கோடியில் ஒருவன்,Kodiyil Oruvan

கோடியில் ஒருவன் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - ஆனந்தகிருஷ்ணன்
இசை - நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு - விஜய் ஆண்டனி, ஆத்மிகா மற்றும் பலர்
வெளியான தேதி - 17 செப்டம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 32 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு அரசியல் படம். சமீப கால அரசியல் படங்களில் ஏழைகளின் குடியிருப்புதான் கதையின் மையக் கருவாக உள்ளது. அது போலவே இந்தப் படத்திலும் அதுவே மையக் கரு.

கடந்த வாரம்தான் துக்ளக் தர்பார் என்ற இதே சாயலில் ஒரு அரசியல் படத்தைப் பார்த்தோம். இந்தப் படத்திலும் ஒரு மாவட்டத் தலைவருக்கும், ஒரு சாதாரண இளைஞனுக்கும் இடையில் நடக்கும் அரசியல் மோதலைத்தான் கதையாக வைத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்.

கம்பம் அருகில் உள்ள ஒரு மலைக் கிராமத்திலிருந்து அம்மாவின் ஆசைப்படி ஐஏஎஸ் படிக்க சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. சோழிங்கநல்லூரில் உள்ள ஏழைகளின் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வந்து தங்குகிறார். அங்கு படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு டியுஷன் எடுக்க ஆரம்பிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பகுதி கவுன்சிலரை எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்குப் பிறகு கவுன்சிலர் தேர்தலில் அவரை எதிர்த்தே போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார். மாவட்டத் தலைவரான ராமச்சந்திர ராஜுவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல். தனது வார்டை சிறந்த வார்டாக மாற்றுகிறார் விஜய் ஆண்டனி. ஆனால், அவரை அந்த கவுன்சிலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கிறார் ராமச்சந்திர ராஜு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளை வரை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடனும், சில பல நெகிழ்ச்சியான காட்சிகளுடனும் படம் நகர்கிறது. இடைவேளைக்குப் பின் வார்டு அரசியல், எம்எல்ஏ அரசியல், கட்சி அரசியல் என அரசியலை வைத்து மட்டுமே நகர்கிறது. முதல் பாதியில் இருந்த அழுத்தமான காட்சிகள் இரண்டாவது பாதியில் மிஸ் ஆகி சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது. ஒவ்வொரு போராட்டத்திலும் விஜய் ஆண்டனி வெற்றி பெற வேண்டும் என நம்மை நினைக்க வைப்பதில் இயக்குனர் தடுமாறியிருக்கிறார்.

வழக்கம் போல அமைதியான பேச்சு, அதிரடியான ஆக்ஷன் என தனது முந்தைய படங்களில் நடித்த மாதிரியான அதே டைப் கதாபாத்திரத்தில் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. அம்மா சென்டிமென்ட் அதிகமாக வொர்க் அவுட் ஆகும் என நினைத்து இந்தப் படத்திலும் அது மாதிரியான காட்சிகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார். படத்தில் அதிகம் நெகிழ வைக்கும் காட்சிகள் அவை மட்டுமே. விஜய் ஆண்டனி போல ஒவ்வொரு வார்டு கவுன்சிலரும் அவரவர் வார்டுக்கு நல்லது செய்தால் பல மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் நல்ல விதமாக மாறும் என்ற யோசனையை மனதில் விதைத்துள்ளார் இயக்குனர்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடி வேண்டும், காதலி வேண்டும் என்பதற்காக ஆத்மிகா கதாபாத்திரம். வழக்கம் போல காதலனுக்கு உதவி செய்யும் அதே காதலி, கதாநாயகி கதாபாத்திரம். விஜய் ஆண்டனியின் அம்மாவாக திவ்ய பிரபா. ஒரு தாய் நினைத்தால் அவரது பிள்ளைகளை எப்படி சக்திமிக்கவனாக வளர்க்க முடியும் என்பதற்கு அவரது கதாபாத்திரம் ஒரு உதாரணம்.

படத்தில் சில பல வில்லன்கள். மெயின் வில்லனாக கேஜிஎப் படத்தில் நடித்த ராமச்சந்திர ராஜு. ஆளும் கட்சியின் மாவட்டத் தலைவராக வந்து மிரட்டுகிறார். மாநகர மேயரையே தன் பேச்சைக் கேட்க வைக்கும் பவர்புல்லான மாவட்டத் தலைவர். இரண்டாவது வில்லனாக சூப்பர் சுப்பராயன். கவுன்சிலராக வந்து பேச்சிலேயே அதிரடி காட்டுகிறார். அவரது அடியாளாக சூரஜ் போப்ஸ். மற்றொரு அடியாளாக பாகுபலி பிரபாகர். ஹீரோவுடன் மோதி கடைசியில் அவரது அரசியல் திருப்பத்திற்குக் காரணமாகிறார். ஊரில் லோக்கல் அரசியல்வாதி வில்லனாக பூ ராம். இப்படி படத்தில் பல வில்லன்களுடன் மோதுகிறார் விஜய் ஆண்டனி.

நிவாஸ் கே பிரசன்னா, பின்னணி இசையில் அதிரடியை மட்டுமே காட்ட வேண்டும் என முயற்சித்திருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு ஏரியாவில் உதயகுமாரின் கேமரா சுழன்று சுழன்று படமாக்கியிருக்கிறது. அடிக்கடி, சாக்கடை, குப்பைத் தொட்டி எனக் காட்டு அந்த ஏரியாக்களின் நிலையை பிரதிபலிக்கிறார்கள். அங்கெல்லாம் எப்போது மாற்றம் வருமோ ?.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் ஒருவர் அரசியலுக்குள் நுழைந்து வெற்றி பெறுவது அவ்வளவு சாதாரணமல்ல. அதற்காக எப்படிப்பட்ட அரசியல்வாதிகளை, அரசியலை சமாளிக்க வேண்டும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். ஐஏஎஸ் படிப்பதற்காக சென்னை வரும் விஜய் ஆண்டனி, கலெக்டர் ஆகி ஏதோ செய்வார் என்று எதிர்பார்த்தால் அவரை கவுன்சிலர் ஆக்கிவிடுகிறார்கள். இரண்டாம் பாதியில் கொஞ்சம் சரி செய்திருந்தால் ஆயிரத்தில் ஒரு சிறந்த அரசியல் படம் ஆகியிருக்கும்.

கோடியில் ஒருவன் - அரசியல் ஆட்டம், மிதமாய்...

 

கோடியில் ஒருவன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கோடியில் ஒருவன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓