பிச்சைக்காரன் 2,Pichaikkaran2

பிச்சைக்காரன் 2 - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் - விஜய் ஆண்டனி
இசை - விஜய் ஆண்டனி
நடிப்பு - விஜய் ஆண்டனி, காவ்யா தப்பார், தேவ் கில்
வெளியான தேதி - 19 மே 2023
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமா எத்தனையோ ஆள் மாறாட்டக் கதைகளை இதற்கு முன்பு பார்த்திருக்கிறது. இப்போது காலம் மாறிவிட்டது. அதனால் மூளை மாறாட்டக் கதைகளையும் பார்க்கும் அளவிற்கு கதாசிரியர்களின் கற்பனையும் அதீதமாய் வளர்ந்திருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்து 1989ல் வெளிவந்த 'ராஜாதி ராஜா' படத்தின் கதையை கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து மூளை மாற்று சிகிச்சை என மருத்துவத்தை சேர்த்து, 'பிச்சைக்காரன்' முதல் பாகத்தின் அம்மா சென்டிமென்ட்டை தங்கை சென்டிமென்ட் ஆக மாற்றி, அந்த பிச்சைக்காரர்களின் வலியைப் போக்க பணக்காரனாக மாறிய பிச்சைக்காரன் ஒருவர் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கதை. இசையமைப்பாளர், நடிகர், எடிட்டர் விஜய் ஆண்டனி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியிருக்கிறார்.

விஜய் ஆண்டனி, இந்தியாவின் 7வது பணக்காரர்களில் ஒருவர், ஒரு லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர். அவரது சொத்துக்களுக்கு ஆசைப்படும் அவரது நண்பர் தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பெரடி ஆகியோருடன் சேர்ந்து விஜய் ஆண்டனிக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கிறார். பிச்சைக்காரன் என நினைத்து மற்றுமொரு விஜய் ஆண்டனியைக் கடத்தி, பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி மூளையை எடுத்து பணக்காரன் விஜய் ஆண்டனிக்கு வைக்கிறார். ஆனால், பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி சாதாரண ஆள் அல்ல, அவர் ஒரு கொலைகாரன் என்பது தேவ் கில் அன்ட் கோவுக்குத் தெரிய வருகிறது. சிறு வயதில் தங்கையைத் தொலைத்த, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்ந்த, பின் வெளியில் வந்து கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று, வெளியில் வந்தவர்தான் பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி. தன்னை பயன்படுத்தி பல கோடிகளை கொள்ளை அடிக்க நினைக்கும் தேவ் கில்லையும் அவரது நண்பர்களையும் பணக்காரனாக மாறிய பிச்சைக்காரன் என்ன செய்கிறார் என்பதுதான் இடைவேளை வரையிலான கதை. அதற்குப் பிறகு வேறு ஒரு கதைக்கு மாறிவிடுகிறது படம்.

படத்தின் ஆரம்பத்தில் மூளை மாற்று அறுவை சிகிச்சை, பணக்காரன் விஜய் ஆண்டனி, அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் நண்பர்கள் என பரபரப்பாக ஆரம்பமாகிறது படம். நம்ப முடியாத கதை என்றாலும் ஒரு வித்தியாசமான படத்தைப் பார்க்கப் போகிறோம் என்று முதல் இருபது நிமிடங்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறார் இயக்குனர் விஜய் ஆண்டனி. அதன் பின் பிச்சைக்காரன் விஜய் ஆண்டனிக்கான நீளமான ஒரு பிளாஷ்பேக், பிச்சைக்காரர்களுக்கான புது வாழ்வு தரும் 'ஆன்ட்டி பிகிலி' என திரைக்கதை வேறு பக்கம் நகர்ந்து கடும் பில்ட்அப்புடன் நகர்ந்து முடிகிறது படம்.

'பிச்சைக்காரன்' முதல் பாகத்தில் பணக்காரன் விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக நடிப்பது கதை. இந்த 2ம் பாகத்தில் பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி பணக்காரன் ஆக நடிப்பதுதான் கதை. இரண்டையும் முதல் பாகத்திலேயே நடித்துவிட்டதால் இரண்டாம் பாகத்திலும் அதையே எளிதில் செய்துவிடுகிறார் விஜய் ஆண்டனி. அதே மென் சோகம், தன்மையான குரல், சண்டைக் காட்சிகளில் ஒரு ஆவேசம் என அவர் பாதையிலேயே செல்கிறார்.

படத்தின் கதாநாயகி காவ்யா தபார். டைட்டிலில் ஒரு பாடலிலும் பின் சில காட்சிகளிலும் வந்து காணாமல் போகிறார். அதோடு படம் முடிவதற்கு முன்பு வந்து சில காட்சிகளில் தலைகாட்டிவிட்டுப் போகிறார்.

படத்தின் முதல் பாதியில் தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பெரடி ஆகியோர் வில்லன்கள். இரண்டாவது பாதியில் முதலமைச்சர் ராதாரவியை வில்லன் ஆக்கியிருக்கிறார்கள். தேவ் கில், விஜய் ஆண்டனியின் சொத்துக்களைக் கைப்பற்ற முயல்வதற்கு தேவ் கில் அப்பாவின் தற்கொலை ஒரு காரணம் என ஒரு பிளாஷ் பேக் சொல்கிறார்கள். ராதாரவியும் விஜய் ஆண்டனியின் சொத்துக்களைக் கைப்பற்ற முயல்கிறார், அதற்கு அரசியல் மட்டுமே காரணம். யோகிபாபு நட்புக்காக நடித்துக் கொடுத்திருப்பார் போலிருக்கிறது, சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்.

ஓம் நாராயண் ஒளிப்பதிவு பிரேமிங்கில் தனி கவனம் செலுத்தி மேக்கிங்கை தரம் உயர்த்தியிருக்கிறது. வழக்கம் போல பின்னணி இசையில் அழுத்தமான உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. எடிட்டர் விஜய் ஆண்டனி பிளாஷ்பேக் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். இரண்டாம் பாதி முழுவதும் ஹீரோவுக்கான பில்ட் அப் காட்சிகளாக மட்டுமே நகர்கிறது. அவர் செய்யும் எல்லாவற்றிற்கும் பொதுமக்கள் கருத்து சொல்லும் காட்சிகள் நிறைய இடம் பெற்றுள்ளது.

பிச்சைக்காரன் முதல் பாகத்தில் அந்த அம்மா - மகன் சென்டிமென்ட் நம்மை காட்சிக்குக் காட்சி உருக வைத்து ரசிக்க வைத்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அண்ணன் - தங்கை சென்டிமென்ட்டை எடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், அதையொட்டிய திரைக்கதையும், காட்சிகளும் மட்டுமே இருந்திருந்தால் இந்தப் படமும் உருக வைத்திருக்கும். நட்பு, துரோகம், அரசியல், என கிளைக் கதைகளைச் சேர்த்து முதன்மைக் கதையின் உணர்வைக் குறைத்துவிட்டார்கள்.

பிச்சைக்காரன் 2 - 'பில்ட் அப்'காரன்

 

பிச்சைக்காரன் 2 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பிச்சைக்காரன் 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓