தேஜாவு,Dejavu
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ், பிஜி மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - அரவிந்த் ஸ்ரீனிவாசன்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - அருள்நிதி, மதுபாலா
வெளியான தேதி - 22 ஜுலை 2022
நேரம் - 1 மணி நேரம் 59 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

புதிய கதைகளுடன் பல புதிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் தங்கள் முதல் படத்திலேயே அழுத்தமான ஒரு தடத்தைப் பதித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் அறிமுகமாகியுள்ள இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், பத்திரிகையாளராக இருந்து யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குனரானவர்.

வித்தியாசமான கதையைத் தேர்வு செய்தவர் இந்த 'தேஜாவு' திரைக்கதையை இன்னும் செதுக்கியிருந்தால் அழுத்தமான தடத்தைப் பதித்திருக்கலாம். இருந்தாலும் ஏமாற்றமில்லாமல் ரசிக்கும்படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

தமிழகக் காவல் துறையின் டிஜிபி ஆக இருப்பவர் மதுபாலா. அவரது மகள் ஸ்முருதி வெங்கட்டை யாரோ சிலர் கடத்திவிடுகிறார்கள். அதைப் பற்றி தனிப்பட்ட முறையில் விசாரிக்க அவரது சக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் அண்டர்கவர் ஆபீசர் ஒருவரைக் கேட்கிறார். அந்த ஆபீசராக அருள்நிதி வருகிறார். அவர் விசாரணையில் தீவிரமாக இறங்குகிறார். ஸ்முருதி கடத்தப்படும் போது காவல் துறை கட்டுப்பாட்டுக்கு அறைக்கு போன் செய்யும் போது எழுத்தாளர் அச்யுத் குமார் பெயரைச் சொல்கிறார். அவரை விசாரிக்கச் சென்ற போது நடக்கும், அவர் புதிதாக எழுதி வரும் கதையில் என்ன இருக்கிறதோ அதுதான் தற்போது ஸ்முருதியின் கடத்தலாக இருக்கிறது. அதைக் கண்டு அருள்நிதி, மதுபாலா அதிர்ச்சியடைகிறார்கள். கடத்தப்பட்ட ஸ்முருதியை அருள்நிதி கண்டுபிடித்தாரா, அச்யுத் குமார் எப்படி நடக்கும் உண்மைகளை முன்னரே ஒரு கதையாக எழுதுகிறார் என்பதையும் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் ஆரம்பத்தில் டேக் ஆப் ஆவதில் சற்றே தடுமாறுகிறது. அருள்நிதி வந்த பிறகு கொஞ்சம் பரபரப்பு கூடுகிறது. சில எதிர்பாராத திருப்புமுனைகள் கதையில் அவ்வப்போது இடம் பெறுகிறது. அதே சமயம் கிளைமாக்சில் அத்தனை திருப்பங்களைக் கொடுப்பது மிகவும் 'ஹெவியாக' இருக்கிறது.

அருள்நிதி நாயகனாக நடித்து சமீபத்தில்தான் 'டி பிளாக்' என்ற த்ரில்லர் படம் வந்தது. அடுத்த படமாக மீண்டும் ஒரு த்ரில்லர் படமாக இந்த 'தேஜாவு' படத்தில் நடித்திருக்கிறார். அண்டர் கவர் ஆபீசராக மிகவும் பொருத்தமாகவே நடித்திருக்கிறார். பேச்சு, உடல்மொழி, என இரண்டிலும் கம்பீரத்தைக் காட்டியிருக்கிறார். ஆனாலும், மாநிலத்தின் டிஜிபியிடமே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கண்டிஷனாகப் பேசுவதெல்லாம் ரொம்பவே ஓவர். கிளைமாக்சில் இவரது கதாபாத்திரம் பற்றித் தெரிய வரும் போது எதிர்பாராத அதிர்ச்சியாகவே உள்ளது.

படத்தில் கதாநாயகியாக யாருமே இல்லை. டிஜிபி ஆக மதுபாலா. 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'ரோஜா, ஜென்டில்மேன்' படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரங்களில் இவருக்குத்தான் அதிக முக்கியத்துவம். மாநிலத்தின் முதல் காவல் துறை அதிகாரி பதவி தான் டிஜிபி. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் பொருத்தமில்லாமல் இருக்கிறார் மதுபாலா. படத்தின் பெரும் மைனஸ் பாயின்ட்டாக இந்தக் கதாபாத்திரம்தான் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஒரு டிஜிபி இப்படி கூட ஏமாறுவாரா என கிளைமாக்சில் மிகப் பெரும் அதிர்ச்சி ஒன்றைக் கொடுக்கிறார்கள். இந்த வாட்சப் யுகத்தில் இப்படிக் கூட நடக்குமா ?.

எழுத்தாளராக அச்யுத் குமார், டிஜிபி உதவியாளராக சேத்தன், மதுபாலா மகளாக ஸ்முருதி வெங்கட், கான்ஸ்டபிளாக காளி வெங்கட் மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.

ஜிப்ரான் பின்னணி இசை, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு படத்தின் தரத்தை நன்றாகவே உயர்த்தி இருக்கிறது. முத்தையாவின் மிரட்டலான விஷுவல்களுக்கு தனது பின்னணி இசையில் கூடுதல் மிரட்டலைக் கொடுத்திருக்கிறார் ஜிப்ரான்.

ஆரம்பத்தில் நாம் சொன்னதைப் போல இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தால் நல்ல த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.

தேஜாவு - 55 %, இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி

 

தேஜாவு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தேஜாவு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓