டிஎஸ்பி,DSP
Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்
இயக்கம் - பொன்ராம்
இசை - இமான்
நடிப்பு - விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், பிரபாகர்
வெளியான தேதி - 2 டிசம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

ஒரு சில நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஆர்வத்துடன் சென்று பார்ப்போம். அப்படி ஒரு ஆர்வத்தை சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய மற்றுமொரு நடிகர் விஜய் சேதுபதி. மாறுபட்ட படங்கள், கதாபாத்திரங்கள் என நடித்து அவருக்கென ஒரு தனி இடத்தை சீக்கிரமே பிடித்துக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு நடிகர் 'டிஎஸ்பி' மாதிரியான கதையை, கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' என இரண்டு வெற்றிகளைக் கொடுத்த பொன் ராம் 'சீமராஜா' படம் தோல்வியடைந்த போதே தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டு அடுத்து ஒரு தரமான கதையை யோசித்து களமிறங்கியிருக்கலாம். இப்படி ஒரு 'க்ரிஞ்ச்' ஆன கதையைத்தான் நாம் எழுதியிருக்கிறோம் என அவருக்கே தெரிந்திருக்காது. சரி, அவருக்குத்தான் தெரியவில்லை, அந்தக் கதையைக் கேட்ட விஜய் சேதுபதிக்குக் கூடவா தெரியாமல் போனது, ஆஆஆஆஆஆஆ….ச்சரியம்…

ஒரு ஊர்ல ஒரு அப்பாவி குடும்பம். அந்த அப்பாவி குடும்பத்துல ஒரு அமைதியான பையன். அந்த ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருக்கிற ஒரு ரவுடி. அப்புறம் என்ன நடக்கும்…, யு டியூப்ல வீடியோ பார்க்கிற ஒரு வயசு குழந்தையைக் கேட்டால் கூட படத்துல அடுத்து என்ன நடக்கும்னு சொல்லிடும். இல்லை அந்தக் குழந்தையாவது புதுசா மாத்தி எதையாவது சொல்லும். தமிழ் சினிமா இயக்குனர்களே, இந்த போலீஸ், ரவுடி கதையை 2125ம் வருஷத்துலயாவது தூக்கிப் போட்டுடுவீங்களா, இல்லை அப்பவும் இப்படித்தான் படமெடுப்பீங்களா…'சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம் 1, 2, 3' இப்படி நிறைய பார்த்தாச்சு... புண்ணியமாப் போகும், ஏற்கெனவே தியேட்டர்கள் பக்கம் யாரும் அதிகமா வரதில்லை, நீங்களும் இப்படி படம் எடுத்து மொத்தமா முடிச்சிடாதீங்கப்பா…

'மாஸ்டர், விக்ரம்' படம்னு வில்லனா நடிச்சி விஜய் சேதுபதி முன்னணி வில்லன் நடிகராக மாறிட்டதால, அவர் ஹீரோவா நடிச்சி வர படத்துல என்ன இருக்கும்னு ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துடுச்சி போல. முதல் நாள் முதல் காட்சிக்கே தியேட்டர்ல 50 பேர் கூட வரலை. படம் முடிஞ்சி வெளியே வந்தால் யு டியூப் சேனல்கள் 50 பேர் படம் எப்படியிருக்குன்னு கேட்டுத் தொல்லை பண்ணுவாங்க. ஆனா, இந்தப் படத்துக்கு அப்படி ஏதாவது ரிவியூ சொல்றதுக்குக் கூட யாரும் மைக் முன்னாடி போகல, கையெடுத்துக் கும்பிட்டு தெறிச்சி ஓடறாங்க. இது தியேட்டரில் நேரில் கண்ட காட்சி. விஜய் சேதுபதி அவர்களே, கஷ்டப்பட்டு சினிமாவில் ஒரு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளீர்கள், தரமான படங்களைக் கொடுத்து ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள அந்த ரசிகர்களை இப்படிப்பட்ட படங்களில் நடித்து ஏமாற்றாதீர்கள்.

விஜய் சேதுபதிக்கே படத்தில் இப்படி ஒரு நிலைமை என்றால் மற்ற கதாபாத்திரங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன ?. 'நட்பு நாயகன்' விமல் வேறு இடையில் வந்து காமெடி செய்துவிட்டுப் போகிறார்.

இமான் இசையில் ஒரே ஒரு டியூனை பின்னணி இசைக்காகப் பிடித்துவிட்டார், அதையே படம் முழுவதும் தொடர்ந்து வாசித்து, வாசித்து யாரும் தப்பித் தவறிக் கூடத் தூங்கிவிடக் கூடாது என வால்யூமை ஏற்றி வைத்திருக்கிறார்.

'டிஎஸ்பி' என படத்திற்குப் பெயர் வைத்து அப்பதவியின் மாண்பைக் குறைத்திருக்க வேண்டாம்.

டிஎஸ்பி - ஏன் விஎஸ்பி (விஜய் சேதுபதி) ?

 

டிஎஸ்பி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டிஎஸ்பி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓