வாழ்,Vaazhl

வாழ் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - அருண் பிரபு புருஷோத்தமன்
இசை - பிரதீப்குமார்
நடிப்பு - பிரதீப், பானு பார்வதி சத்தியமூர்த்தி
வெளியான தேதி - 16 ஜுலை 2021 (ஓடிடி)
நேரம் - 1 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

அருவி என்ற முதல் படத்திலேயே யார் இந்தப் படத்தின் இயக்குனர் என ஆச்சரியப்பட வைத்தவர் அருண் பிரபு புருஷோத்தமன். இப்படியெல்லாம் கூட ஒரு படத்திற்கு கதை எழுத முடியுமா என ஆச்சரியப்பட வைத்தார்.

முதல் படத்தில் பிரமிக்க வைக்கும் சில இயக்குனர்கள் அவர்களது இரண்டாவது படத்தில் சறுக்குவது வழக்கம்தான். அது போலவே, தன்னுடைய இரண்டாவது படத்தில் சறுக்கியிருக்கிறார் அருண் பிரபு.

“வருசத்துல ஒரு முப்பது நாள், வீடு... வேலை... குடும்பம்... எல்லாத்தையும் மறந்து, தன்னந்தனியா பயணம் செய்... நாளைக்கு....நாளைக்கு...” இதுதான் இந்தப் படம். இன்று இருக்கும் இயந்திர உலகில் பலருக்கு ஒரு நீண்ட ஓய்வு, நீண்ட நிம்மதி தேவைப்படுகிறது. அது இயற்கையோடு கலந்து பயணத்தால் மட்டுமே கிடைக்கிறது என வாழ்வுக்கான நிம்மதியை வழியில் வந்த ஒரு வெளிநாட்டுப் பெண், கதாநாயகனுக்கு உணர்த்திவிட்டுச் செல்கிறார், அதுதான் இந்த வாழ்.

கருத்தாகப் பார்த்தால் சிறப்பாகத்தான் இருக்கிறது, ஆனால், அதையே படமாகக் கொடுக்கும் போது உணர்வுபூர்வமாய் நம்மைத் தாக்க வேண்டும். அப்படி எதுவும் இந்தப் படத்தில் அமையாததே இந்த வாழ்வின் வழுக்கலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.

ஐ.டி-யில் வேலை பார்க்கும் கதாநாயகன் பிரதீப். காதலி தரும் நெருக்கடிகளால் வெறுத்துப் போய் இருக்கிறார். அவரது தங்கை காதலிப்பவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென வீட்டை விட்டு ஓடிப் போகிறார். அக்காவின் டெலிவரிக்காக அம்மா, அப்பா, அமெரிக்கா போய்விட்டதால் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கிற்குப் போகிறார் பிரதீப். அங்கு தன்னை விட சில வருட மூத்தவரான அத்தை மகள் பானு பார்வதி மூர்த்தியின் அழகைப் பார்த்து மயங்கிப் போகிறார்.

திருமணமாகி, கணவர் ஐந்தாறு வயதுடைய மகன் என குடும்ப வாழ்வில் இருப்பவர் பானு. ஆனால், பானுவின் கணவர் ஒரு சைக்கோத்தனமான கொடூரன். ஒரு சந்தர்ப்பத்தில் அவனைக் கொன்று, வீட்டு பிரிட்ஜில் உடலை வைத்து விடுகிறார். தோழி ஒருத்திக்கு நாகர்கோவிலில் பணம் தர வேண்டும் என சொல்லி, மாமா மகன் பிரதீப்பை துணைக்கு அழைத்துக் கொண்டு, மகனுடன் காரில் கிளம்புகிறார். அவர்களது பயணத்தில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்த டிஜிட்டல் இந்தியா காலத்தில் 70 ஆயிரம் ரூபாயை உலகத்தின் எந்த மூலைக்கும் நொடியில் அனுப்பிவிடலாம். ஆனால், கதாநாயகி டிஜிட்டல் இந்தியாவையும் மறந்துவிட்டார். ஐ.டியில் வேலை பார்க்கும் படத்தின் கதாநாயகன் கூட அதைப் பற்றிக் கேட்கவில்லை என்பது பெரும் நெருடல். படத்தின் திரைக்கதையில் எங்கும் பெரிதாக டுவிஸ்ட்டுகளை எல்லாம் யோசிக்கவில்லை இயக்குனர். அருவி பார்மேட்டிலேயே திரைக்கதை அப்படியே போய்க் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் ஒரே இடத்தில் நகரும், இந்தப் படத்தில் நகர்ந்து கொண்டேயிருக்கிறது, அதுதான் வித்தியாசம்.

கதை, திரைக்கதையில் கோட்டைவிட்டாலும், சில பல அறிமுகங்களை வைத்துக் கொண்டு அவர்களிடமிருந்து இயல்பான நடிப்பை வாங்கியிருப்பதற்காக இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். படத்தின் கதாநாயகன் பிரதீப், இதற்கு முன் சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்தை மகள் மூத்தவளாக இருந்தாலும், திருமணமாகி ஒரு மகனுக்கு அம்மாவாக இருந்தாலும் கள்ளக் காதல் பார்வையில், ஒரு அப்பாவியிடமிருந்து அடப்பாவி நடிப்பு வெளிப்படுகிறது.

அருவி அதிதிபாலன் சாயலிலேயே இருக்கிறார் இந்த வாழ் படத்தின் அறிமுக நாயகி பானு பார்வதிமூர்த்தி. தன் மகனை கணவன் அடித்து துன்புறுத்துவதைப் பொறுக்காமல் அவரைக் கொலை செய்யும் அளவிற்கு ஆவேசத்துடன் நடந்து கொள்கிறார். அதே சமயம், தனக்கு வேலை ஆக வேண்டும் என்பதற்காக மாமா மகன் பிரதீப்பிடம் கொஞ்சம் கிறக்கமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்கிறார். ஆனாலும், அந்த எதிர்பாராத லிப் டு லிப் முத்தக் காட்சி, ஓடிடி என்பதால் தப்பித்துவிட்டது போலிருக்கிறது. தமிழ் இயக்குனர்கள் சிலரிடம் கள்ளக் காதல் மீதான காதல் வரவர அதிகமாகிக் கொண்டே போகிறது, நோட் பண்ணுங்க சென்சார் ஆபீசர்ஸ்.

படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் மனப்பிறழ்வுடனே இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரதீப்பின் அம்மா ஸ்ரீஜா, மகள் காதலிப்பது தெரிப்பது அவரை துடைப்பத்தால் அடிக்கும் அளவிற்கு கோபக்காரர். கட்டினால் காதலனைத்தான் கட்டுவேன் என அழுது ஆர்பாட்டம் செய்யும் தங்கையாக மயூரா. கதாநாயகி பானுவின் கணவர் ஒரு சைக்கோ, அவரது மகனோ தெரபி வகுப்பு செல்லுமளவிற்கு ஓவர் ஆக்டிவ் குழந்தை. இக்கதாபாத்திரத்தில் ஆரவ் கோகுல்நாத் சுட்டித்தனமாக நடித்திருக்கிறான்.

கதாநாயகன் பிரதீப்பிற்கு வாழ்வின் சுவாரசியத்தை, இனிமையைப் புரிய வைக்கும் ஒரு கதாநாயகியாக திவா. ஒரு சண்டைக் காட்சியில் கூட அசத்துகிறார். தமிழ்நாட்டில் இப்படியும் பெண்கள் உலாத்துகிறார்களா என்பது ஆச்சரியமாக உள்ளது.

பயணக் கதை என்பதால் ஒளிப்பதிவு மிக மிக முக்கியம். தமிழ்நாட்டில் சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலும், பப்புவா நியூ கினியா என சில வெளிநாடுகளிலும் ஷெல்லி கலிஸ்ட்-டின் கேமரா இயற்கையை அற்புதமாகப் பதிவு செய்துள்ளது. பிரதீப்குமார் பின்னணி இசை ஓகே ரகம்.

படத்தின் கடைசி சில நிமிடங்கள் நம்மை ஏதோ ஒரு விதத்தில் கட்டிப் போடுகிறது. அதற்காக ஒன்றே முக்கால் மணி நேரத்தை கடினப்பட்டு நகர்த்த வேண்டியிருக்கிறது. இயக்குனர் அருண் பிரபு அதையும் கவனித்திருக்கலாம்.

வாழ் - வாழ்வின் வெளிச்ச ஒளி, கீற்றாக மட்டுமே...

 

வாழ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வாழ்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓