க/பெ.ரணசிங்கம்,Ka Pae Ranasingam

க/பெ.ரணசிங்கம் - சினி விழா ↓

Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ்
தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - விருமாண்டி
இசை - ஜிப்ரான்
வெளியான தேதி - 2 அக்டோபர் 2020 (ஜீ பிளக்ஸ்)
நேரம் - 2 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் ஓடிடியில் வெளியாகி உள்ள மற்றுமொரு படம் தான் க.பெ. ரணசிங்கம்.

மக்களின் சில முக்கிய பிரச்சினைகளை சமூக அக்கறையுடன் சினிமாவில் கதையாக அமைத்து வெளிவரும் படங்கள் மிக மிகக் குறைவே. 80, 90களில் அப்படிப்பட்ட படங்களை ஓரளவிற்காவது பார்க்க முடிந்தது. ஆனால், கடந்த இருபது வருடங்களாக அப்படிப்பட்ட படங்கள் வருடத்திற்கு ஒன்று வந்தாலே அதிகம் என்ற நிலையே இருக்கிறது.

இயக்குனர் விருமாண்டி மக்கள் பிரச்சினையுடன் ஒரு மனைவியின் பிரச்சினையையும் ஒரு சேர இணைத்து ஒரு சென்டிமென்ட்டான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். மேலும், வசனங்களின் ஊடே இன்றைய சில அரசியல் நிலவரங்களையும் அழுத்தமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

சினிமாவில் கதாநாயகர்களை நம்பி மட்டுமே அதிகமான படங்கள் வருவது வழக்கம். ஆனால், இந்தப் படத்தில் கதையையும், கதாநாயகியையும் அதிகம் நம்பி எடுத்திருப்பதற்காகவே பாராட்டலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையில் தள்ளாடும் ஒரு கிராமத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி. அடிக்கடி மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடுபவர். அவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பின் மனைவியின் வேண்டுகோளை ஏற்று துபாய்க்கு வேலைக்குச் செல்கிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் கம்பெனி விபத்தில் அவர் இறந்துவிட்டார் என்ற தகவல் வருகிறது. கணவர் விஜய் சேதுபதியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர முடியாமல் தவிக்கிறார் ஐஸ்வர்யா. ஒரு நாளல்ல இரண்டு நாளல்ல, பத்து மாதங்கள் வரை அதற்காகப் போராடுகிறார். கடைசியில் அவரது போராட்டத்தில் அவருக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகன் விஜய் சேதுபதி என்று சொல்லுமளவிற்கு படம் முழுவதும் அவர் வரும்படியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் இயல்பான கிராமத்துக் காதல் காட்சிகள் நிறைவாக அமைந்துள்ளன. மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்லும் துடிப்பான இளைஞராக விஜய் சேதுபதி. ஆனாலும், விஜய் சேதுபதியிடம் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். சில காட்சிகளில் கடமைக்கு நடித்துக் கொடுத்தது போல கொஞ்சம் அழுத்தம் இல்லாமலே நடித்திருக்கிறாரோ என்று யோசிக்க வைக்கிறது.

கணவர் ரணசிங்கத்தின் உடலை எத்தனை ரணம் வந்தாலும் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதில் விடாது போராடும் சிங்கமாக ஐஸ்வர்யா ராஜேஷ். படத்திற்கு க.பெ.ரணசிங்கம் எனப் பெயர் வைத்தைவிட ஐஸ்வர்யாவின் கதாபாத்திரப் பெயரான அரியாநாச்சி என்றே வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்திற்குள் அப்படியே புகுந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் மண்ணிற்குப் பொருத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கக் கூடிய நடிகைகளில் இப்போதைக்கு ஐஸ்வர்யாவுக்குத்தான் முதலிடம். இப்படிப்பட்ட படங்களையே தேர்வு செய்து நடித்தால் ஷோபா, ரேவதி வரிசையில் ஐஸ்வர்யாவை சீக்கிரமே சேர்த்துவிடலாம். அரியாநாச்சி படத்தில் அசத்தல் நாச்சி.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா தவிர படத்தில் ரங்கராஜ் பாண்டே மட்டும்தான் அதிக நேரம் வருகிறார். மாவட்ட கலெக்டராக பொருத்தமாகவே நடித்திருக்கிறார். விஜய்க்கும், ஐஸ்வர்யாவுக்கும் அவர் உதவி செய்வது போலவே தோன்றினாலும் கிளைமாக்சில் அவரும் சேர்ந்து அவர்களுக்கு துரோகம் செய்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருக்கும் பவானி கவனிக்க வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கிடைத்திருக்கும் வாய்ப்புகளில் அவர்களது இருப்பைக் காட்டிக் கொள்கிறார்கள்.

ஜிப்ரான் பின்னணி இசை காட்சிகளின் அழுத்தத்தைக் கூட்டுகிறது. பாடல்களை ஹிட்டாக்கியிருந்தால் படத்திற்கு பலமாக இருந்திருக்கும். ராமநாதபுர வறட்சியை சில காட்சிகளில் தெளிவாகப் பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். படத்தொகுப்பாளர் சிவநாந்தீஸ்வரன் பல காட்சிகளில் கை வைத்திருக்கலாம்.

படத்தின் மைனஸ் என்று சொன்னால் படத்தின் நீளம்தான். மூன்று மணி நேரம் வரை படம் போய்க் கொண்டே இருக்கிறது. பிரதமர் வரை ஐஸ்வர்யா தன் போராட்டத்தை எடுத்துச் செல்கிறார் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும். சென்னைக்குச் சென்றால் அங்கு ஒருவர் உதவி செய்கிறார், டெல்லிக்குச் சென்றால் அங்கு ஒருவர் உதவி செய்கிறார் என்பதும் இயல்பான கதையில் சினிமாத்தனமான காட்சிகள்.

விஜய் சேதுபதியின் மரணத்தின் அதிர்ச்சியை அவரது தங்கை பவானி மட்டுமே அழுத்தமாக உணர்த்துகிறார். அடுத்த காட்சியில் ஐஸ்வர்யா இடிந்து போய் வீட்டில் உட்காருகிறார் என்று காட்டிவிட்டு, அப்படியே பிளாஷ்பேக் போய்விடுகிறார்கள். அதனால் விஜய் சேதுபதியின் இழப்பு நம்மை பெரிதாக பாதிக்காமல் போய்விடுகிறது. ஒரு ஐந்து நிமிடம் அந்தத் தவிப்பைக் காட்டிவிட்டு அதன்பின் பிளாஷ்பேக் போயிருந்தால் பின்னல் வரும் ஐஸ்வர்யாவின் தனி மனித போராட்டம் நம்மையும் இன்னும் அதிகமாகப் பாதித்திருக்கும்.

க.பெ.ரணசிங்கம் - சிங்கப்பெண்

 

பட குழுவினர்

க/பெ.ரணசிங்கம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓