'இசை'ராஜா

முதல் பக்கம் »

இசை பயணம்

30 ஜன,2018 - 00:00 IST
எழுத்தின் அளவு:

சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் தங்கியிருந்த சாய் லாட்ஜ் படிகள் தான் இளையராஜாவிற்கு ஏணியாக அமைந்தன. மைசூர் மகாராஜாவின் மேற்கத்திய இசை குழுவில் இருந்தவர் தன்ராஜ் மாஸ்டர்.

வருமானம் இல்லாத இளையராஜாவிடம், பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணுக்கங்களை கற்று தந்தார் தன்ராஜ் மாஸ்டர். பியானோ கற்று கொள்வதற்காக வந்த இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து, எல்லாவற்றையும் கற்று கொடுத்தார் தன்ராஜ்.

எம்.எஸ்.வி., நண்பரும், பிறகு உதவி இசையமைப்பாளராகவும் இருந்த ஜிகே வெங்கடேஷிடம் இளையராஜாவிற்கு அறிமுகம் கிடைத்தது. அவரது இசைக்குழுவில் சேர்ந்த பின் அவரது ஏழ்மை நிலையும் மாற ஆரம்பித்தது.

தயாரிப்பாளர், இயக்குநர் உடன் மெட்டு அமைக்கும்போது, நோட்ஸ் எடுக்கும் கம்போசிங் ஆசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார். ''தொடுவதென்ன தென்றலோ...'' (சபதம் திரைப்பட பாடல்), ''தேன் சிந்துதே வானம்...'' (பொண்ணுக்கு தங்கமனசு) போன்ற ஜிகேவின் அழகான வார்ப்புகளின் உருவாக்கத்தில் இளையராஜா பங்கேற்றிருக்கிறார்.

ஆர்.கோவர்த்தனம் இசை அமைத்த ''வரப்பிரசாதம் (1975)'' என்ற படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர் இளையராஜா. பாடல்கள் அமைப்பதில் தனது பாணியை காண்பிக்க, தனி இசை தட்டை ''பாவலர் பிரதர்ஸ்'' என்ற பெயரில் உருவாக்கினார்.

''ஓ நெஞ்சமே'' என்ற நாடகத்திற்கு இளையராஜா இசையமைத்த போது 'அன்னக்கிளி' பட கதாசிரியர் செல்வராஜின் நட்பு கிடைத்தது. பஞ்சு அருணாச்சலத்திடம், இளையராஜாவை அறிமுகம் செய்து வைத்தவர் செல்வராஜ் தான். அந்தக்காலத்து பாடகர், இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா, 70களில் சில பாடல்கள் பாடி ஓரிரு இசையமைப்பு வாய்ப்புகளும் பெற்றதால் அவரிடமிருந்து வேறுப்படுத்திக் காட்ட ராஜா, இளையராஜா ஆக்கப்பட்டார்.

இளையராஜா, 33வது வயதில் தான் முதல்பட வாய்ப்பான ''அன்னக்கிளி''யை பெற்றார். 1976-ம் ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களிலேயே 100 நாட்கள் ஓடியதோடு வெள்ளி விழா கண்ட ஒரே படம் ''அன்னக்கிளி''.

வெங்கடேஷின் உதவியாளராக இருந்தபோதே, தானே மெட்டு அமைத்து டிஎம்.சவுந்தர்ராஜனை பாட வைத்திருந்தார். 1980களில் ரஜினிகாந்த் போன்ற புதிய வரவுகளுக்கு டிஎம்எஸ்-ஐ பாட வைத்து வெற்றி கண்டவர் இளையராஜா. திரையுலகிற்கு வந்து ஐந்தாறு ஆண்டுகளில் 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தார் இளையராஜா.

தமிழ் திரைப்படங்களில் உச்ச நட்சத்திரங்களின் 100-வது படங்கள் அனைத்தும் இளையராஜாவின் இசையமைப்பில் உருவானவை தான். 1980களில் இளையராஜா மட்டுமே ஒரு ஆண்டுக்கு 40 படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார். அவருக்கு முந்தைய இசையமைப்பாளர்கள், 30 ஆண்டுகளில் நெருங்கிய எண்ணிக்கையை 10 ஆண்டிலேயே சாதித்து காட்டினார்.

1980களில் எம்.எஸ்.வி., சங்கர் கணேஷ், ரவீந்திரன், ஷியாம், ஜிகே.வெங்கடேஷ், சந்திரபோஸ், டி.ராஜேந்தர், மனோஜ் கியான்... என்று பலர், இசையமைத்து இருந்தாலும் இளையராஜாவின் கையே ஓங்கியிருந்தது.

ஒரு ஆண்டில் வெளிவரும் தமிழ் படங்களின் எண்ணிக்கை 100யை தாண்டிக்ய் கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே ரஜினி, கமல் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்தார்கள். விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் போன்ற அன்றைய இரண்டாம் வரிசை நட்சத்திரங்களின் வெற்றிகளிலும் இளையராஜாவின் பெயர் கலந்திருந்தது.

புதியவர்களையும், இளைஞர்களையும் வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இளையராஜாவின் நட்சத்திர அந்தஸ்த்தை பயன்படுத்தி தங்கள் படங்களுக்கு கூடுதல் மவுஸை ஏற்படுத்தி கொள்ள முயன்றார்கள். அதன் விளைவு தான் அவருக்கு கிடைத்த முக்கியத்துவம்.

தெலுங்கு
இளையராஜாவின் செல்வாக்கு தெலுங்கிலும் பெரிய அளவில் இருந்தது. இளையராஜா இசையமைத்த பாடலை படமாக்கும் போது,படத்தின் பாத்திரங்களை விட,அவரது இசை எனக்கு அதிக உற்சாகம் கொடுக்கிறது என்றார் புகழ்பெற்ற தெலுங்கு இயக்குநர் வம்சி. தெலுங்கின் முன்னணி இயக்குநர்களான கே.விஸ்வநாத், வம்சி, கோதாண்டராமி ரெட்டி ஆகியோர் தங்களது படங்களுக்கு இளையராஜாவை நன்றாக பயன்படுத்தி வெற்றி கண்டனர்.

சிம்பொனி
இளையராஜாவின் சிம்பொனி பதிவாகும் போது, கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒற்றி கொண்ட பின்னரே வாசிப்பும், ஒலிப்பதிவும் தொடங்கியது.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ.என்.வி.குருப், ஸ்ரீ குமரன் தம்பி, ஷி உதய ஷங்கர், குல்சார் உள்ளிட்ட அனைத்து இந்திய கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களுடன் பணியாற்றிய பெருமையும் இளையராஜாவுக்கு உண்டு.

பாரதிராஜா, கே.பாலசந்தர், பாலு மகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், மணிரத்தினம், பாசிர், கே.விஸ்வநாத். சத்யன் அந்திக்காடு, பிரியதர்ஷன், வம்சி, சங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் உள்ளிட்ட ஏராளமான இயக்குனர்களுடன் இளையராஜா பணியாற்றி உள்ளார்.

சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் முத்துராமன், முரளி, மோகன், சிவக்குமார், ராமராஜன், அஜித், விஜய், தனுஷ், உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜா.

« தினமலர் முதல் பக்கம் செய்திகள் முதல் பக்கம் »
Advertisement