பேய் மாமா,Pei mama

பேய் மாமா - பட காட்சிகள் ↓

Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பாக்கியம் சினிமாஸ்
இயக்கம் - ஷக்தி சிதம்பரம்
இசை - ராஜ் ஆர்யன்
நடிப்பு - யோகி பாபு, மாளவிகா மேனன்
வெளியான தேதி - 24 செப்டம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

விஜய் சேதுபதி நடித்து கடந்த வாரம் ஓடிடியில் வெளிவந்த அனபெல் சேதுபதி படத்தின் மற்றொரு வெர்ஷன்தான் இந்த பேய் மாமா. இரண்டு படத்திலுமே யோகி பாபு நடித்திருக்கிறார். இரண்டு படத்தின் கதையும் ஒன்றுதான் என்று அவருக்குத் தெரிந்திருக்காதா.....?.

சில பல நகைச்சுவைப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு நகைச்சுவை என்று ரசிர்கள் சிரித்ததை இந்தக் கால ரசிகர்கள் சிரிக்க மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். சினிமாவும், காமெடியும் மாறிவிட்டது என்பதை பல புதிய படங்களைப் பார்த்து தெரிந்து கொண்டிருந்தால் இப்படி ஒரு பேய் மாமா வை அவர் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.

ஆனைமலை அருகில் உள்ள பத்துமடை பங்களா மற்றும் அதைச் சுற்றியுள்ள 100 ஏக்கர் தோட்டத்தைச் சுற்றி நகரும் ஒரு கதை. அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்கத் துடிக்கிறார், அதை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட ஒருவர். அந்த இடத்தையும், அங்கு கிடைக்கும் மூலிகைகளையும் வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒருவர், அதை வாங்க வருபவர்களை பேய் கதைகளைக் கூறி விரட்டி அடிக்கிறார். திருட்டையே தொழிலாகக் கொண்ட யோகிபாபுவும் அவரது குடும்பத்தினரும் அந்த பேய் பங்களாவுக்குள் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது. அந்த வீட்டில் இருக்கும் பேய்கள் அந்த பங்களா பற்றியும், 100 ஏக்கர் மூலிகை பற்றியும் உண்மையைச் சொல்ல, அப்பேய்களுக்கு உதவ முன் வருகிறார் யோகிபாபு. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

யோகி பாபுதான் படத்தின் நாயகன் என்றதும் படம் முழுவதும் சிரிக்க வைப்பார் என்றால் ஏமாற்றம்தான். தனக்காக நகைச்சவை வசனங்களை எழுத அவர் தனி குழு வைத்திருக்கிறாரா இல்லையா எனத் தெரியவில்லை. சீக்கிரமே அப்படி ஒரு குழுவை உருவாக்கி கூட்டணி அமைத்தால்தான் அவருக்கு நல்லது. எப்போதோ ஒரு வசனத்தை மட்டும் நகைச்சுவையாகப் பேசிவிட்டால் போதாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

யோகி பாபு தலைமையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பேய் பங்களாவில் ஒரு குழு என்றால், கதாநாயகி மாளவிகா மேனன் தலைமையில் அவரது குடும்பத்தினர் மற்றொரு குழுவாக இருக்கிறார்கள். இரண்டு குழுவும் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இருவருமே இரண்டு வில்லன்களால் தனித்தனியாக அனுப்பப்பட்டவர்கள். யோகி பாபு, கதாநாயகி மாளவிகாவைக் காதலிப்பார் என எதிர்பார்த்தால், மாளவிகாவின் அம்மாவுடன் காதல் செய்கிறார், என்ன கொடுமை சரவணன் இது.

பங்களாவில் உள்ள பேய்களாக எம்எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ரேகா, இமான் அண்ணாச்சி, ரேஷ்மா. அவர்கள் அனைவரும் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்க்கும் குடும்பத்தினர். தங்களது கார்ப்பரேட் திட்டங்களை நிறைவேற்ற அந்தக் குடும்பம் தடையாக இருப்பதால் அவர்களை வில்லன்கள் திட்டம் போட்டு கொலை செய்கிறார்கள். அதில், கொரானோ போன்று வைரஸ், அதற்கு மருந்து என இப்போதைய பிரச்சினையைச் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.

படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் நிறைய பேர் உள்ளார்கள். காமெடி என ஸ்பூப் வகைக் காட்சிகள் என பலவற்றைச் சேர்த்து பொறுமையை சோதிக்கிறார்கள். பழைய சினிமாக்கள், விளம்பரங்கள், யு டியுப் விமர்சகர்கள் என பலரையும் கிண்டலடிக்கிறார் இயக்குனர். சினிமாவை மட்டும் யாரும் கிண்டல் செய்து விமர்சிக்கக் கூடாது, ஆனால், சினிமாவில் நாங்கள் மட்டும் பலரையும் கிண்டல் செய்து விமர்சிப்போம் என்பது எந்த ஊர் நியாயம் எனத் தெரியவில்லை.

ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். வடிவேலு பேசிய ஹிட் வசனங்களை வைத்து ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் டிவி சீரியல்களில் வருவதைப் போல இருக்கிறது.

இயற்கை மருத்துவம், கொரானோ தாக்கம், பேய் பங்களா, என சமீபத்தில் நிஜத்திலும், சினிமாவிலும், டிவியிலும், வாட்சப்களிலும் பகிரப்படும் பல விஷயங்களை வைத்தே ஒரு படத்தை உருவாக்கிவிட்டார்கள்.

பேய் மாமா - அட, போ மாமா....

 

பட குழுவினர்

பேய் மாமா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓