டி பிளாக்,D Block
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எம்என்எம் பிலிம்ஸ்
இயக்கம் - விஜய்குமார் ராஜேந்திரன்
இசை - ரோன் எத்தன் யோஹசன்
நடிப்பு - அருள்நிதி, அவந்திகா
வெளியான தேதி - 1 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் கல்லூரிக் கதை என்றாலே கலகலப்பான காதல் கதையைத்தான் கொடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்தை ஒரு த்ரில்லர் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டில் 'வனம்' என்ற படம் வந்தது. அந்தப் படத்தின் கதையும், இந்தப் படத்தின் கதையும் ஏறக்குறைய ஒன்றுதான். அந்தப் படத்தில் பேய், இந்தப் படத்தில் சைக்கோ, அது மட்டுமே மாறியிருக்கிறது.

காட்டுக்குள் புறம் போக்கு நிலங்களையும் சேர்த்து வளைத்துப் போட்டு இஞ்சினியரிங் கல்லூரி ஒன்றைக் கட்டியிருக்கிறார்கள். அந்தக் கல்லூரியில் சில மாணவிகள் காணாமல் போய் விடுகிறார்கள். அவர்களை சிறுத்தை அடித்துப் போட்டுவிட்டதாகத்தான் கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. முதலாமாண்டு படிக்க வந்துள்ள அருள்நிதியின் வகுப்பு மாணவி அது போல இறந்து போகிறார். அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க அருள்நிதியும் அவரது நண்பர்களும் முயற்சிக்கிறார்கள். மாணவிகளைக் கடத்திக் கொல்வது ஒரு 'சைக்கோ' எனத் தெரிய வருகிறது. அவனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அறிமுக இயக்குனர் விஜய்குமார் ராஜேந்திரன் யு டியூபிலிருந்து சினிமாவுக்கு வந்திருப்பவர். யு டியூபில் நாம் எப்படி எடுத்தாலும், என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள், அது போலவே சினிமாவும்தான் என நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அமெச்சூரான காட்சிகள், சிரிப்பே வராத நகைச்சுவைக் காட்சிகள், கொஞ்சமான த்ரில்லர் என படத்தை நகர்த்தியிருக்கிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான படம் என ஆரம்பத்திலேயே சொல்கிறார்கள். அப்போதைய நாளிதழ்கள், புலனாய்வு இதழ்கள் ஆகியவற்றைப் படித்திருந்தாலேயே கோர்வையான திரைக்கதையை அமைத்திருக்கலாம்.

தேர்வு செய்து மட்டுமே படங்களில் நடிக்கும் அருள்நிதி இந்தப் படத்தை எப்படித் தேர்வு செய்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அவருக்கான ஸ்கோப் படத்தில் பெரிதாக இல்லை. கிளைமாக்சில் கூட வில்லனை அவர் அடிக்காமல், ஹாஸ்டல் மாணவிகள் அடித்து உதைப்பது போலக் காட்டி, அவருடைய ஹீரோயிசத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறார்கள். கதை 2006ல் நடப்பது போலக் காட்டியதால் நல்ல வேளையாக அப்போது 'சிங்கப் பெண்ணே' என்று பாடலை ஒலிக்கவிடவில்லை.

அருள்நிதியின் ஜோடியாக அவந்திகா, ஆரம்பத்தில் கொஞ்சம் சிரித்த முகமாக இருக்கிறார், அதன்பின் பயத்தில் அழுது வடிகிறார். காதலிப்பதைத் தவிர இவருக்கு வேறு வேலையில்லை.

எஞ்சினியரிங் கல்லூரியில் முதலாமாண்டிலேயே ஒரு மாணவர் பல வருடங்களாகப் படிக்கிறாராம் என்ற அபத்தமான கதாபாத்திரம் ஒன்றையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். அக்கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆதித்யா கதிர் நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறார். படத்தின் இயக்குனர் விஜய்குமாரும் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர். லேடீஸ் ஹாஸ்டல் வார்டனாக மிரட்டும் குரலில் பேசுவதுடன் உமா ரியாஸ் வேலை முடிந்து போகிறது. ஒரே ஒரு காட்சியில் கல்லூரி ஓனர் கருபழனியப்பன் வந்து போகிறார். சைக்கோவாக சரண் தீப், பார்வையாலேயே மிரட்டுகிறார்.

ரோன் எத்தன் யோஹன் பின்னணி இசை ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. அரவிந்த் சிங் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் மிரட்டலைத் தருகிறது.

குறும்படம், யு டியூப் ஆகியவற்றில் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். அதெல்லாம் சில நிமிடங்களுக்குள் முடிந்து போவது. ஆனால், சினிமா என்பது சில பல கோடிகள் செலவு செய்து இரண்டு மணி நேரத்திற்கு எடுக்கப்படுவது. அது பலரின் வாழ்வாதாரம். அதைப் புரிந்து கொண்டு சினிமா எடுக்க வர வேண்டும் என சில ஆர்வமுள்ள புதிய இயக்குனர்கள் புரிந்து கொள்வது அவர்களுக்கும் நல்லது, அவர்களை நம்பி வருபவர்களுக்கும் நல்லது.

D Block - Black

 

பட குழுவினர்

டி பிளாக்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓