கேங்ஸ் ஆப் மெட்ராஸ்,Gangs of Madras

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பிரியங்கா ருத், அசோக், வேலுபிரபாகரன்
தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சி.வி.குமார்
இசை - ஹரி டுபுசியா, ஷியாமளாங்கன்
வெளியான தேதி - 12 ஏப்ரல் 2019
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த ரவுடியிசக் கதைகளிலோ அல்லது ஆக்ஷன் கதைகளிலோ இந்தப் படத்தில் காட்டியிருக்கும் அளவிற்கான ரத்தக் களறியான காட்சிகளையோ, கொடூரமான காட்சிகளையோ பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஏ சான்றிதழ் என்று முடிவு செய்துவிட்டு எப்படி வேண்டுமானாலும் படமெடுக்கலாமா?, இந்தப் படத்தில் உள்ள வன்முறை மற்றும் கொடூரத்திற்காக இரண்டு, மூன்று ஏ சான்றிதழ்களை சேர்த்துக் கொடுத்திருக்கலாம்.

தயாரிப்பாளராக சில நல்ல படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குனராக அறிமுகமான மாயவன் படத்தில் கூட இப்படிப்பட்ட காட்சிகள் இல்லை. இந்தப் படத்தின் கதையை ரவுடிகளின் கதைக்களம் என முடிவு செய்துவிட்டு இப்படி கொலைக்களமாக, ரத்தக்களமாகக் காட்டியிருப்பது ரொம்பவே ஓவர். படம் முடிந்து வெளியில் வரும் போத நாமும் ரத்த வெள்ளத்தில் மிதந்தது போல் உள்ளது என்றுதான் சொல்வார்கள். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நம் மீது அடிக்கடி ரத்தம் தெறிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.

ராம்கோபால் வர்மா 20 ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்தி சினிமாவில் காட்டியதை இப்போது, தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சி.வி.குமார். பல காட்சிகளைப் பார்ப்பதற்கு வர்மாவின் படங்களில் உள்ள அந்தக் கலர் தெரிகிறது. அதற்கு ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார்கள்.

இந்துப் பெண்ணான பிரியங்கா ருத், முஸ்லிம் பையனான அசோக்கைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் அசோக்குடன் தனிக் குடித்தனம் நடத்துகிறார். போதை மருந்து கடத்தும் வேலுபிரபாகரனிடம் வேலைக்குச் சேர்கிறார் அசோக். ஆனால், சில நாட்களிலேயே அவர் போலீஸ் என்கவுன்டரில் பிரியங்கா எதிரிலேயே கொல்லப்படுகிறார். அசோக் கொலைக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிக்க, வேலுபிரபாகரனின் எதிரியான மும்பையில் வசிக்கும் டேனியல் பாலாஜியிடம் சென்று உதவி கேட்கிறார் பிரியங்கா. பாலாஜியிடம் பயிற்சி பெற்று பிரியங்காவும் ஒரு ரவுடியாகி (?), கணவனைக் கொன்றவர்களைப் பழி வாங்க மீண்டும் சென்னை வருகிறார். அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அருவி படம் போல ஒரு பெண்ணே, அதாவது படத்தின் நாயகியே கையில் துப்பாக்கி தூக்கினால் படம் வெற்றி பெற்றுவிடும் என இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. பெண் ரவுடியாக பிரியங்கா ருத் நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். கண்களில் வெறுப்பு, கோபம், பழி வாங்கும் உணர்ச்சி என கேரக்டரில் அப்படியே பொருந்திப் போகிறார். ஆனால், அவருக்கான முடிவையும் சினிமாத்தனமில்லாமல் முடித்திருப்பது சரிதான் என்றாலும் பார்க்கும் ரசிகர்களுக்குப் பாவமாய்தான் இருக்கிறது.

படத்தின் நாயகன் அசோக். வழக்கமாக கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்வார். இந்தப் படத்தில் அடக்கி நடித்திருக்கிறார். ஆனாலும், அவரை சீக்கிரமே போட்டுத் தள்ளிவிடுகிறார்கள்.

படத்தின் மெயின் வில்லன் வேலுபிரபாகரன். போதைப் பொருள் கடத்தும் ராவுத்தர் கதாபாத்திரத்தில் நடையிலும், பார்வையிலும் மிரள வைக்கிறார். அதிலும், ஆரம்பத்திலேயே ஒருவன் வாயில் கேன் வழியாக பெட்ரோலை ஊற்றி பின்னர் அதில் நெருப்பைப் பற்ற வைத்து...யப்பா...தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு கொடூர வில்லத்தனமான கொலைக் காட்சி அது. அது மட்டுமா, அடுத்தும் எப்படியெல்லாம் கொடூரமாகக் கொல்லலாம் என தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார்கள். ஒருவருக்கு ஆணிகளைப் போட்டு பாட்டில்களால் அடுத்து கொல்லுவது, மற்றொருவருக்கு உயிர்நிலையில் இரும்பு ராடு எடுத்து துடிக்கத் துடிக்க அடித்துக் கொல்வது என படம் பார்ப்பவர்கள் கண்களை மூடிக் கொள்ளும் அளவிலான காட்சிகள். இப்படியெல்லாம் காட்சிகள் வைத்தால் வித்தியாசம் என ரசிகர்கள் பாராட்டுவார்கள் என சில இயக்குனர்கள் தப்புக் கணக்கு போடுகிறார்கள். வேலுபிரகாரன் மகன்களாக நடித்திருக்கும் இருவரும் கொடூரமான வாரிசு வில்லன்கள்.

டேனியல் பாலாஜி மும்பையில் இருக்கும் தாதா. சென்னையை மீண்டும் தன் கைக்குள் கொண்டு வருவதற்காக பிரியங்காவைப் பயன்படுத்தி திட்டம் போடுகிறார். ஒரு வீட்டு மாடியில் சாதாரண வீட்டில் இருக்கும் அவரை நாம் பெரிய தாதா என்று எப்படி நம்புவது எனத் தெரியவில்லை. அவரை சுலபமாகத் தேடிச் செல்கிறார் நாயகி பிரியங்கா. வழக்கமான வில்லத்தனம் என்பதால் டேனியல் பாலாஜி சுலபமாக நடித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் தலைவன் லாலா-வாக நடித்திருப்பவரும், அமைச்சராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் தேனப்பன், போலீஸ் அதிகாரி நரேன் சில காட்சிகளில் வந்தாலும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள். அது எப்படி எல்லா கடத்தல்காரர்களிடம் ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ வேலை செய்யும் ஒருவர் சரியாக இருக்கிறார் என்பது தெரியவில்லை. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் ஈ.ராமதாஸ்.

பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத் தொகுப்பு இயக்குனரின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு படத்திற்கான உணர்வைக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் முடிவில் காதலிக்காதீர்கள், அதிலும் மதம் மாறி யாரையும் காதலித்துவிடாதீர்கள் என இயக்குனர் மறைமுகமாக சொல்வது போல் உள்ளது. சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு சாதாரண ரவுடிகளைப் பற்றிய படங்களைப் பார்த்த நமக்கு பல கோடி ரூபாய் போதைப் பொருளை சர்வ சாதாரணமாய் கடத்தும் கும்பலைப் பற்றிய ஒரு கதையைக் கொஞ்சம் டீடெயிலாகக் காட்டியிருப்பது மட்டுமே கொஞ்சம் புதிது. படத்தின் பட்ஜெட்டில் பாதியை ரத்தம் தெளிப்பதற்காக மட்டும் செலவு செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் - ரிவெஞ்ச் ஆப் உமன்

 

பட குழுவினர்

கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓