2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜிபி ஸ்டுடியோ பிலிம்ஸ்
இயக்கம் - ஸ்டீபன் ரங்கராஜ்
இசை - செல்வகுமார்
நடிப்பு - சந்திரஹாசன், இளவரசு, டெல்லி கணேஷ், ஷீலா மற்றும் பலர்
நேரம் - 1 மணி 42 நிமிடம்
வெளியான தேதி - 8 அக்டோபர் 2021 (சோனி லிவ் ஓடிடி)
ரேட்டிங் - 2/5

கொரோனா அலைகளின் காரணமாக ஓடிடியில் படங்கள் நேரடியாக வெளிவர ஆரம்பித்தன. அப்படி ஓடிடியில் வெளியான சில படங்களைப் பார்க்கும் போது அவை ஓடிடிக்காகவே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட படங்களோ என்ற எண்ண வைத்துள்ளன. அப்படியான ஒரு படம்தான் இந்த அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க.

50 சதவீத இருக்கைகள் அனுமதியில் தியேட்டர்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கே மக்கள் வரத் தயங்குகிறார்கள். இந்த மாதிரியான படங்கள் எல்லாம் தியேட்டர்களில் வெளிவருவதை விட இப்படி ஓடிடியில் வெளிவருவது தான் அவர்களுக்கும் சிறப்பு.

நம்மைப் பெற்றவர்களை வயதான பிறகு பார்த்துக் கொள்ள முடியாமல் சிலர் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகிறார்கள். ஆனாலும், அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீதும், பேரக் குழந்தைகள் மீதும் எந்த அளவிற்குப் பாசம் வைத்திருக்கிறார்கள் என்பது சிலருக்குப் புரியாமலேயே இருக்கிறது. அப்படியான பாசமற்ற பிள்ளைகள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். வயதான காலத்தில் அவர்கள் ஏங்குவது ஒரு ஆதரவுக்கு மட்டும்தான் என்பதை இப்படத்தின் கிளைமாக்சில் அழுத்தமாய் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ரங்கராஜ்.

வயதான பாட்டி ஷீலா தன்னுடன் முதியோர் இல்லத்தில் பழகிய தாத்தா சந்திரஹாசனுடன் ஓடிப் போய்விடுகிறார். இந்தக் காதல் ஜோடியை சேர்த்து வைக்க சந்திரஹாசனின் நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். ஓடிப் போன தனது அம்மாவை எப்படியாவது கண்டுபிடிக்க முயல்கிறார் மகன். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் கதாநாயகன் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன். தம்பியைப் போலவே இவரும் நடிக்க வந்திருந்தால் தம்பிக்கு சரியான போட்டியாக இருந்திருப்பார். கிளைமாக்சில் ஷீலாவைப் பார்த்து புருவத்தை உயர்த்தி பார்வையாலேயே பேசும் காட்சி ஒன்று போதும் அவருடைய நடிப்புக்கு. மற்ற கதாபாத்திரங்கள் நடிக்கிறார்களோ என யோசிக்க வைக்கும் போது இவர் மட்டும் யதார்த்தமாய் நடித்து நடிப்பில் மற்றவர்களை முந்துகிறார்.

சந்திரஹாசன் நண்பர்களாக டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, சண்முகசுந்தரம், ஜெயராவ். நண்பனின் காதலுக்காக உதவி காதல் ஜோடியை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என முயற்சிக்கிறார்கள். நால்வருமே நடித்துத் தள்ளுகிறார்கள். ரெஹானா, ராஜ் சேதுபதி, ஜெயச்சந்திரன் இவர்கள் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பாட்டியாக ஷீலா. ஆரம்பத்திலிருந்து அதிகம் பேசாமல் இருக்கிறார். பேச வேண்டிய கிளைமாக்ஸில் சரியாகவும், அழுத்தமாகவும் பேசியிருக்கிறார்.

காஞ்சிபுரத்தை கதைக்களமாகக் கொண்ட படம். ஒரு தெரு, இரண்டு வீடு, ஒரு போலீஸ் ஸ்டேஷன் என மிக சிம்பிளாக படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.

வயதானவர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து ஒரு படமா என்பது ஆச்சரியம்தான். கிளைமாக்சைத் தவிர மற்ற காட்சிகள் ஒரு நாடகத் தன்மையுடனேயே நகர்கிறது. அதுதான் படத்திற்கு பெரிய மைனஸ் பாயின்ட்.

அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க - அன்புக்காக...

 

பட குழுவினர்

அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓