அந்தகாரம்,Andhaghaaram

அந்தகாரம் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், குமார் நடராஜன், பூஜா, மீஷா கோஷல்
தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோ, ஓ 2 பிக்சர்ஸ்
இயக்கம் - விக்னராஜன்
இசை - பிரதீப்குமார்
வெளியான தேதி - 24 நவம்பர் 2020
நேரம் - 2 மணி நேரம் 51 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரு திரைப்படம் எதற்காக உருவாக்கப்படுகிறது ?. சராசரி ரசிகனுக்கும் புரிய விதத்தில் இருக்கும் போது மட்டுமே அப்படம் உருவாக்கப்பட்டதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

தான் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் ஒரே படத்தில் இறக்கி, படம் பார்க்கும் ரசிகனை குழப்பு, குழப்பு என்று குழப்பினால் என்ன சொல்வது?. இப்படத்தின் இயக்குனர் விக்னராஜன் ஒரு சுவாரசியமான கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அதை அனைவருக்கும் புரியும் விதத்தில் திரைக்கதை அமைத்துக் கொடுக்காமல் வித்தியாசமாக சொல்கிறோம் என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பதை நாம் யோசித்து யோசித்து பார்க்க வேண்டி இருப்பதுதான் படத்தின் பெரும் பிரச்சினை. கிளைமாக்ஸுக்கு சற்று முன்பாகத்தான் என்ன நடக்கிறது என்பதே புரிய வருகிறது. தெளிவான திரைக்கதையுடன் கொடுத்திருந்தாலே இன்னும் நன்றாக ரசித்திருந்திருக்க முடியுமே ?.

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் கதைதான் இந்தப் படம். கண் பார்வையற்ற வினோத் கிஷன், அரசு லைப்ரரியில் வேலை பார்க்கிறார். அறுவை சிகிச்சைக்காக அவருக்கு பணம் தேவைப்படுகிறது. கிரிக்கெட் கோச்சாக இருக்கும் அர்ஜுன் தாஸுக்கு அடிக்கடி போனில் யாரோ ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பயமுறுத்துகிறார். மனநல மருத்துவராக இருக்கும் குமார் நடராஜன், அவருடைய நோயாளி ஒருவரால் சுடப்பட்டு மருத்துவமனை சிகிச்சையிலிருந்து மீண்டு வருகிறார். மீண்டும் டாக்டர் தொழில் பார்க்க அவருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தன் நலத்தை நிரூபித்து மீண்டும் பணி செய்ய விரும்புகிறார். இவர்கள் மூவரும் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள், இவர்களை சேர்க்கும் விஷயம் எது என்பதுதான் படத்தின் மொத்த திரைக்கதை.

நடிப்பைப் பொறுத்தவரையில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் சரி, துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் சரி, அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களுக்குத் தகுந்தபடியான வீடுகள், பின்னணி, அதற்கான லைட்டிங் என தொழில்நுட்பக் குழுவினரும் சேர்ந்து இயக்குனருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

அதே சமயம், படத்தின் நீளம், குழப்பமான திரைக்கதை நம் பொறுமையை அதிகமாகவே சோதிக்கிறது.

பார்வையற்ற இளைஞராக வினோத் கிஷன். இதற்கு முன்பு சில படங்களில் சிறிய வில்லன் கதாபாத்திரங்களில் தன்னை கவனிக்க வைத்தவர். இந்தப் படத்தில் ஒரு நாயகனாக உயர்ந்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

கைதி படத்தில் சிறிய வில்லனாக யார் எனக் கேட்கப்பட்டவர் அர்ஜுன் தாஸ். இந்தப் படத்தில் அவருக்கும் கதாநாயகனாக உயர்வு. அடிக்கடி வரும் தொலைபேசி அழைப்பு அவரை எப்படி குழப்புகிறது, என்பதை மனநலம் பாதிக்கப்படுபவர் எப்படியெல்லாம் பிஹேவ் செய்வார் என்பதை சரியாகப் புரிய வைக்கிறார்.

ஒரு பக்கம் வினோத் கிஷன், மறுபக்கம் அர்ஜுன் கொஞ்சம் கூடுதலாகவே நடித்துத் தள்ள, இன்னொரு பக்கம் எந்த அலட்டலும் இல்லாமல் ஸ்கோர் செய்கிறார் குமார் நடராஜன். தன்னிடம் சிகிச்சை பெற வரும் மனநோயாளிகளை அவர் எதற்குப் பயன்படுத்துகிறார் என்பதை ஒரு கட்டத்தில் சொல்லியிருந்தால் நமக்கும் கொஞ்சம் குழப்பம் வந்திருக்காது. கிளைமாக்ஸ் வரை அதைக் கொண்டு போகாமல் இடைவேளைக்குப் பிறகாவது உடனடியாக சொல்லியிருந்திருக்கலாம்.

பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் இருவரையும் படத்தின் நாயகிகள் என்று சொல்வதை விட இரண்டு முக்கிய பெண் கதாபாத்திரங்கள் என்று சொல்லலாம். ஏறக்குறைய ஒரே முகஜாடையில் இருக்கும் இவர்களை இக்கதாபாத்திரங்களில் நடிக்கத் தேர்ந்தெடுத்ததும் கூட நம்மை வேண்டுமென்றே குழப்புவதற்குத்தான் போலிருக்கிறது.

ஒரே விதமான மேக்கப், ஹேர்ஸ்டைல் என இருவரும் வரும் போது, யார் வினோத்தின் டீச்சர், யார் அர்ஜுனின் காதலி என்ற குழப்பம் வருகிறது. கதைப்படி பார்க்கும் போது மீஷாவை விட பூஜாவுக்குக் கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.

வினோத்தின் மாமாவா வரும் தியேட்டர் ஓனர், வினோத்தை ஏமாற்றும் ரியல் எஸ்டேட் புரோக்கர், குமாரின் நண்பராக வரும் டாக்டர் ஆகியோரும் கூட அவரவர் கதாபாத்திரங்களை கவனிக்க வைத்துவிட்டார்கள்.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே இது என்ன மாதிரியான ஒரு படம் என நம்மை யூகிக்க வைக்கும் அளவிற்கு லைட்டிங் அமைத்திருக்கிறார் எட்வின் சாகே. பிரதீப் குமாரின் பின்னணி இசையும் காட்சிகளின் பரபரப்பை கூட்டுகிறது.

நல்ல முயற்சி என்று சொன்னாலும் அதை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லியிருந்தால் அந்தகாரம், அடடா என்று சொல்ல வைத்திருக்கும்.

அந்தகாரம் - ஒளி குறைவுடன்...

 

பட குழுவினர்

அந்தகாரம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓