Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சுந்தர பாண்டியன்

சுந்தர பாண்டியன்,Sundara Pandiyan
01 அக், 2012 - 11:29 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சுந்தர பாண்டியன்

  

தினமலர் விமர்சனம்



இதுநாள்வரை நட்பு, நண்பர்களின் காதலுக்கு உதவி, அதற்காக அடிதடி, அடாவடி ஆகிய கதையம்சம் கொண்ட படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த சசிகுமார், முதன்முதலாக காந்தார காதலனாக களம் இறங்கி கலக்கி இருக்கும் கலர்புல் படம்தான் "சுந்தரபாண்டியன்".

மதுரை, தேனிபக்கம் குறிப்பிட்ட சமூகத்தை ‌சார்ந்த பெரிய இடத்துப்பிள்ளை நாயகர் சுந்தரபாண்டியன் எனும் சசிகுமார். நண்பனின் காதலுக்கு உதவப்போய் இவரே நாயகி அர்ச்சனா அலைஸ் லெஷ்மி மேனனின் மனம் கவர்ந்தவராகிறார். அப்புறம்? அப்புறமென்ன? அர்ச்சனா அலைஸ் லெஷ்மியின் காதலன், முறைமாமன், அம்மணி அர்ச்சனா கல்லூரிக்கு போகும் வரும் வழிகளில் முறைக்கும் மாமன்கள்... எல்லோரும் மனதளவில் விரோதியாகப்போகும் சுந்தரபாண்டியனை, எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட இருந்தே குரல்வளை அறுக்க பார்க்கின்றனர். ஆனால் அவர்க‌ள் அத்தனை பேரையும் நண்பர்களாகவே பார்க்கும் சுந்தரபாண்டியன், தன் காதல் திருமணத்திற்கு முதல்நாள் புகட்டும் பாடம் தான் "சுந்தரபாண்டியன்" மொத்தபடமும்! இப்படி ஒரு காதலுக்கும் - நட்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கதையை எத்தனைக்கு எத்தனை அற்புதமாக தந்திருக்கிறார் இப்படத்தின் அறிமுக இயக்குநரும், சசிகுமாரின் உதவி இயக்குநருமான எஸ்.ஆர்.பிரபாகரன் என்பது தான் இப்படத்தின் பெரியபலம்!

ரஜினி ரசிகர் சுந்தரபாண்டியனாக சசிகுமார், பேருந்தில் அலப்பறை பண்ணுபவர்களை அடக்கும் ஒரு சில காட்சிகளும், பில்-டப் ப்ளாஷ் போக்குகளும்‌ போதும் அவரது இயல்பான எடுப்பான நடிப்பிற்கு கட்டியம் கூறுவதற்கு! மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார்?! சசியின் நடிப்பையும் துடிப்பையும் பார்த்து நாயகி அர்ச்சனா எனும் லெட்சுமி மேனனுக்கு மட்டுமல்ல... பொதுவான தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சசிகுமார் மீது இனம்புரியா காதல் வருவதுதான் சுந்தரபாண்டியனின் வெற்றி! க்ளைமாக்ஸில் நல்ல நட்பிற்கு விளக்கம் அளிக்கும் காட்சிகளில் சுந்தரபாண்டியன் சசிகுமாரையும் மீறி, இயக்குநர் பிரபாகரனும் அவரது வசனங்களும் ஸ்கீரினில் தெரிவது சசிகுமாருக்கும், சுந்தரபாண்டியனுக்கும் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி ‌என்றால் மிகையல்ல!

கதாநாயகி அர்ச்சனாவாக அறிமுகமாகியிருக்கும் லெட்சுமி மேனன், தமிழ்சினிமாவில் தற்போது நிலவும் குடும்ப பாங்கான கதாநாயகியர் பற்றாக்குறையை பக்காவாக நிரப்புவார் என நம்பலாம்! அம்மணி காதல் காட்சிகளிலும் சரி, கல்தா கொடுக்கும் காட்சிகளிலும் சரி, அவ்வளவு ஏன்? அப்பாவின் ஒப்புதலுக்காக கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகளிலும் கூட தன் இயல்பான திமிரான நடிப்பால் படத்தை மேலும் ஒருபடி மேலே தூக்கி பிடித்திருக்கிறார் பலே! பலே!

சசிகுமார் - லெஷ்மி மேனன் ஜோடி மாதிரியே ஆரம்ப காதலன் அறிவழகனாக வரும் இனிகோ பிரபாகரன், முறைபையன் ஜெகனாக வரும் விஜய் சேதுபதி, எல்லோருக்கும் சீனியர் புவனேஷ்வரன் ‌எனும் குட்டையனாக வலம் வந்து, பாதியிலேயே பரிதாபகரமான முடிவை தேடிக் கொள்ளும் அப்புக்குட்டி, நண்பன் முருகேசனாக வரும் பரோட்டா சூரி, பரஞ்ஜோதி - செளந்தர ராஜா, அப்பா கேரக்டர்கள் நரேன், தென்னவன், அம்மா கேரக்டர்கள் துளசி, சுஜாதா, தோழி நீது நீலாம்பரன் உள்ளிட்ட எல்லோரும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரும்பலம்!

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் நான்கு மட்டுமல்ல, பின்னணி இசையும் சுகராகம்! சி.பிரேம் குமாரின் ஒளிப்பதிவு, வி.டான்போஸ்கோவின் படத்தொகுப்பு, திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சி, தினேஷின் நடனம் உள்ளிட்டவைகளும் படத்தின் பெரும் பலம்! இவையெல்லாவற்றையும் விட ‌எஸ்.ஆர்.பிரபாகரனின் எழுத்தும்-இயக்கமும், எம்.சசிகுமாரின் நடிப்பும், தயாரிப்பும் சுந்தரபாண்டியனின் முன்பாதியை காமெடியாகவும், பின்பாதியை கருத்து நெடியாகவும் சீன் பை சீன் தூக்கி நிறுத்தி இருக்கின்றனர் பேஷ் பேஷ்!

ஆக மொத்தத்தில் குறை என்று பெரிதாக எதுவும் சொல்ல முடியாத "சுந்தரபாண்டியன் - சூப்பர்பாண்டியன்!"




----------------------------------------------------------

குமுதம் சினிமா விமர்சனம்

இன்னொமொரு மதுரைப் படம்!


“குத்தறது நண்பனா இருந்தா வெளியில் சொல்லக்கூடாது. இதுதாண்டா நட்பு’ கதாநாயகன் க்ளைமாக்ஸில் பேசும் இந்த வசனம்தான் கதையின் மையம்.

சசிகுமார் படம் என்றால் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்குச் சுலபமாய்ப் பதில் சொல்லிவிடலாம். கிராமம். காதல், அந்தக் காதலுக்கு உதவும் நண்பர்கள், அவர்கள் செய்யும் துரோகம் என்ற சுலபமான வட்டத்திற்குள் சுழலும் அதே விஷயம்தான்.

நண்பனின் காதலுக்கு ஐடியா கொடுக்கும் சசிகுமாரையே அந்தப் பெண் காதலிக்கிறாள். அவளுக்கு ஒரு முறைமாமன். ஒரு தலையாய்க் காதலிக்கும் அப்புக்குட்டி எல்லோரும் சசியின் மேல் செமை காண்டாய் இருக்க, திடீரென அப்புக்குட்டி இறந்து போக ஆளாளுக்கு ஹீரோவைப் போட்டுத் தள்ள துரத்த, கடைசியில் என்ன நடக்கும்? ஹீரோ அனைவரையும் சாய்த்துவிட்டு, க்ளைமாக்ஸில் இரண்டாம் வரி வசனத்தைப் பேசுவதுடன் படம் முடிகிறது.

சசிகுமாரின் பட்டறையிலிருந்து வந்திருக்கும் பிரபாகரன் படத்தின் இயக்குநர். முதல்பாதி படம் அந்த பஸ்ஸைப் போலவே செமை வேகமாகச் செல்கிறது. கலகலப்புக்குப் பஞ்சமே இல்லை. ஆளுக்கு ஒரு மாதம் என்று கதாநாயகியை ஏலம் விடும் காட்சியமைப்புகள் கலகல. அதன் பிறகு அடிதடிக்கு மாறும்போது மட்டும் கொஞ்சம் பிரேக் பிடிக்கிறது.

சசிகுமாருக்குப் பொருத்தமான பாத்திரம். நண்பர்களுடனான அரட்டையும், காதலுக்கான அசால்ட் ஐடியாக்களுமாக கொள்ளை கொள்கிறார். கதாநாயகியுடன் தனியாய்ப் பேச முயலும்போது, கூட இருக்கும் பெண்ணின் தலையில் செல்லமாய்க் குட்டும் அழகாகட்டும், கைக்குழந்தை உள்ள முறைப்பெண்ணிடம், “அடுத்த வாரிசுக்கு ரெடியாயிட்டியா? மச்சானுக்கு பாயசமா?’ என்று கிண்டலிடிப்பதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் கதாநாயகி லட்சுமி மேனன். கொஞ்சம் திமிர், கொஞ்சம் அழகு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் காதல் என்று ரொம்ப நாள் கழித்து தமிழுக்கு முழுமையான ஒரு கதாநாயகி தயார். இடது கன்னத்தில் இருக்கும் சின்னத் தழும்பு கூட அழகாக இருக்கிறது!

வடிவேலு, விவேக் வரிசையில் பரோட்டா சூரிக்கு இடம் இருக்கிறது.

ரகுநந்தனின் இசையில் இரண்டு பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ஆனால் அந்த ஆர்.ஆர்.தான் எங்கிருந்தோ சுட்டுப் போட்ட மாதிரி நெருடல்!

படத்தின் துவக்கத்தில் டாக்குமென்ட்ரி மாதிரி உசிலம்பட்டி பக்கம், காதலித்தால் கருவேலக் காட்டுக்குள் கொண்டு சென்று காலி செய்துவிடுவார்கள் என்பதுபோல் டேமேஜ் செய்துவிட்டு, கதையில் ஹீரோ, ஹீரோயினின் அப்பாக்களை நல்லவர்களாக மாற்றியிருப்பது முரண் என்றாலும் கவிதையான முரண்.

மனசை மீட்ட சுந்தர பாண்டியன்!

ஆஹா: சசிகுமார், லட்சுமிமேனன், காமெடி

ச்சே: யூகிக்க முடிந்த திருப்பங்கள்

குமுதம் ரேட்டிங்: ஓகே



----------------------------------------------------

கல்கி விமர்சனம்


எப்போதும் போல வேகமும், விறுவிறுப்பும், ரத்தமும், சத்தமுமாக அலையும் சசிக்குமாரை தேடி சுந்தரபாண்டியன் படத்துக்போனால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். சசிக்குமாருக்கு காதல், பளபளக்கும் கண்களும், கலர்கலர் காஸ்ட்யூம்களோடு காதலி பின்னால் அலைகிற காதலன் பாத்திரம். அவரும் ரசித்து ருசித்து அவருக்கே உரிய ப்ரெண்ட்ஸ் சென்டிமெண்ட் என்கிற குடுவைக்குள் காதல் கதையை போட்டு குலுக்கி எடுக்க கலகலப்பும் மினுமினுப்புமாக திரைக்கதை அமைந்து சுந்தரபாண்டியனை வெற்றி பாண்டியனாக ஆக்கி விட்டது.

நண்பனின் காதலுக்கு உதவப்போன இடத்தில் காதலில் விழுவதும், அந்த காதலை, துரோகிகளாக மாறிவிடும் நண்பர்களிடமிருந்து மீட்பதும் தான் கதை. கேலியும், கிண்டலும் சசிக்குமாரின் தா(ஜா)டிக்கேற்ற மூடி போல இயல்பாக வருகின்றன. அதுவும் கல்யாணமான முறைப்பெண்ணிடம் முந்திரிப்பருப்பு, பாயசத்துக்கா இல்லை பங்காளிக்கா எனஅவர் அடிக்கும் லூட்டி குளுகுளு கிலுகிலுப்பு. முதல் படம் என்ற படபடப்பு குறுகுறுப்பு இல்லாமல் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகர் மீது இனி நம்பிக்கை வெளிச்சம் விழலாம். முதல் பாதிமுழுக்க பஸ்ஸோடு சேர்ந்து காதலும், பயணிக்க காதலோடு சேர்ந்து ரசிகனும் பயணிக்கிறான். அந்த பயணம் பகல் நேரத்து முதல் வகுப்பு ரயில் பயணம் போல ச்சும்மா குளுகுளு ஜிலுஜிலுன்னு இருக்கிறது.

காதலுக்கு சசிக்குமார் எனில் காமெடிக்கு பரோட்டா சூரி. இவர் தேனி வட்டார மொழியில் கொடுக்கும் டைமிங் அலப்பறையில் ரைமிங்காக கைத்தட்டலில் அதிர்கிறது தியேட்டர். அக்கம்பக்கம் கவனம்செலுத்தாமல் காமெடியில் மட்டும் கவனம் செலுத்தினால் சூரிக்கு சூப்பர் எதிர்காலம்.

திமிரான, அதே நேரத்தில் திருத்தமான அழகு ஹீரோயின் லக்ஷ்மிமேனன். தம்கோழி முட்டைக்கண்களை உருட்டி மிரட்டி பேசும்போது, ரசிகனின் மனசும் உருண்டு மிரண்டு போவது நிச்சயம். சசிக்குமார் முதலில் காதலை சொல்லும்போது திமிறுவதும், பிறகு அந்த காதலில் இருந்து மீளமுடியாமல் திமிறுவதுமென  திமிற திமிற அழகு. இனி கோடம்பாக்கத்தின் ஹோம்லி பாத்திரங்களில் ஹோல்சேல் குத்தகைதாரர் ஆகலாம் லக்ஷ்மிமேனன்.

அப்புக்குட்டி, விஜய்சேதுபதி, இனிகோ, டீக்கடை பெஞ்ச்... அவரவர் பாத்திரத்தில் சிக்ஸர், போர், காதல்சண்டையில் அப்புக்குட்டி பஸ்ஸில் அடிபட்டு சாகும்போது அதுக்கு காரணம் சசிக்குமார் தான் என அவரை ஜெயிலுக்கு அனுப்பும்போது திரைக்கதையின் வாலில் தீ பற்றிக்கொள்கிறது. அதன்பிறகு இறுதிவரை திகுதிகுதான். அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சி ஆக்ரோஷத் தாண்டவம்.

எப்போதும் சசிக்குமார் படத்தில் பாடல்கள் களைகட்டும். இந்த படத்தில் அப்படி ஒன்றும் சொல்வதற்கில்லை. என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் காதல் வந்து பொய்யாக மாண்டேஜ் பாடல் மட்டும் மனசுக்குள் வந்து மயிலிறகாகிறது. பிரேம்குமார் ஒளிப்பதிவு காதலில் குளிர்ச்சியாகவும், கிளைமாக்ஸில் வறட்சியாகவும் தேனியை சுற்றி வரும் தேனீ.

எதிரியை அழிக்க கூடாது. ஜெயிக்கணும். குத்தினது நண்பனா இருந்தா சாகற வரைக்கும் சொல்லக்கூடாது. என்பது போன்ற நல்ல வசனங்களுக்காக நறுக்குன்னு பாராட்டலாம். இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரை.

படம் ஆரம்பிக்கிறபோது தென்தமிழகத்தில் ஆதிக்கத்தோடு இருக்கும் ஜாதியின் பெருமையை பேசுமோ என்ற சந்தேகம் இருந்தது. அதற்குள் எல்லாம் கதையை செலுத்தாமல் கவனம் காட்டிய இயக்குனர் இறந்து போன அப்புக்குட்டி குடும்பத்துக்கு இரண்டு  ஏக்கர் நிலம் தருகிறேன். அவன் தங்கச்சிக்கு கல்யாண செலவை நான் ஏத்துக்கிறேன் என சசிக்குமாரின் அப்பா பாத்திரத்தை சொல்ல வைக்கம்போது கதை ஜாதி பெருமையை பேசுகிறதே ஏன்? இயக்குனர் அறியாமல் விட்டார்? இல்லை அறிந்து தான் விட்டாரா? நல்ல கிராமத்து கதையை காதல் குழைத்து தந்த விதத்தில் சுந்தர பாண்டியனை ரசிக்கலாம்.

சுந்தரபாண்டியன் - சூப்பர் பாண்டியன்

நன்றி கல்கி.



வாசகர் கருத்து (264)

rk - pollachi,இந்தியா
11 டிச, 2012 - 17:43 Report Abuse
 rk normal
Rate this:
kavi - coimbatore,இந்தியா
29 நவ, 2012 - 15:29 Report Abuse
 kavi நல்ல படம். இன்னொரு சிறந்த படத்தை தந்த சசிகுமாருக்கு வாழ்த்துக்க்கள்.
Rate this:
PRABU SHOLINGHUR - Chennai  ( Posted via: Dinamalar Android App )
23 நவ, 2012 - 19:50 Report Abuse
PRABU SHOLINGHUR super thala next
Rate this:
saranya - kumbakonam,இந்தியா
20 நவ, 2012 - 18:56 Report Abuse
 saranya such a nice film..... gud love story...... unexpected climax................. nice ..........
Rate this:
sankar - doha,கத்தார்
17 நவ, 2012 - 18:00 Report Abuse
 sankar சூப்பர் படம் நட்புக்காக உயிரக்குட குடுக்கலாம் அது தன உணமையான நட்பு
Rate this:
மேலும் 259 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in