3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்இயக்கம் - சீனு ராமசாமிஇசை - இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜாநடிப்பு - விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம்
வெளியான தேதி - 24 ஜுன் 2022
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் ஒரு மனிதனின் வாழ்வியலை மையமாக வைத்து வரும் படங்கள் அத்தி பூத்தாற் போல் அபூர்வமாகத்தான் வருகின்றன. தங்களது குடும்பத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு குடும்பத் தலைவனும் நேரம் காலம் பார்க்காமல் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்.

தன்னை விட தங்களது குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அப்பாவின் பெரும் கனவாக இருக்கும். அப்படி ஒரு பெருங்கனவுடன் இருக்கும் அப்பாவின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் அவனை எப்படி மாமனிதனாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் படம். இயக்குனர் சீனு ராமசாமி கமர்ஷியலாக எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் ராதாகிருஷ்ணன் என்ற மனிதனின் வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

தேனி அருகே பண்ணைபுரம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார் விஜய் சேதுபதி. அழகான மனைவி காயத்ரி, அன்பான மகன், மகள் என வாழ்க்கை இயல்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. தான்தான் படிக்காத தற்குறி, தனது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசையில் அடுத்த கட்டமாக பணம் சம்பாதிக்க ரியல் எஸ்டேட் தொழில் செய்ய இறங்குகிறார். அதில் அவரும் ஏமாந்து, அவரால் ஊர் மக்கள் பலரும் ஏமாந்து போகிறார்கள். பணத்தைத் திருப்பித் தர முடியாமல் ஊரை விட்டே ஓடுகிறார். தன் குடும்பத்தின் மீது அவ்வளவு பாசமாக இருக்கும் விஜய் சேதுபதி தன் குடும்பத்தைக் காப்பாற்றினாரா அல்லது கைவிட்டாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

'காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம்' படங்கள் மாதிரியான விஜய் சேதுபதியை இந்தப் படத்தில் பார்க்க முடியாது. இந்த மாதிரியான கதைகள் மீதும், கதாபாத்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்து நடிக்க விஜய் சேதுபதி மாதிரியான நாயகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதே தமிழ் சினிமாவுக்கான ஒரு நம்பிக்கை தான். மூன்றாவது மட்டுமே படித்து தற்குறியாக இருக்கும் தன்னைப் போல தன் குழந்தைகள் இருக்கக் கூடாது, அவர்கள் கான்வென்ட்டில் படிக்க வேண்டும் என மேலும்பணம் சம்பாதிக்க இறங்கி ஆசைப்பட்டு அவதிப்படுகிறார். அன்பான கணவனாக, அப்பாவாக ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு கதாபாத்திரத்திற்கேற்றபடி அளவாக, அம்சமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் நடிப்பைப் பார்த்து கண்ணீர் விடாதவர்கள் இருக்க முடியாது.

விஜய் சேதுபதியின் மனைவியாக காயத்ரி. அவருடைய இயல்பான சோக முகம் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருத்தமாக அமைந்துவிடுகிறது. தங்களை விட்டுச் சென்ற கணவனை நினைத்து கலங்கும் போது நம்மையும் கலங்க வைக்கிறார்.

விஜய் சேதுபதியின் முஸ்லிம் நண்பராக குரு சோமசுந்தரம். மதத்தை மீறிய இவர்களைப் போன்ற நட்புக்கள் இங்கு பலரும் உள்ளார்கள். அது போல விஜய் சேதுபதி கேரளா சென்றதும் அங்கு டீக்கடை நடத்தி வரும் கிறிஸ்துவப் பெண்ணாக ஜுவர் மேரி, விஜய் சேதுபதியுடன் சகோதரப் பாசத்தில் பழகுகிறார். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதங்களை மீறிய சகோதரத்துவம் இந்த மண்ணில் இருக்கிறது என்பதை இயக்குனர் சீனு ராமசாமி அழுத்தமாய் உணர்த்தியிருக்கிறார்.

இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பின்னணி இசையில் உருக வைத்திருப்பவர்கள், பாடல்களில் இன்னும் உருக வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளை அப்படியே இயல்பாய் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது சுகுமார் ஒளிப்பதிவு.

மெதுவாக நகரும் திரைக்கதை, நகைச்சுவை உள்ளிட்ட கமர்ஷியல் விஷயங்கள் படத்தில் இல்லாதது சற்றே குறையாகத் தெரிகிறது.

மாமனிதன் - பெயரைப் போல...

 

மாமனிதன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மாமனிதன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓