ஓ மணப்பெண்ணே,Oh Manapenne

ஓ மணப்பெண்ணே - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஏ ஸ்டுடியோஸ், எஸ்பி சினிமாஸ்
இயக்கம் - கார்த்திக் சுந்தர்
இசை - விஷால் சந்திரசேகர்
நடிப்பு - ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்
வெளியான தேதி - 22 அக்டோபர் 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தெலுங்கில் விஜய் தேவரகொன்டா, ரிதுவர்மா நடித்து வெளிவந்த பெல்லி சூப்புலு படம் தான் தமிழில் ஓ மணப்பெண்ணேவாக ரீமேக் ஆகி உள்ளது. ஏற்கெனவே, இந்தப் படத்தை ஹிந்தி, மலையாளத்தில் ரீமேக் செய்துவிட்டார்கள். தமிழில் ஐந்து வருடங்கள் கழித்து ரீமேக்காகி ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

தெலுங்கு பெல்லி சூப்புலு படத்திற்குக் கூட தமிழில் பாண்டியராஜன், பாண்டியன், ரேவதி, சீதா நடித்து 1985ல் வெளிவந்த ஆண் பாவம் படம்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வேண்டும்.

சில பல அரியர்களுடன் தேர்வு எழுதி இஞ்சினியரிங் முடித்தவர் ஹரிஷ் கல்யாண். எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு திருமணத்திற்குப் பிறகுதான் நல்ல வேலை அமையும் என அப்பா ஜோசியம் பார்த்து, பிரியா பவானி சங்கரைப் பெண் பார்க்கச் செல்கிறார்கள். அங்கு ஹரிஷும், பிரியாவும் அவர்களது முந்தைய காதலைப் பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். தனக்கு இப்போது திருமணத்தில் விருப்பமில்லை, ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்கிறார் பிரியா. ஆனால், ஹரிஷ் குடும்பத்தினர் பார்க்க வந்த பெண் பிரியா அல்ல என்பது தெரிய வருகிறது. அதன்பின் ஹரிஷுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து முடிவு செய்கிறார்கள். ஆனால், ஹரிஷின் வருங்கால மாமனார், ஹரிஷ் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிறார். இதனிடையே, பிரியா, ஹரிஷுடன் இணைந்து நடமாடும் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கிறார். இருவருக்குள்ளும் காதல் எட்டிப் பார்த்தா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்த படம் என்றாலும் இந்த 2021க்கு ஏற்றபடி ரீமேக் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர். காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

பொறுப்பில்லாத இளைஞர் கார்த்திக் ஆக ஹரிஷ் கல்யாண். இன்றைய சில இளைஞர்களை கண்முன் நிறுத்துகிறார். இந்த மாதிரி கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்கவே வேண்டாம், அப்படியே இயல்பாக இருந்தால் போதும். அதையே ஹரிஷ் இயல்பாக செய்திருக்கிறார்.

பிரியா பவானி சங்கருக்கும் பொருத்தமான ஒரு கதாபாத்திரம். எம்பிஏ முடித்த ஒரு மெச்சூர்டு பெண்ணாக அமைதியாக நடித்திருக்கிறார். ஆர்பாட்டமில்லாத அடக்கமான நடிப்பு அவரைப் பற்றியும் பேச வைக்கிறது.

ஹரிஷ், பிரியா பவானி இருவருமே காதல் காட்சிகள் இல்லாமல் தங்கள் காதலை முகபாவத்தில் வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்கிடையேயான அந்த பரபஸ்பர காதல் பாவங்கள் ரசிக்க வைக்கின்றன. அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி, காதலுக்கு மரியாதை பட கிளைமாக்சை மீண்டும் உணர்வது போல் உள்ளது.

மற்ற கதாபாத்திரங்களில் ஹரிஷ் அப்பாவாக வேணு அரவிந்த், நண்பர்களாக அன்புதாசன், அபிஷேக் குமார் , பிரியா அப்பாவாக கேஎஸ்ஜி வெங்கடேஷ் அவரவர் கதாபாத்திரங்களில் முத்திரை பதிக்கிறார்கள். பிரியா பவானி சங்கரின் முன்னாள் காதலனாக குக் வித் கோமாளி 2 அஷ்வின் நடித்திருக்கிறார். அவருக்கு யாரோ பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்கள், பொருந்தவே இல்லை.

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் விஷால் சந்திரசேகர் கவனிக்க வேண்டிய ஒருவர். பாடல்கள் ஒரு சில பழைய பாடல்களை ஞாபகப்படுத்தினாலும், பின்னணி இசையில் எப்போது, எங்கு இசைக்க வேண்டுமோ அங்கு இசைத்து படத்தின் உணர்வை நம்முள் கூடுதலாகக் கடத்துகிறார். நல்ல படங்கள் அமைந்தால் முன்னணிக்கு வர அத்தனை தகுதிகளும் உள்ளது.

ஒளிப்பதிவாளர்கள் என்றாலே பொதுவாக கதாநாயகிகளை தனியாகக் கவனித்து ஒளிப்பதிவு செய்வார்கள். இந்தப் படத்தில் படத்தின் ஆரம்பத்தில் பிரியா பவானி அறைக்குள் அவரும் ஹரிஷும் பேசும் காட்சியில் லைட்டிங், போகஸ் ஆகியவை சரியாகவே இல்லை. ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் உன்னிப்பாகக் கவனித்திருக்கலாம்.

படத்தில் அனைவரும் பேசிக் கொண்டே இருப்பது போன்ற ஒரு உணர்வு. ஒரு காட்சியில் கூட யாரும் அமைதியாக இல்லை. யாராவது ஒருவர் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சில காட்சிகளின் நீளம் அதிகம், அவற்றை வெட்டியிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருப்தியான காதல் படத்தைப் பார்த்த மகிழ்ச்சி. இன்றைய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் இந்தப் படம் பிடிக்கும்.

ஓ மணப்பெண்ணே - அழகுப் பெண்

 

ஓ மணப்பெண்ணே தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஓ மணப்பெண்ணே

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓