மிருகா,Mirugaa

மிருகா - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஜாகுவார் ஸ்டுடியோஸ்
இயக்கம் - பார்த்திபன்
இசை - அருள்தேவ்
நடிப்பு - ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி
வெளியான தேதி - 5 மார்ச் 2021
நேரம் - 2 மணி நேரம் 10 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் பிளாக்மெயில் திரைப்படங்களைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் காலத்தில் இப்படியான படங்கள் அடிக்கடி வரும். இந்த மிருகா படமும் பிளாக்மெயில் படம்தான், அதை இந்தக் காலத்திற்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குழந்தையுடன் இருக்கும் ஆதரவற்ற பணக்கார வீட்டுப் பெண்களைத் தேடிச்சென்று அவர்களுடன் பழகி, அவர்களைத் திருமணம் செய்து கொண்டு, பின் தன்னைப் பற்றிய உண்மை தெரிய வரும் போது அவர்களைக் கொலை செய்துவிட்டு, அவர்களது பணம், நகைகளுடன் தப்பிப்பதைத் தொழிலாக வைத்திருப்பவர் ஸ்ரீகாந்த். கோவாவில் அப்படி ஒரு குடும்பத்தை பாம் வைத்து தீக்கிரையாக்கிவிட்டு, ஊட்டிக்குச் செல்கிறார். அங்கு டீ எஸ்டேட் முதலாளியான ராய் லட்சுமியைச் சந்தித்து நல்ல பெயர் வாங்கி, அங்கேயே வேலைக்குச் சேர்ந்து, அவரையே திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீகாந்த் பற்றிய உண்மைகள் ராய் லட்சுமிக்குத் தெரிய வருகிறது. அவரிடமிருந்து தன்னையும், தன் குழந்தை, தங்கையைக் காப்பாற்றப் போராடுகிறார். அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் கிளைமாக்ஸ்.

படத்திற்கு மிருகா எனத் தலைப்பை வைத்துவிட்டு அதற்குப் பொருத்தமாக கடைசியில் ஒரு வசனத்தையும் மறக்காமல் சேர்த்திருக்கிறார் இயக்குனர் பார்த்திபன். இப்படியான பிளாக்மெயில் கதைகளில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு திரைக்கதையில் இருக்க வேண்டும். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அது பற்றிய எந்த யூகமும் வரக் கூடாது. ஆனால், இப்படத்தில் இப்படித்தான் கதை நகரும் என யூகிக்க முடிவது படத்தின் மைனஸ் பாயின்ட். கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியும் என தெரிந்துவிடுவதால் கடைசி 20 நிமிடங்களில் நமக்கு எந்த பரபரப்பும் இல்லை.

ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த். நடிப்பில் முன்பை விட முன்னேற்றம் கண்டிருக்கிறார். வசன உச்சரிப்பிலும் மாற்றம் தெரிகிறது. பணத்தாசை பிடித்தவர், கொலைகாரர் என்பதை அவரது தோற்றத்திலும், உடல்மொழியிலும் காட்ட முயற்சி செய்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்.

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு கதாநாயகியாக ராய் லட்சமி நடித்துள்ள படம். பொதுவாக இவர் தான் கிளாமராக நடிப்பார். ஆனால், இந்தப் படத்தில் டீ எஸ்டேட் முதலாளியாக கண்ணியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் வெளிப்படுத்தாத கிளாமரை அவரது தங்கைகளாக நடித்திருக்கும் இருவர் போட்டி போட்டு வெளிப்படுத்தி உள்ளார்கள்.

கிளைமாக்ஸ் நெருங்கம் போது அசிஸ்டென்ட் கமிஷனராக தேவ் கில் வருகிறார். எதையோ செய்து ஸ்ரீகாந்தைப் பிடிக்கப் போகிறார் என்று பார்த்தால் பரிதாபமாக கொல்லப்படுகிறார். மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றியே அதிக காட்சிகள் நகர்வதால் போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. மற்ற கதாபாத்திரங்களுக்கும், நகைச்சுவைக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

படத்தின் கிளைமாக்சுக்காகவே புலி ஒன்றை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். கிராபிக்ஸ் புலியை முடிந்த அளவிற்கு நிஜ புலி போல காட்டியிருக்கிறார்கள். கிளைமாக்சில் அந்த ஒரு வீட்டிற்குள் புலிக்கும், ராய் லட்சுமிக்கும் நடக்கும் போராட்டம்...போய்க் கொண்டே இருக்கிறது.

அருள் தேவ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் கூட இல்லை. ஊட்டிதான் கதைக்களம் என்பதால் பகலில் அதன் அழகையும், இருட்டில் அதன் மிரட்டலையும் தன் ஒளிப்பதிவில் கொண்டு வந்துள்ளார் எம்வி பன்னீர்செல்வம்.

ஒரு சீரியல் கில்லர் கதை என்றால் எப்படி ஒரு பரபரப்பு இருக்க வேண்டும். நாடு முழுவதும் அத்தனை கொலைகளைச் செய்த ஸ்ரீகாந்தை ஒரு மாநில போலீஸ் கூடவா தேடாமல் இருக்கிறது. ஒரு த்ரில்லர் கதையில் புலியைக் கொண்டு வர யோசித்தவர்கள் இன்னும் புதுவிதமான காட்சிகளை யோசித்திருந்தால் இந்த மிருகா மிரட்டலாக இருந்திருக்கும்.

மிருகா - மிஸ்டு

 

மிருகா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மிருகா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓