அரண்மனை 3,Aranmanai 3

அரண்மனை 3 - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - அவ்னி சினிமேக்ஸ், பென்ஸ் மீடியா
இயக்கம் - சுந்தர் சி
இசை - சத்யா
நடிப்பு - ஆர்யா, ராஷிகண்ணா, சுந்தர் சி
வெளியான தேதி - 14 அக்டோபர் 2021
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ரஜினிகாந்த் நடிச்ச சந்திரமுகி படத்திற்கும், இந்த அரண்மனை சீரிஸ் படங்களுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் கிடையாது. சந்திரமுகி கதையின் பிளாஷ்பேக்கை மட்டும் மாற்றி மாற்றி எடுத்தால் அரண்மனை 3 என்ன அரண்மனை 333 கடந்தும் எடுக்கலாம்.

முந்தைய அரண்மனை இரண்டு பாகங்களுக்கும், இந்த மூன்றாம் பாகத்திற்கும் இருக்கும் வித்தியாசம் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே. இந்தப் படத்தில் தரமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன. அது போல பிரம்மாண்டமான அரங்குகளையும் கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டலாய் காட்டியிருக்கிறார்கள்.

இயக்குனர் சுந்தர் .சியின் வழக்கமான அதே பார்முலா, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் பயம், கொஞ்சமே கொஞ்சம் காதல் என இந்த அரண்மனை 3 நகர்கிறது.

அரண்மனையில் வசிக்கும் ஜமீன்தார் சம்பத். அவரது மகள் ராஷி கண்ணா. சிறு வயதிலிருந்தே அந்த அரண்மனையில் பேய் இருப்பதாகக் கூறி வருகிறார் ராஷி. ஆனால், அவரை வலுக்கட்டாயமாக ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார் அப்பா சம்பத். அந்த அரண்மனையில் பேய் இருப்பதைப் பற்றி அத்தையின் மருமகனான சுந்தர் சியிடம் சொல்கிறார் ராஷி. அரண்மனைக்குள் பேய் இருக்கிறதா, யார் அந்தப் பேய்(கள்), அதை விரட்டினார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் ஆர்யா என்று சொன்னார்கள். ஆனால், மொத்தமாக அவர் பத்து காட்சியில் வந்தாலே அதிகம். பத்து வரி வசனமாவது பேசியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான். அவரை விட மற்றவர்கள் படத்தில் அதிக நேரம் வருகிறார்கள். கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒரு கதாபாத்திரத்தில் ஆர்யா. எதற்காக இந்தப் படத்தில் நடித்தார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

படத்தின் நாயகி ராஷி கண்ணா. அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட ஆன்ட்ரியாவிற்கு இருக்கும் முக்கியத்துவம் அதிகம். ஆர்யாவுக்கும், ராஷிக்கும் சில பல காதல் காட்சிகளையாவது வைத்து இளைஞர்களை திருப்திப்படுத்தியிருக்கலாம். அழகான ஆன்ட்ரியாவை அழகான பேயாகக் காட்டியிருக்கிறார்கள். ஓ... இதுதான் பேயழகோ. பழி வாங்கும் உணர்ச்சியில் மிரட்டுகிறார் ஆன்ட்ரியா.

நகைச்சுவைக்கு விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி, மைனா என அரண்மனைக்குள் சிலர் சுற்றி வருகிறார்கள், அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். ஜமீன்தார் கதாபாத்திரத்தில் வில்லனாக சம்பத். மந்திரசக்தி கொண்டவராக வேலராமமூர்த்தி, ஆன்மீக சக்தி கொண்டவராக மசூதனராவ். கிளைமாக்ஸ் காட்சிகளில் இருவரும் பயன்பட்டிருக்கிறார்கள்.

சுந்தர் சி, முந்தைய பாகங்களில் என்ன செய்தாரோ அதையேதான் இந்தப் படத்தில் செய்திருக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மூன்று அரண்மனை படங்களையும் வெட்டி, ஒட்டி சேர்த்தாலே அரண்மனை 4, 5, 6.... என உருவாக்கிவிடலாம்.

சத்யாவின் பின்னணி இசை, பேய்ப் படங்களுக்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. யுகே செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் அரண்மனையின் அழகு தெரிவதை விட அதை ஆபத்துடன் தெரிய வைக்கிறது.

படத்தில் குறிப்பிட்டு யாருக்கும் முக்கியத்துவம் இல்லை. எல்லாருக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தாண்டி படத்தின் கதாநாயகன், கதாநாயகியாக இருப்பது கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே. இதுவரை வந்த பேய்ப் படங்களில் பார்த்தவற்றை விட இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அதை உருவாக்கியவர்களுக்கு தனி பாராட்டுக்கள்.

படத்தில் தேவையற்ற சில பல காட்சிகள் இருக்கின்றன. அவற்றை வெட்டி எறிந்தால் கூட படத்திற்கு எந்த சேதாராமும் இருக்காது. இரண்டரை மணி நேரப்படத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்தால் படத்திற்குத்தான் நல்லது. முந்தைய பாகங்களுடன் ஒப்பிடும் போது மூன்றாம் பாகத்தில் முத்திரை பதிக்கத் தவறிவிட்டார் சுந்தர் .சி.

ஜாலியான பேய்ப் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மட்டும் இந்தப் படம் ஓகே.

அரண்மனை 3 - கிராபிக்ஸுக்காக மட்டும்

 

அரண்மனை 3 தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அரண்மனை 3

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓