கடமையை செய்,Kadamaiyai Sei
Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கணேஷ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - வேங்கட ராகவன்
இசை - அருண் ராஜ்
நடிப்பு - எஸ்ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த்
வெளியான தேதி - 12 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகளை சொல்ல வேண்டும் என வெற்றி பெறத் துடிக்கும் பல இயக்குனர்கள் நினைக்கிறார்கள். எப்படியோ கதையை உருவாக்கினாலும், அதை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் சொல்வதற்கான வித்தைகளை கற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதை எளிய கதையாக இருந்தாலும் ஒரு உணர்வுபூர்வமான கதை. அதை திரைக்கதையாக விறுவிறுப்பாக சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் வேங்கட ராகவன்.

சிவில் இஞ்சினியரான எஸ்ஜே சூர்யாவிற்கு திடீரென வேலை போய்விடுகிறது. அழகான காதல் மனைவி, அன்பான பெண் குழந்தை என மகிழ்ச்சியான குடும்பம் கவலைபடக் கூடாதென ஒரு அபார்ட்மென்ட்டில் செக்யூரிட்டி வேலைக்குச் செல்கிறார் சூர்யா. அந்த அபார்ட்மென்ட் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அதைப் பற்றி அந்த பில்டரிடம் சொல்லிவிட்டு வரும் வழியில் விபத்தில் சிக்கி 'ஸ்டூபர்' என்ற மூளை சம்பந்தப்பட்ட நோயால் பாதிப்படைகிறார். ஏறக்குறைய கோமா போன்ற நிலை. திடீரென நினைவு வரும். அப்படி படுக்கையில் மருத்துவமனையில் இருப்பவர் ஐந்தே நாளில் இடிந்து விழும் அபார்ட்மென்ட் மக்களைக் காப்பாற்ற நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'மாநாடு' படத்திற்குப் பிறகு எஸ்.ஜே. சூர்யா மீது ரசிகர்களுக்கு தனி அபிமானம் வந்துவிட்டது. ஆனால், இந்தப் படத்தை அதற்கு முன்பாக நடிக்க ஒத்துக் கொண்டிருப்பார் போலிருக்கிறது. பொதுவாக ஹீரோக்கள் அவர்கள் நடிக்கும் படங்களின் கதைகளில் தலையிடுவார்கள் என்று சொல்வார்கள். இந்தப் படத்தின் ஹீரோவும், முன்னாள் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா ஏன் தலையிடாமல் விட்டுவிட்டார் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

சூர்யாவின் மனைவியாக யாஷிகா ஆனந்த். ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். யாஷிகா என்றாலே கிளாமர் எதிர்பார்த்து ரசிகர்கள் வருவார்கள். இந்தப் படத்தில் அதற்கும் வழியில்லை. ஏதோ, கிடைக்கும் கேப்பில் கொஞ்சம் கிளாமராக வருகிறார். அது அவரின் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இல்லை.

படத்தில் வின்சென்ட் அசோகன்தான் வில்லன் என நாம் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென ஒரு டுவிஸ்ட் அடிக்கிறது திரைக்கதை. கிளைமாக்சை சீக்கிரம் முடிங்கப்பா என இடைவேளைக்குப் பின் படம் சுற்றிச் சுற்றி போகிறது. சீரியசான இடங்களில் நகைச்சுவையாகவும், நகைச்சுவையான இடங்களில் சீரியசாகவும் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். மொட்டை ராஜேந்திரன் காமெடியை எல்லாம் ரசிக்க முடியவில்லை.

இந்தக் காலத்திய சினிமா எங்கோ போய்விட்டது. ஆனால், இப்படம் 90களின் படம் போல நம்மை பின்னோக்கி இழுக்கிறது.

கடமையை செய் - அதை சரியாகச் செய்…

 

கடமையை செய் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கடமையை செய்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓