நெற்றிக்கண்,Netrikann

நெற்றிக்கண் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரவுடி பிக்சர்ஸ், கிராஸ் பிக்சர்ஸ்
இயக்கம் - மிலிந்த் ராவ்
இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
நடிப்பு - நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன்
வெளியான தேதி - 13 ஆகஸ்ட் 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 2/5


தமிழ் சினிமாவில் சைக்கோ கதைகளுக்கு எப்போது விடை கொடுப்பார்கள் என்று இந்தப் படத்தைப் பார்த்ததும் மனதில் கேள்வி எழுந்துவிட்டது.

பரீட்சை எழுதும் போது நன்றாக எழுதுபவனைப் பார்த்து காப்பியடித்தவன் அதிக மார்க் எடுப்பான், நன்றாக எழுதியவன் காப்பி அடித்தவனை விட குறைவாக மார்க் எடுப்பான். அப்படியாகிவிட்டது இந்த நெற்றிக்கண் விவகாரம்.

2011ம் ஆண்டு கொரிய மொழியில் வெளியான பிளைன்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த நெற்றிக்கண். ஆனால், அந்தப் படத்தைப் பார்த்து காப்பியடித்து எடுக்கப்பட்ட மிஷ்கின் இயக்கிய சைக்கோ படம், நெற்றிக்கண் படத்தை விடவும் சிறப்பாக முந்தைய பாராவுக்கு உதாரணம்.

சிபிஐ-ல் அதிகாரியாக இருக்கும் நயன்தாராவுக்கு ஒரு விபத்தில் கண் பார்வை போய்விடுகிறது. கண் பார்வையற்றவர்களுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு தனியாக வாழப் பழகுகிறார். ஒரு நாள் கால் டாக்சிக்காகக் காத்திருந்த போது அவரை தனது காரில் பொய் சொல்லி ஏற்றிக் கொள்கிறார் அஜ்மல். வழியில் ஒருவர் மீது அஜ்மல் கார் ஏறி விபத்து நடக்கிறது. அடிபட்ட பெண்ணை தன் டிக்கியில் எடுத்துப் போட்டுவிடுகிறார் அஜ்மல். அவரிடமிருந்து தப்பிக்கும் நயன்தாரா போலீசில் சென்று புகார் அளிக்கிறார்.

ஏற்கெனவே, சில இளம் பெண்கள் காணாமல் போன புகார் அதே ஸ்டேஷனில் இருக்கிறது. இரண்டு புகார்களுக்கும் ஏதோ ஒற்றுமை இருக்கிறது என சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். நயன்தாரா யார் என்பதைத் தெரிந்து கொண்டு அவருடைய உதவியைக் கேட்கிறார். இருவரும் களம் இறங்குகிறார்கள். காணாமல் போன பெண்களைக் கண்டுபிடித்தார்களா, அஜ்மல் அவர்களிடம் சிக்கினாரா என்பதுதான் மீதிக் கதை.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிப்பதுதான் கதையாக இருக்கும். அப்படியே அந்த குற்றவாளி யார் என்பதை முதலில் காட்டிவிட்டார்கள் என்றால், அந்தக் குற்றவாளியை எப்படி நெருங்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு இருக்கும். இந்தப் படத்தில் அப்படிக் காட்டிவிட்டாலும் எந்த பரபரப்பையும் திரைக்கதையில் வைக்கவில்லை என்பது பெரும் குறை. படத்துடன் எங்குமே ஒன்ற முடியவில்லை என்பது சொல்ல வேண்டிய ஒரு உண்மை.

நயன்தாரா தான் படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக ஜொலிக்க வேண்டும். கண்பார்வையற்றவராக இருந்தாலும் அவரை அழகாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கான கதாபாத்திரத்தின் தன்மையைக் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஐ ப்ரோ த்ரெடிங் முதல் கொண்டு தெள்ளத் தெளிவாக மேக்கப்பில் வைத்திருக்கிறார்கள். சிபிஐ அதிகாரியாக இருந்தவர், கண்பார்வை போனாலும் எதையோ சாதிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தால் அவருக்கான கதாபாத்திரத்தில் புத்திசாலித்தன போலீஸ் நடவடிக்கை எதுவுமேயில்லை. ஏதோ ஒரு காட்சியிலாவது நயன்தாரா கைத்தட்டல் வாங்கிவிடுவார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நடிப்பில் ஓரளவிற்கு காப்பாற்றுபவர் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மணிகண்டன். பணியாற்றும் ஸ்டேஷனிலேயே சக சப் இன்ஸ்பெக்டரும், இன்ஸ்பெக்டரும் அவரைக் கிண்டலடிக்கிறார்கள். எதையாவது சாதித்துக் காட்டி அவர்களிடம் பேர் வாங்க வேண்டும் என நினைப்பவர் அதை செய்தும் முடிக்கிறார். பிரமோஷனும், பாராட்டும் கிடைக்க வேண்டியவருக்கு கடைசியில் சல்யூட் மரியாதை கிடைக்கும் போது நம் கண்கள் கலங்குகிறது.

நயன்தாராவுக்கு உதவும் டெலிவரி பாயாக சரண் சக்தி. கூடப் பிறக்காத தம்பியாக கடைசி வரை கூடவே இருக்கிறார்.

வில்லனாக அஜ்மல். சைக்கோத்தனம் கொண்ட மகப்பேறு மருத்துவர். இக்கதாபாத்திரத்தில் அஜ்மல் பொருந்தவே இல்லை. வெறித்தனமாக இருக்க வேண்டிய சைக்கோ கதாபாத்திரம். அதற்கான சைகோத்தனத்தை அவர் வெளிப்படுத்தும் அளவிலான காட்சிகளும் இல்லை.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் ஏமாற்றமே. வழக்கமான படங்களைப் பார்ப்பது போலவே உள்ளது. தனித்துவமான பிரேம்களோ, லைட்டிங்குகளோ த்ரில்லர் படத்தில் இருந்தால் காட்சி வழியே அவை ஒரு பயத்தைக் கொடுத்திருக்கும். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பின்னணி இசையில், த்ரில்லர் படங்களுக்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படியான டெம்ப்லேட் இசையைக் கொடுத்திருக்கிறார்.

அஜ்மல்லை போலீஸ் பிடித்துவிட்ட பிறகே படம் முடிந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு நீட்டித்து, ஆசிரமத்தில் நடக்கும் நீண்ட நேரப் போராட்டம் ஆரம்பித்த உடனேயே சீக்கிரம் முடியுங்கப்பா என்று சொல்லத் தோன்றுகிறது.

இதற்கு முன் இம்மாதிரியான சில பல கதைகளைப் பார்த்துவிட்டோம். பிளைன்ட் படத்தின் அதிகாரப்பூர்வமில்லாத காப்பி கதையான சைக்கோவையும் பார்த்துவிட்டோம். அவற்றையெல்லாம் மீறிய ஒரு படமாக இந்த ஒரிஜனல் ரீமேக் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது கடைசியில் ஏமாற்றத்தில் தான் முடிந்துள்ளது.

நெற்றிக்கண் - குற்றம் குற்றமே...

 

நெற்றிக்கண் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நெற்றிக்கண்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓