1

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா
தயாரிப்பு - வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - கீரா
இசை - எம்.எஸ்.ஸ்ரீகாந்த்
வெளியான தேதி - 6 மார்ச் 2020
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 1/5

தமிழ் சினிமாவில் இனி யாரும் சாதியை மையமாக வைத்து படங்களை எடுக்கக் கூடாது என யாராவது தடை விதித்தால் தமிழ் சினிமாவுக்கு மிகவும் நல்லது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆணவக் கொலையை எதிர்த்து கன்னி மாடம், கடந்த வாரம் ஆணவக் கொலை என்பதே திட்டமிட்ட நாடகம் என திரௌபதி, இந்த வாரம் மீண்டும் ஆணவக் கொலையை எதிர்த்து எட்டுத்திக்கும் பற.

ஆணவக் கொலை என்ற பெயரில் கருத்தைச் சொல்கிறோம் என, ஒரு திட்டமிட்ட சாதிய வன்மத்தை சினிமா ரசிகர்களின் மனதில் பதிய வைக்க சில இயக்குனர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களை யார் கண்டிப்பது ?.

ஒரு குறிப்பிட்ட சாதியின் வாழ்வியலைச் சொல்வது வேறு. அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வைத்துப் படமாக்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஒரு சாதியை உயர்த்திச் சொல்வதற்காக, மற்றொரு சாதியை தாழ்த்திச் சொல்லி இரு தரப்பினருக்கும் இடையே சினிமா வழியிலும் ஒரு மோதலை உருவாக்க நினைக்கிறார்களோ என்று தான் இம்மாதிரியான இயக்குனர்களின் படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

சாதிய இட ஒதுக்கீடுகள் இருக்கும் வரையில் இந்த சாதி வித்தியாசம் ஒழியப் போவதில்லை. தத்தம் குலத் தொழிலை விட்டு வேறு தொழில் பார்க்க அனைத்து சாதியினரும் செல்லும் வரை இந்த சாதி ஒழியப் போவதில்லை. அப்படியிருக்க அடுத்தடுத்து இம்மாதிரியான படங்கள் வருவதன் நோக்கத்தில் ஏதோ ஒரு பின்னணி காரணம் இருக்கிறது.

தன்னை விட சாதியில் குறைவான ஒரு இளைஞனுடன் சென்னைக்குச் சென்று திருமணம் செய்து கொள்ள கிளம்புகிறார் சாந்தினி. பிளாட்பாரத்தில் வசிக்கும் நிதிஷ் வீரா விடிந்ததும் தன் காதலியை திருமணம் செய்து கொள்வதற்கான வேலையாக அலைகிறார். தனது மகன் உயிரைக் காப்பாற்ற 20 ஆயிரம் தேடி இரவில் அலைகிறார் முனிஷ்காந்த். போலீஸ் என்கவுன்டரில் இருந்து தங்கள் தோழர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் வக்கீல் சமுத்திரக்கனி. இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் இந்தப் படத்தின் கதை.

ஜீன்ஸ் பேன்ட், கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு தங்களது சாதிப் பெண்களை திட்டமிட்டு காதலித்து ஏமாற்றுகிறார்கள் என ஒரு சாதித் தலைவர் துடித்து அவர்களது சாதியினரைத் தூண்டி விடுகிறார். ஆணவக் கொலை செய்யவும் அந்த சாதிக் கும்பல் துடிக்கிறது. இரண்டு வாரம் முன்பு வந்த கன்னி மாடம் படத்தின் சில காட்சிகள் இந்தப் படத்திலும் உள்ளன.

நான்கைந்து முக்கியக் கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கான பிரச்சினைகளை திரைக்கதையாக அமைத்து அவற்றை ஓரிடத்தில் கிளைமாக்சாக முடிக்க திட்டமிட்டு கதை எழுதியுள்ளார் இயக்குனர். ஆனால், அதை திரைக்கதையாக அமைத்ததிலும், காட்சிப்படுத்தியிலும்தான் நிறையவே சறுக்கி இருக்கிறார்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் காட்சிகள் அடிக்கடி ஜம்ப் ஆகின்றன. நேரம் கிடைக்கும் போது சாதி வெறியர்கள் என ஒரு குறிப்பிட்ட சாதியினரை வசனம் மூலம் திட்டித் தீர்க்கிறார். உயர்ந்த சாதியோ, தாழ்ந்த சாதியோ அவரவர் சாதிப் பெருமையைப் பேசுவதே இந்தக் காலத்தில் தவறுதான். அதைக் கடந்து வந்து நாட்டை முன்னேற்றத் துடிக்கிறது இந்தக் கால இளைஞர் கூட்டம். அவர்களை சாதி ரீதியாக பிளவுபடுத்த சினிமா மூலம் துடிக்கிறார்கள் போலும்.

படத்தில் நடித்துள்ளவர்களில் யாருமே ஒரு ஈடுபாட்டுடன் நடித்தது போலத் தெரியவில்லை. சமுத்திரக்கனி கூட ஒத்துக் கொண்டுவிட்டோம், ஏதோ செய்துவிட்டுப் போவோம் என்று நடித்தது போல இருக்கிறது.

மேக்கிங்கில் துளி கூட கவனம் செலுத்தவில்லை படக்குழுவினர். சீக்கிரமா சாதி பேசும் படங்களை சிறப்பாக (?) கவனிக்குமா சென்சார் குழு ?.

எட்டுத்திக்கும் பற - எழும்பினால்தானே பறப்பதற்கு...

 

பட குழுவினர்

எட்டுத்திக்கும் பற

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓