தும்பா,Thumbaa

தும்பா - பட காட்சிகள் ↓

தும்பா - சினி விழா ↓

Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - தீனா, தர்ஷன், கீர்த்தி பாண்டியன்
தயாரிப்பு - ரீகல் ரீல்ஸ், ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்எல்வி
இயக்கம் - ஹரிஷ் ராம்
இசை - அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி
வெளியான தேதி - 21 ஜுன் 2019
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

காடு, அதைச் சார்ந்த பகுதிகள் என அவற்றை மையப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்கள் மிக மிகக் குறைவு. இந்தப் படம் முழுவதும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் கதையைக் கொண்ட ஒரு படம். ஆனால், கதை என்பதும், திரைக்கதை என்பதும் வலுவாக இல்லாததால் அவர்களின் முயற்சி விழலுக்கு இறைத்த நீர் ஆகிவிட்டது.

இயக்குனர் ஹரிஷ் ராம், விஷுவலாகவும், விஎப்எக்ஸ் நிறைந்த படமாகவும் இதை யோசித்த அளவிற்கு கூடவே வலுவான கதையையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் யோசித்திருக்கலாம்.

டாப்சிலிப் பகுதியில் புலி சிலைகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலைக்குச் செல்கிறார் தீனா. அவருக்கு உதவியாக நண்பன் தர்ஷன் உடன் போகிறார். வைல்ட் லைப் போட்டோகிராபியில் ஆர்வமுள்ள கீர்த்தி பாண்டியன் அதே பகுதிக்கு புலியைப் போட்டோ எடுக்கச் செல்கிறார். இவர்கள் சென்ற சமயம், கேரள வனப் பகுதியிலிருந்து தும்பா என்ற புலி தப்பித்து டாப்சிலிப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்தப் புலியை சட்ட விரோதமாகப் பிடித்து விற்க முயல்கிறார் வனத்துறை அதிகாரி. அவரிடமிருந்து புலியைக் காப்பாற்ற தீனா, தர்ஷன், கீர்த்தி முடிவெடுக்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் நாயகன் யார் என்பதில் பெரும் குழப்பம். தீனா, தர்ஷன் இருவருமே படம் முழுவதும் வருகிறார்கள். படத்தின் டைட்டில் கார்டில் கூட தீனா பெயர்தான் முதலில் இடம் பெறுகிறது.

கனா படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தர்ஷன். அந்தப் படத்தில் நடித்த அளவிற்கு கால்வாசி கூட இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை.

டிவியில் வந்தாவது ஏதோ ஒரு காமெடி செய்து சிரிக்க வைப்பார் தீனா. ஆனால், படம் முழுவதும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஒரு காட்சியில் கூட சிரிக்க வைக்கவில்லை. ஒருவேளை படத்தில் அவர்தான் நாயகன் என சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.

நாயகியாக கீர்த்தி பாண்டியன். பத்து நாள் பட்டினி கிடந்தவர் போல அவ்வளவு ஒல்லியாக இருக்கிறார். குட்டையான டிரவுசர் போட்டுக் கொண்டுதான் படம் முழுவதும் சுற்றுகிறார். கொஞ்சமே கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து ஜெயம் ரவி ஏன் நடனமாடினார் என்றே தெரியவில்லை.

படத்தில் அனிருத், விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதி என மூன்று இசையமைப்பாளர்கள் படத்தில் இருந்தும் ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை அமைத்துள்ள சந்தோஷ் தயாநிதி, ஏதோ ஒரு டிராமாவுக்கு இசையமைக்கக் கூப்பிட்டது போல பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

படத்தில் ரசிக்க வைக்கும் ஒரே விஷயம் நரேன் இளன் ஒளிப்பதிவு. டாப்சிலிப் அழகை அப்படியே நேரில் பார்த்தது போன்ற உணர்வை தன் ஒளிப்பதிவு மூலம் ஏற்படுத்துகிறார்.

புலியின் கிராபிக்ஸ் மட்டும் நம்பும்படி உள்ளது. குரங்கு ஒன்றையும் கிராபிக்ஸில் உருவாக்கியிருக்கிறார்கள். அது திடீரென குரங்காகத் தெரிகிறது, அடுத்த காட்சியில் குட்டி குரங்காக மாறிவிடுகிறது.

காடு என்ற நல்ல களம் கிடைத்திருந்தும் சிறப்பாக விளையாடத் தவறிவிட்டார் இயக்குனர்.

தும்பா - துன்பம்

 

பட குழுவினர்

தும்பா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓