மாநாடு,Maanaadu

மாநாடு - பட காட்சிகள் ↓

Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வி ஹவுஸ் புரொடக்ஷன்
இயக்கம் - வெங்கட் பிரபு
இசை - யுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு - சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி
வெளியான தேதி - 25 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

தமிழ் சினிமாவில் டைம் லூப் என்ற புதிய கான்செப்ட்டை கடந்த வாரம் ஜாங்கோ படத்தில் அறிமுகப்படுத்தினார்கள். இந்த வாரம் அதே டைம் லூப் கான்செப்ட்டில் இந்த மாநாடு.

இரண்டு படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. அந்தப் படத்தில் தனது முன்னாள் மனைவியை யாரோ கொல்வதை, டைம் லூப்பில் சிக்கியுள்ள கணவர் காப்பாற்ற முயற்சிக்கிறார். இந்தப் படத்தில் மாநிலத்தின் முதல்வரை யாரோ கொல்வதை டைம் லூப்பில் சிக்கியுள்ள ஒருவர் காப்பாற்ற முயற்சிக்கிறார்.

இது வெங்கட் பிரபுவின் அரசியல் என படத்தின் டைட்டிலிலேயே போட்டு அதை நிரூபித்தும் இருக்கிறார். படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஆரம்பமாகும் பரபரப்பு, கடைசி வரை நிற்காமல் சீரான வேகத்தில், சில இடங்களில் கூடுதலான வேகத்தில் நகர்கிறது. எந்தக் காட்சியிலும் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு படத்தின் காட்சிகளுக்குள் நம்மை சிக்க வைக்கும் வித்தையைச் சரியாகச் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு. மங்காத்தா படத்திற்குப் பிறகு மீண்டும் இறங்கி அடித்திருக்கிறார்.

கோயம்புத்தூரில் நண்பனுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக துபாயில் இருந்து வருகிறார் சிம்பு. விமானத்தில் வரும் போது டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறார். ஒரு மாநாட்டில் மாநிலத்தின் முதல்வரை யாரோ சுட்டுக் கொல்கிறார்கள். எதற்காகச் சுடுகிறார்கள், யார் சுடுகிறார்கள், தனக்கு ஏன் நடந்ததே திரும்பத் திரும்ப நடக்கிறது என்பதை சிம்பு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளையில் திரைக்கதையில் வைத்திருக்கும் டிவிஸ்ட் எதிர்பாராத ஒன்று. அதற்குப் பிறகு சிம்புவுக்கும், சூர்யாவுக்கும் நடக்கும் ஏட்டிக்குப் போட்டியான விஷயங்கள் பாம்பும், கீரியுமாக, அடுத்து என்ன நடக்கும், யார் முந்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றன.

வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து விலகி ஒரு புதிய கதாபாத்திரத்தில் புதிய தோற்றத்தில் பிரஷ் ஆக நடித்திருக்கிறார் சிம்பு. படத்தில் அவருக்கு காதல் இல்லை, டூயட் இல்லை, வழக்கமான ஹீரோயிச டயலாக்குகள் இல்லை என்பதெல்லாம் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அதே சமயம் எந்த இடத்தில் அவரது கதாபாத்திரத்தை உயர்த்திக் காட்ட வேண்டுமோ, எங்கு அவருடைய இமேஜைக் கூட்ட வேண்டுமோ அதைச் சரியாகச் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு. படத்தின் கதை மீதும், தனது கதாபாத்திரத்தின் மீதும் சிம்பு எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை படத்தில் அவர் நடித்திருப்பதை வைத்தே புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு இன்வால்வ்மென்ட் காட்டியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் படத்தின் ஹீரோ சிம்புவா அல்லது எஸ்ஜே சூர்யாவா என ஆச்சரியப்பட வைக்கிறார் எஸ்ஜே சூர்யா. எத்தனை எத்தனை மாடுலேஷன், எத்தனை விதமான முகபாவங்கள் என காட்சிக்குக் காட்சி அசத்துகிறார். அதிலும் ஜீப்பில் வரும் ஒரு காட்சியில் தலைவரே...தலைவரே...தலைவரே... எனப் பேசும் போது தியேட்டரே அதிர்கிறது. உடல் மொழி, பார்வை, என தனக்குள் இருக்கும் நடிப்பின் மொத்த வித்தையையும் இந்த ஒரே படத்தில் இறக்கிவிட்டாரோ என ஆச்சரியப்பட வைக்கிறார் எஸ்ஜே சூர்யா.

படத்தின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன். சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை, ஆனாலும் படம் முழுவதும் இவர் வருவது போன்ற காட்சியமைப்புகள். கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிறார் கல்யாணி.

முதல்வராக எஸ்ஏ சந்திரசேகர், முக்கியமான மந்திரியாக ஒய்ஜி மகேந்திரன், இன்ஸ்பெக்டராக மனோஜ் பாரதி, சிம்புவின் நண்பர்களாக கருணாகரன், பிரேம்ஜி என மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கும் கூட படத்தில் முக்கியத்துவம் உண்டு.

சமீப காலத்தில் வந்த திரைப்படங்களில் பின்னணி இசைக்கென இவ்வளவு காட்சிகளை வைத்து எந்தப் படங்களும் வந்ததில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு யுவன் ஸ்கோர் செய்ய பல காட்சிகளை அமைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. தனக்கான கிரவுண்டு இது என சிக்சர் மேல் சிக்சர் அடித்திருக்கிறார் யுவன்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு கிளாஸ் ரகம். குறிப்பாக மாநாடு அரங்க காட்சிகளை அவ்வளவு யதார்த்தமாய் படமாக்கியிருக்கிறார். எடிட்டர் பிரவீனுக்குத்தான் படத்தில் அதிக வேலை. படத்தைப் பார்ப்பவர்கள் எந்தக் குழப்பமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என அவ்வளவு கவனத்துடன் எடிட் செய்திருக்கிறார்.

கதையே கற்பனைக்கு எட்டாத ஒரு கதை. அப்படியான ஒரு கதையில் தங்களுக்குத் தேவைப்படும் இடங்களில் திரைக்கதையில் சில லாஜிக் மீறல்களைச் செய்திருக்கிறார்கள். 2019ல் கதை நடப்பதாகக் காட்டுகிறார்கள். ஆனால், 2020ல் வெளிவந்த டெனட் படம் பற்றி வசனம் வருவது எப்படி?.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வித்தியாசமான த்ரில்லர் ஒன்றைப் பார்த்த திருப்தியில் ரசிகர்கள் தியேட்டர்களை விட்டு வெளியில் வருகிறார்கள்.

மாநாடு - தேடி வரும் கூட்டம்...

 

மாநாடு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மாநாடு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓