மிஷன் மங்கள் (ஹிந்தி),Mission Mangal

மிஷன் மங்கள் (ஹிந்தி) - பட காட்சிகள் ↓

Advertisement
4

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அக்ஷய்குமார், வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி
தயாரிப்பு - கேப் ஆப் குட் பிலிம்ஸ், ஹோப் புரொடக்ஷன்ஸ், பாக்ஸ்ஸ்டார் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஜெகன் சக்தி
இசை - அமித் திரிவேதி, தனிஷ்க் பாக்சி
வெளியான தேதி - 15 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் - 4/5

மிஷன் மங்கள் மாதிரியான படங்களைப் பார்க்கும் போது இது போன்ற படங்கள் தமிழில் வரவில்லையே என நிறையவே ஏங்க வைக்கிறது.

நம் வாழ்க்கையிலேயே, நமக்குத் தெரிந்த விதத்திலேயே பல நிஜ நிகழ்வுகள் இன்னும் திரைப்படங்களாக எடுக்கப்படாமல் இருக்கிறது. 2013ம் ஆண்டில் விண்வெளி அறிவியலில் இந்தியா படைத்த சாதனையைக் கண்டு இந்த உலகமே வியந்தது.

குறைந்த செலவில் தன்னுடைய முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலனை அனுப்பி தனிப் பெரும் சாதனையைப் படைத்தது நம் நாடு. அந்த அற்புத சாதனையை நிகழ்த்திய குழுவில் முக்கிய விஞ்ஞானிகளாக இருந்தது பெண்கள் தான். அவர்களின் அர்ப்பணிப்பை அப்படியே உள்ளது உள்ளபடி அற்புதமான படமாக படைத்திருக்கிறது மிஷன் மங்கள் படக்குழு.

இப்படத்தை இயக்கிய ஜெகன் சக்தி அறிமுக இயக்குனர், அதுவும் அவர் ஒரு தமிழர் என்பது நமக்குப் பெருமையான விஷயம். படத்தின் திரைக்கதையில் பங்குபெற்ற பால்கி, படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் ஆகியோரும் தமிழர்கள்.

தமிழில் இம்மாதிரியான படங்கள் வரவில்லை என்றாலும் இந்திய அளவில் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் தமிழர்கள் முக்கிய பங்காற்றியிருப்பது நமக்குப் பெருமையே.

அக்ஷய் குமார் தலைமையிலும், அவருக்கு அடுத்த இடத்தில் வித்யாபாலனும் இருக்கும் குழுவினர் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலனை அனுப்ப பலத்த போராட்டத்திற்குப் பிறகு அனுமதி வாங்குகிறார்கள். மிகவும் குறைந்த பட்ஜெட்தான் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும் அவர்கள் குழுவில் பணியாற்ற அனுபவமில்லாதவர்கள்தான் நியமிக்கப்படுகிறார்கள். அவ்வளவு சவாலையும் மீறி அந்தக் குழு எப்படி விண்கலனை வெற்றிகரமாக அனுப்பியது என்பதுதான் மிஷன் மங்கள் படத்தின் கதை.

அக்ஷய் குமார், எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னை அப்படியே பொருத்திக் கொள்ளும் ஒரு சிறந்த நடிகர். இதற்கு முன்பும் பேட்மேன், டாய்லெட் உள்ளிட்ட சில படங்களில் இப்படித்தான் நடித்திருப்பார். இந்தப் படத்தில் புத்திசாலியான விஞ்ஞானி, அதே சமயம் ஒரு கர்வம் உள்ளவர். அவரை எதிர்க்கும் சக மேலதிகாரியை துச்சமாக எதிர்கொள்ளுபவர் என விஞ்ஞானி ராகேஷ் தவான் கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் எல்லாம் நடந்தது வித்யாபாலனால் தான் எனச் சொல்லி அவர் காலில் விழுகிறார். இப்படிப்பட்ட படங்களிலும் ஹிந்தி ஹீரோக்கள் நடித்துப் பெயர் வாங்குகிறார்கள் என்பதை நமது தமிழ் ஹீரோக்கள் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

வித்யாபாலன் அறிமுகக் காட்சியே அசத்தலானது. வீட்டில் பூஜை செய்வதில் ஆரம்பித்து, கணவருக்கு, மாமனாருக்கு, மகனுக்கு, மகளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டு, காரை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகப் போகிறார். ஏதோ, கடைக்குத்தான் போகிறார் என நாம் நினைத்தால் இஸ்ரோவில் பணியாற்றி புரொஜக்ட் அதிகாரி அவர். அப்படிப்பட்ட குடும்பத் தலைவிகளும்தான் நமது சாதனைப் பயணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் என்பதை அறியும் போது அவர்கள் மீது நமக்கு தனி மரியாதை வந்துவிடுகிறது.

சக விஞ்ஞானிகளாக சோனாக்ஷி சின்ஹா, டாப்சி, நித்யா மேனன், கிர்த்தி குல்ஹரி என அந்த இளம் சாதனை விஞ்ஞானிகளும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. ஷர்மான் ஜோசி, தத்தாத்ரேயா ஆகியோரும் மிக இயல்பாக நடித்துள்ளார்கள். சோனாக்ஷியைப் பார்த்து ஷர்மான் காதல் கொள்வதும், கிர்த்தியின் முன்னாள் கணவரை பொதுமக்களிடம் தத்தாத்ரேயா அடி வாங்க வைக்கும் காட்சியும் கலகலப்பு.

வித்யாபாலனின் கணவராக சஞ்சய் கபூர். அவர்களது மகன் முஸ்லிம் மதத்தின் மீது ஆர்வத்துடன் இருக்க, மகனுக்கு அதை படத்தை நம்பாதே பவரை நம்பு புரிய வைக்கும் வித்யாவின் அணுகுமுறை சிம்ப்ளி சூப்பர்ப்.

இஸ்ரோ அலுவலகத்தின் அரங்க அமைப்பும், அதில் ரவிவர்மனின் ஒளிப்பதிவும் நம்மை அதற்குள்ளேயே அழைத்துச் செல்கிறது. அறிவியல் சார்ந்த ஒரு படத்தில் ஒளியின் அமைப்பு எப்படி ஈர்க்க வேண்டும் என்பதற்கு ரவிவர்மன் அமைத்திருக்கும் லைட்டிங் அசத்தல்.

கொஞ்சம் டிரை ஆக இருக்கக் கூடாது என்பதற்காக வித்யாபாலன் மகன், மகள் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், ரயிலில் குடித்துவிட்டு சண்டை போடும் சில காட்சிகளையும் திணித்திருக்கிறார்கள். அவற்றைத் தவிர்த்திருந்தாலும் தப்பில்லை.

அமித் திரிவேதி, தனிஷ்க் பாக்சி இசையமைத்திருக்கிறார்கள். மூன்றே பாடல்கள்தான் படத்தில்.

படத்தின் முடிவில் மோடி பேசுவது போல காட்சியை அமைத்திருக்கிறார்கள். அதே போல 2012ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அந்த திட்டத்தை அறிவித்தார் என்பதையும் சேர்த்திருக்கலாம்.

மிஷன் மங்கள் - சக்சஸ்

 

பட குழுவினர்

மிஷன் மங்கள் (ஹிந்தி)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

அக்ஷ்ய் குமார்

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷ்ய் குமார். 1967ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். ராஜீவ் ஹரி ஓம் பாத்தியா இவரது இயற்பெயர். சினிமாவுக்காக அக்ஷ்ய் குமாராக மாறினார். சவுகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அக்ஷ்ய். தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அக்ஷ்ய். ஆக்ஷ்ன், காமெடி என பல்வேறு ரோல்களில் அசத்தி வருகிறார் அக்ஷ்ய். சமீபத்திய இவரது படங்கள் பெரும்பாலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விமர்சனம் ↓