தினமலர் விமர்சனம் » வெப்பம்
தினமலர் விமர்சனம்
பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின், பெண் உதவியாளர் அஞ்சனா இயக்கத்தில், கவுதமின், ஃபோட்டான் கதாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம்தான் "வெப்பம்".
வழக்கமான அன்டர் கிரவுண்ட் தாதாக்களின் கதைதான். அதில் ஒரு அப்பா-பிள்ளைகளின் மோதலையும், அண்ணன்-தம்பி பாசத்தையும், நல்ல நட்பையும், நம்பும் படியான காதலையும் திணித்து, திகட்ட திகட்ட தித்திக்கும் திரைப்படத்தை தர முயன்று, அதில் பாதி வெற்றியையும் பெற்றிருக்கிறார் பெண் இயக்குநர் அஞ்சனா.
புதுமுகம் நானி, கார்த்திக்குமார், முத்துக்குமார், நித்யா மேனன், பிந்து மாதவி, ஜெனிபர் என்று எக்கச்சக்க புதுமுகங்களும், பழகிய முகங்களும் வரிசைகட்டி நடித்திருந்தாலும் நானி, கார்த்திக், நித்யா மேனன், பிந்து மாதவி ஜோடிகள் தான், நம் கண்ணையும், கருத்தையும் கவருகின்றனர். ஆனால் அவர்களும் குப்பத்து இளைஞர்கள் பாத்திரங்களில் ஒட்டாமல், மேல் தட்டு யுவன்-யுவதிகளாய் ஜொலிப்பது பரிதாபம். பின்னணி இசையிலும் சரி, பாடல்கள் இசையிலும் சரி, இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவும் பளிச்!
பெண்தாதா, போதை மருந்து கடத்தல், பாலியல் தொழில், காதல் என்று கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் அஞ்சனா மாதிரி பெண் இயக்குநர்களும், அரைத்தமாவையே டிஃபிரண்ட் என்ற பெயரில் அரைப்பது வேதனை. மற்றபடி "வெப்பம்" - "தகிக்கவுமில்லை!" "ரசிகர்களை தவிப்பில் விடவுமில்லை!!"
-----------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
அண்ணன், தம்பிகள் இருவர். இவர்களின் அப்பா குடிக்கிறார், நோயாளி மனைவியை அடிக்கிறார். மகனின் கையாலேயே இறந்து போகிறார் அந்த பரிதாபத் தாய். இப்படி அந்த அண்ணன், தம்பி இருவரும் கெட்டு சீரழிக்கூடிய ஆரம்பக் காட்சியிலேயே உணர்த்திவிடுகிறார் அறிமுக இயக்குநர் அஞ்சனா. மோசமான சூழலில் சேரிக்குள்ளேயே அந்த ரெண்டு பேரும் வளர்கிறார்கள்.
ரெண்டு பேரும் சேர்ந்து அப்பாவை போடப் போகிறார்கள் என நினைத்தால் அதான் இல்லை. அண்ணன் சுவர் விளம்பரம் செய்கிறார். தம்பி நானி சிகரெட் பிடிக்கிறார். தண்ணியடிக்கிறார். ஏதோ தோணும்போது காலேஜ் போகிறார். பிற சமயங்களில் நித்யா மேனனை காதலிக்கிறார். அவ்வளவுதான். இடைவேளை வரை பைக்கில் நாயகர்கள் சுற்றிக் கொண்டே இருப்பது செம அலுப்பு.
இதுதவிர, கஞ்சா விற்கும் அம்மாச்சியைக் கண்டு படத்தில் வரும் எல்லாரும் பதறுகிறார்கள். ஆனால் தியேட்டரில் யாரும் ரசிக்கவில்லை. நானியின் நண்பன், கார்த்திக் குமார் கொலை செய்யப்படும்போது டைட்டிலுக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் வெப்பம். சரி, படத்தில் நல்ல விஷயங்களை பார்ப்போம். விபச்சாரப் பெண் விஜியாக வரும் பிந்துமாதவி அவ்ளோ அழகு கார்திக்கு உடனான காதலில் மிக அழகாக நடித்திருக்கிறார். நித்யா மேனனின் கண்கள் முழுக்க கவிதை. ஒரே நேரத்தில் சில நூறு எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து அசத்திவிடுகிறார். நானி, கார்த்திக் குமார் இருவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அழகாகச் செய்திருக்கிறார்கள். படத்தில் இன்னொரு ப்ளஸ் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ். காதுகளுக்கு இம்சை கொடுக்காத இசையில் ஜோஸ்வா ஸ்ரீதர் ஜெயித்திருக்கிறார். ஏதோ சொல்லப் போறாங்கய்யா என்னமோ இருக்கு என்று காத்திருந்தால் அறிமுக இயக்குநர் அஞ்சனா பழைய பணியாரத்தை உதிரியாக்கி உப்புமா செய்திருக்கிறார். அவ்ளோதான்.
"வெப்பம்" - "ரசிகர்களுக்கு சூடு!!"