சங்கத்தலைவன்,Sangathalaivan

சங்கத்தலைவன் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கருணாஸ், சமுத்திரக்கனி, சுனுலட்சுமி
தயாரிப்பு - உதய் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - மணிமாறன்
இசை - ராபர்ட் சற்குணம்
வெளியான தேதி - 26 பிப்வரரி 2021
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த கதைகள், சொல்ல வந்த விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லும் கதைகள் வந்து நீண்ட நாட்களாகிவிட்டது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கட்சியின் மறைமுகப் பிரச்சாரப் படமாகத்தான் கொடுத்திருக்கிறார்கள் எனத் தாராளமாகச் சொல்லலாம்.

படத்தின் கதைக்குப் பொருத்தமான ஒரு தலைப்பைத் தேர்வு செய்துள்ளார்கள். அதிலிருந்தே படம் எந்த மாதிரியான படம் என்பது படம் பார்ப்பதற்கு முன்னரே புரிய வரும்.

தானுண்டு, தன் வேலையுண்டு, தான் வேலை பார்க்கும் விசைத்தறி கம்பெனி முதலாளிக்குக் காட்டும் விசுவாசமுண்டு என தறி ஓட்டுபவர் கருணாஸ். உடன் வேலை பார்க்கும் ஒரு பெண் மிஷினில் சிக்கியதால் தனது கையை இழக்கிறார். அந்தப் பெண்ணிற்கு முதலாளி மாரிமுத்து நியாயமான நஷ்டத் தொகை கொடுக்காமல் ஏமாற்றுகிறார் என்பது கருணாஸுக்குப் புரிய வருகிறது. அதனால், விசைத்தறி தொழிலளார் சங்கத்தின் தலைவரான சமுத்திரக்கனியிடம் நடந்ததைச் சொல்கிறார். அவரது முயற்சியால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சரியான நஷ்ட ஈட்டுத் தொகையை வாங்கித் தருகிறார். இதனால், கொஞ்சம் கொஞ்சமாக சங்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டு சங்கத்திற்காக வேலை செய்ய ஆரம்பிக்கிறார் கருணாஸ். தொழிலாளர்களுக்கு போனஸ் வாங்கவும், ஊதிய உயர்வைப் பெறவும் போராட்டத்தில் இறங்குகிறார்கள். அதன்பின் பல பிரச்சினைகள் வருகின்றன. சமுத்திரக்கனி சிறைக்குச் செல்ல நேரிட, போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பு கருணாஸுக்கு வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் மணிமாறன் இடைவேளை வரையிலான கதை யதார்த்தமான காட்சிகளுடன் நகர்கிறது. கருணாஸ், சுனு லட்சுமி இடையிலான காதல், கருணாஸ் குடும்பப் பிரச்சினை, உடன் வேலை பார்க்கும் பெண் மீதான பாசம் என நெகிழ வைக்கும் உணர்வு ரீதியான படமாக இருக்கிறது. அதற்குப் பிறகு சங்கத்தின் பாதையில் திரும்பியதும் திரைக்கதை தடம் மாறுகிறது. தொழிற்சங்கங்கள், விசைத்தறி முதலாளிகளைப் பற்றிய படமாக மாறிவிடுகிறது. அவர்களது பிரச்சினைகள், போராட்டங்கள் என நகர்ந்து கிளைமாக்சுக்கு முன்பாக மீண்டும் நெகிழ வைத்து முடிவு சினிமாத்தனமாக அமைந்து சராசரி ரசிகனுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியிருக்கிறது படம்.

ஒரு கொலைக்கு பழிக்குப் பழி கொலைதான் தீர்வு என சொல்வது ஏற்கெனவே பல முறை பார்த்துப் பழகிய பழி வாங்கும் படமாக இந்தப் படத்தை மாற்றிவிட்டது. இடைவேளைக்குப் பிந்தைய படம் சங்கத்து ஆட்களுக்கு வேண்டுமானால் பிடிக்கலாம், சராசரி ரசிகனுக்குப் பிடிக்க வாய்ப்பில்லை. சங்கத்தலைவன் எனப் பெயர் வைத்துவிட்டதால் முழுக்க முழுக்க சங்கத்திற்கான படமாகவே எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் கதாநாயகன் கருணாஸ் தான். இதற்கு முன்பு அவர் நாயகனாக நடித்த படங்களை விட இந்தப் படம் அவருக்கு நடிப்பதற்கு முழுமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த படமாக அமைந்திருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு அவரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் முதலாளிக்கு அவ்வளவு விசுவாசமாக இருக்கிறார். சக பெண் தொழிலாளிகள் மீது பாசமாக இருக்கிறார். தன்னைக் காதலிக்கும் சுனு லட்சுமிக்கு யதார்த்தத்தை சொல்லிப் புரிய வைக்கிறார். அப்பாவை விட்டுப் பிரிந்து வந்தவர் தன் தங்கைக்காக அப்பாவிடம் நியாயமாகச் சண்டை போடுகிறார். பின்னர் சங்கத்தில் இணைந்து சக தொழிலாளிகளுக்கு நியாயம் கிடைக்கப் போராடுகிறார். இப்படி பல உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரத்தில் கருணாஸ் நடிப்பு பாஸ் மார்க்குக்கும் மேல் அமைந்திருக்கிறது.

சமுத்திரக்கனியை படத்தின் இரண்டாவது நாயகன் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆரம்பத்தில் சங்கத்தலைவனாக இருந்து பின் தன் பதவியை கருணாஸுக்கு விட்டுக் கொடுக்கிறார். யாருக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் நேரடியாக களத்தில் இறங்குகிறார். சாதாரணமாகவே சமுத்திரக்கனி நடிக்கும் படங்களில் அவருடைய அட்வைஸ் வசனம் மீம்ஸ் போடும் அளவிற்கு புகழ் பெற்றது. இந்தப் படத்தில் சங்கத்தலைவன் வேறு என்பதால் கொள்கைப் பேச்சுக்களை முழக்கமாகவே நடித்துத் தள்ளுகிறார். படம் முழுவதுமே சிவப்பு சட்டை அல்லது கருப்பு சட்டை அணிந்தே வருகிறார்.

படத்தின் நாயகியாக சுனு லட்சுமி. கருணாஸைக் காதலிக்கும் சக பெண் தொழிலாளி. விசைத்தறி முதலாளி மாரிமுத்துவின் அண்ணன் மகளாக நடித்திருக்கிறார். முதலாளி தனது சித்தப்பாதான் என்றாலும் தங்களது அப்பாவை ஏமாற்றியவர் என்ற கோபம். சித்தப்பா, அண்ணன் எதிர்ப்பை மீறி கருணாஸைக் காதலிக்கிறார். கிராமத்துப் பெண்ணை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

சமுத்திரக்கனி மனைவியாக டிவி தொகுப்பாளர் ரம்யா சுப்பிரமணியன். கிராமத்து இளம் அம்மா கதாபாத்திரம். அவ்வளவு சிவப்பாக கிராமத்துப் பெண் ஒருவர் இருப்பாரா என்ற கேள்வி எழுந்தாலும் தனது யதார்த்த நடிப்பில் அந்தக் குறையை மறக்கடித்துவிடுகிறார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரம் விசைத்தறி முதலாளியாக நடித்திருக்கும் மாரிமுத்து. அந்தக் கதாபாத்திரத்தில் என்னவெல்லாம் வில்லத்தனத்தை காட்ட முடியுமோ அதை அப்படியே யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் மேக்கிங்கில் பெரிய வித்தியாசத்தைக் காட்டவில்லை. சராசரி படத்திற்கான அளவிலேயே இருக்கிறது.

கம்யூனிசப் பிரச்சாரம் இடைவேளைக்குப் பின் அதிகமாக இருக்கிறது. கிளைமாக்சில் பழிக்குப் பழி கொலை என்பதும் சினிமாத்தனமாகவும், தீவிரவாதமாகவும் இருப்பது ஒரு யதார்த்தப் படமாக வர வேண்டியதை அப்படியே மாற்றிவிட்டது.

சங்கத்தலைவன் - பிரச்சாரம்

 

பட குழுவினர்

சங்கத்தலைவன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓