுக்காக மூன்றரை மணிநேரம் மேக்-அப் போட வேண்டியிருக்கும் அதற்கு பெரிதும் உதவியது நியூசிலாந்தை சேர்ந்த வெட்க் குழுவினர் தான் என்று அந்த குழுவை சார்ந்த ஷான் உள்ளிட்ட இருவரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் விக்ரம். இந்த வெட்க் நிறுவனம்தான் 'ஹாபிட்' 'ஷெர்லாக்ஹோம்ஸ்' உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் விநோத தோற்றங்களை மனிதர்கள், நடிகர்கள் மீது ஓவியமாக தீட்டியது என்றும் கூறினார் விக்ரம்.


15. நான்காவது நிகழ்வாக ஹரிச்சரண் டீம் மீண்டும் வந்து 'ஐ' படத்தில், ''பூக்களே... '' எனத் தொடங்கி தொடரும் பாடலை பாடி, ஆடி சென்றனர்.


16. அடுத்ததாக அர்னால்டு ஷூவாஸ்நேக்கருக்கு மிகவும் பிடிக்குமென 11 பாடிபில்டர்களை மேடையில் இறக்கி பாடி பில்டிங் ஆக்ட் அண்ட் டான்ஸ் பண்ணவிட்டனர். அந்த ஆண் ஆழகர்கள் அர்னால்ட்டை அசத்தும் விதமாக தாங்களும் ஆடி, தங்கள் தசைகளையும் ஆடவிட்டு ஸ்டேஜை தொடர்ந்து போடப்பட்டிருந்த ரேம்பில் வாக்கிங் கொடுக்க, அவர்களுக்கு பதில் மரியாதை செய்ய எழுந்த அர்னால்டு, உற்சாகத்தில் அப்படியே அவர்களுடன் மேடைக்கு படையெடுத்துவிட்டார்.


17.அங்கே அவர்கள் பதினோரு பேருரையும் ஒழுங்குப்படுத்தி நிற்கவைத்து அவர்களுடன் நின்று அழகாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த அர்னால்டு, அப்படியே மைக்கை பிடித்து தொகுப்பாளர் சிம்ஹா, கொஞ்சநேரம் கழித்து பேசலாம் எனக் கூறியதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், எவ்வளவு நேரம் தான் நான் பொறுத்திருப்பது.? இங்கு மேடையில் தோன்றி ஆடிய ஆணழகர்களின் நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ச்சியுற்றேன், நானும் அவர்களை மாதிரி ஆணழகனாக இருந்து கதாநாயகன் ஆனவர் தான். இன்று இங்கு நான் வந்தது 'ஐ' பட விழாவிற்காக மட்டுமல்ல... டைரக்டர் ஷங்கர், உங்களிடம் நான் வாய்ப்பு கேட்டு வந்துள்ளேன். நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம், நான் உங்கள் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன், உடனடியாக ஐ முடிந்ததும் நாம் இணைவோம். வாருங்கள் ஹாலிவுட்டுக்கு என ஷங்கருக்கு அழைப்பு விடுத்தவர், இந்தியாவையும், சென்னையையும், ஆஸ்கர் பிலிம்ஸையும் புகழ்ந்து, மீண்டும் இந்தியா வருவேன், ஐ படம் பார்ப்பேன் என கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். (காரணம், வெள்ளைக்காரன் டைம் கீப் அப் பண்ணுவானு சும்மாவா சொன்னாங்க.?!)


18. ''கூலாக டென்ஷனாகி சிரித்தபடி எஸ்கேப்'' ஆன அர்னால்டு மாலை 5 மணிக்கே அரங்கத்திற்கு வந்து விட்டாராம். 'ஐ' குழுவினர் 7 மணி வரை ஸ்டேஜை ரெடி செய்து கொண்டிருந்தனர். அந்த கடுப்பும், காத்திருப்பும் தான் அர்னால்டு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆக காரணம் என்கின்றனர் சிலர். விக்ரம் விலங்கு மனிதன், கெட்-அப்பில் ரெடியாகி ஆட வர லேட்டாகிவிட்டது என்றும் சிலர் கூறினர். எது நிஜமோ.?!


19. அர்னால்டு சொல்லிக் கொள்ளாது எஸ்கேப் ஆனதும் அப்செட் ஆன ஷங்கர் உள்ளிட்ட ஐ குழுவினர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது உடனடியாக ஸ்டேஜில் ஏறி ஆஸ்கார் பட நிறுவனம் இயக்குநர் ஸ்ரீதர்,(வழக்கம் போலவே ஆஸ்கார் வீ.ரவிச்சந்திரன் இவ்விழாவில் தலைகாட்டவில்லை)இயக்குநர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், பாடலாசிரியர்கள் கபிலன், மதன்கார்க் உள்ளிட்டோர் புடைசூழ அவசர அவசரமாக ஆடியோ சி.டி.,யை ரிலீஸ் செய்து, ட்ரையிலரையும் திரையிட்டனர்.


20. புனித் ராஜ்குமார் ஐ ஆடியோ சி.டி.,யை வழங்க, நடிகர் ரஜினிகாந்த் அதை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மேடையின் ஓரமாகவே நின்று ரஜினி உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் பிரம்மாண்ட திரையில் ஓடவிடப்பட்ட ஐ டிரையிலரை கண்டு ரசித்தனர்.


21. ஐ ஆடியோ சி.டி.,யை ட்ரையிலர் உள்ளிட்டவைகளை ரிலீஸ் செய்ததும் மேடையில் இருந்து இறங்கி, மீண்டும் ரேம்ப் பின் முடிவில் இவர்களுக்காக போடப்பட்டிருந்த பத்து குஷன் ஷோபாவில் ரஜினி, ஷங்கர், புனித், ஆஸ்கார் ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் வந்து அமர ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் விக்ரம் ஆடிய என்னோடு நீ இருந்தால்.... பாடலை தன் மியூசிக் ட்ரூப்புடன் இணைந்து வாசித்து அசத்தினார். ரசிகர்களை உருக்கினார்.


22. ரஜினி பேசும் போது, இது பாடல்கள் வெளியீட்டு விழாவா ஐ படத்தின் வெற்றி விழாவா? ஐ படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக ஷங்கர் தமிழ்சினிமாவை உலக தரத்திற்கும் உச்சத்திற்கும் கொண்டு செல்கிறார். சியான் விக்ரமை இப்படம் ஐ விக்ரமாக மாற்றியுள்ளது. விக்ரம் தன்னை வருத்தி கொண்டு நடிக்கும் நடிகர். ஐ கதாபாத்திரத்திற்காக விக்ரம் கடுமையாக உழைத்திருக்கிறார். தமிழ் சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் ஏன்? ஹாலிவுட்டிலும் கூட விக்ரம் போல் ஒரு நடிகர் கிடையாது எனலாம். அவருக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் என்ற ரஜினி விக்ரமை கட்டிப் பிடித்து பாராட்டினார். விக்ரமும் ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.


23. ஐ நாயகி எமியுடன் 11 மாடல் அழகிகள் மேடையில் தோன்றி ஆடிப்பாடி ரேம்பில் கேட்-வாக் செய்தது கண்கொள்ளாகாட்சி. இதில் கலந்து கொண்ட 11 வெளிநாட்டு மாடல் அழகிகளும் ஐ படத்தில் எமி உடுத்திய உடைகளை உடுத்தி கவர்ச்சிகரமாக உலா வந்தது நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அவர்களது கண்களுக்கும் கூலாய் இருந்தது!


24. நீர் குமிழ்கள், நுரை குமிழ்கள் விட்டு சாதனை புரிந்ததற்காக 19 முறை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சீனாவை சேர்ந்த பெண் அனாயங் நடத்திய பபுள்ஷோ பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. பவர் ஸ்டார் சீனி நிகழச்சியின் ஆரம்பத்தில் ரஜினிக்கு வணக்கம் தெரிவிக்க ரேம் பில் நடந்து வந்து இறுதியாக அவர் இருக்கைக்கு திரும்பும் போது வழுக்கியது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.


25. இறுதியாக இயக்குனர் ஷங்கர் ஐ பற்றியும் அதில் விக்ரமின் நடிப்பும் துடிப்பும் பற்றி இவ்வாறு கூறினார். எவ்வாறு? " நான் முதலில் இந்த படத்திற்கு அழகன், ஆணழகன் என்று இதன் கதையை ஒட்டி பெயர் சூட்ட முடிவு செய்தேன். ஆனால், அந்த பெயரில் ஏற்கனவே படங்கள் வெளி வந்திருந்ததால் ஐ என்று எனக்கு பிடித்த ஒற்றை தமிழ் எழுத்தை சூட்டினேன். அப்புறம் ஐ என்றால் என்னவென்று பார்த்தால் அழகு என்றும் அதற்கு ஒரு அர்த்தம் உண்டென்றார்கள். மிகவும் மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது" என்றவர் தொடர்ந்து, இந்தப் படத்தில் விக்ரம் லிங்கேஷன் எனும் பெயரில் பாத்திர மேற்றிருக்கிறார். ஒவ்வொருத்தரும் இவர் அந்தப் படத்துல உயிரை கொடுத்து நடிச்சார் இந்தப் படத்துல உயிரைக் கொடுத்து நடித்தார்...என்பார்கள்...ஆனால் விக்ரம் முதன்முதலாக ஐ படத்தில் உயிருடன் உடலையும் கொடுத்து நடித்திருக்கிறார்.


யெஸ், ஒரு கெட்-அப் புக்காக 20 கிலோ 25 கிலோ வெயிட்டை குறைத்து அசால்டாக விக்ரம் லிங்கேஷனாகவே ஐயில் வாழ்ந்திருக்கிறார். விக்ரம் ஓட்டி வரும் பைக் அப்படியே ஹீரோயின் எமியாவது, பீட்டர்ஹெயின் மாஸ்டர் வடிவமைத்து கொடுத்த சைக்கிள் சண்டை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, ஆர்ட், எடிட்டிங் எல்லாம் ஐ படத்தில் ஸ்பெஷலாக இருக்கும். அதிலும் படத்தில் 25 சதவிகிதம் சீனாவில் தான் படமாக்கினோம்..அப்பொழுது மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாது பி.சி.சார் வேலை பார்த்ததையும், இந்த படத்திற்காக நான் பேசியதும், ஏ.ஆர்.ரஹ்மான் உடன் முதன் முதலாக நாங்கள் இணைந்த ஜென்டில்மேன் மாதிரி புதிதாக இருக்க வேண்டுமென்று பிளான் பண்ணி இசையமைத்ததையும் மறக்கவே முடியாது...என்று பேசி முடித்த போது இரவு 11 மணியை தாண்டி இருந்தது.


ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஐயின் ஆடியோ ரிலீஸை ஆ வென வாய் பிளந்து பார்த்து விட்டு வெளியில் வந்தால் ச்சோ என மழை அடித்துக் கொண்டிருந்தது! 2 1/2 மணிநேரம் படத்திற்கு 7 1/2 மணிநேரம் ஆடியோ ரிலீஸ் நடத்தி ரசிகர்களை அவதிக்குள்ளாக்குவது நியாயம் தானா ஷங்கர் சார்?!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in