தடம்,Thadam

தடம் - பட காட்சிகள் ↓

Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அருண் விஜய், தன்யா ஹோப், ஸ்மிருதி, வித்யா பிரதீப்
தயாரிப்பு - ரெதான் சினிமாஸ்
இயக்கம் - மகிழ் திருமேனி
இசை - அருண்ராஜ்
வெளியான தேதி - 1 மார்ச் 2019
நேரம் - 2 மணி நேரம் 18 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவில் எத்தனையோ இரு வேடப் படங்கள் வந்துள்ளன. இந்த தடம் படம் இதுவரை வராத ஒரு இரு வேடப் படம். படத்தில் தேவையற்ற பாடல்கள் இல்லை, நகைச்சுவை இல்லை ஆனாலும் படம் இரண்டரை மணி நேரம் பரபரப்பாக நகர்கிறது.

அருண் விஜய்க்கு தடையறத் தாக்க படத்தின் மூலம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குனர் மகிழ் திருமேனி மீண்டும் தடம் படம் மூலம் மற்றுமொரு திருப்புமுனையைக் கொடுத்திருக்கிறார்.

ஒரே உருவ அமைப்பு (Identical Twins) கொண்ட அண்ணன், தம்பி கதாபாத்திரங்களில் இரண்டு பேரையும் வெவ்வேறு என வித்தியாசப்படுத்தி நடிப்பில் காட்டுவது சாதாரணமல்ல. இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால், படம் பார்க்கும் நமக்கு அவர்தான் இவர், இவர்தான் அவர் என வித்தியாசம் தெரிய வேண்டும், புரிய வேண்டும். அதை இயக்குனர் மகிழ் திருமேனியும், நாயகன் அருண் விஜய்யும் மிகச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

எழில் (அருண் விஜய்) ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்துபவர். அவருக்கும் தீபிகாவுக்கும் (தன்யா ஹோப்) காதல். தன்யா ஒரு பயணமாக வெளியூர் சென்றிருக்க, ஒரு கொலைக் குற்றத்திற்காக எழில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அதே சமயத்தில் குடிபோதை பிரச்சினையில் கவின் (அருண் விஜய் 2) சிக்கி, எழில் இருக்கும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். இருவரில் யார் அந்தக் கொலையை செய்தது என்பதைக் கண்டுபிடிக்க காவல் துறை திணறுகிறது. விசாரணையில் என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை.

எழில், கவின் என இரு கதாபாத்திரங்களில் அருண் விஜய். எழில் கொஞ்சம் டீசன்ட்டானவர். கவின் லோக்கல் ஆசாமி, திருட்டு வேலைகளிலும் ஈடுபடுபவர். இருவருமே அண்ணன் தம்பி என நமக்குத் தெரிய வரும் போதுதான் கதையில் மிகப் பெரிய டிவிஸ்ட். இரண்டு கதாபாத்திரங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டி நடிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. இரண்டுக்குமான தனி நடை, உடல் மொழி, பேச்சு என அருண் விஜய் சிறப்பாகச் செய்திருக்கிறார். நல்ல கதைகளும், கதாபாத்திரங்களும்தான் ஒரு நடிகரைக் காப்பாற்றும் என்பதைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்.

ஒரு அருண் விஜய்யின் ஜோடியாக தன்யா ஹோப், மற்றொரு அருண் விஜய்யின் ஜோடியாக ஸ்மிருதி. ஆனால், இருவருக்குமே அதிக வேலையில்லை. கொஞ்ச நேரமே வந்து காதல் செய்து ஒருவர் படத்தின் கதைப்படி காணாமல் போய்விடுகிறார். மற்றொருவர் பெயருக்கு சில காட்சிகளில் வருகிறார். அவர்கள் இருவரை விட சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ள வித்யா பிரதீப் தான் படத்தில் அதிக நேரம் வருகிறார். திரைக்கதையும் அவர் மீது சேர்ந்து பயணிக்கிறது. ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் வித்யா பிரதீப். அந்தப் பெரிய கண்களின் பார்வையிலேயே அதிகம் பேசாமலிருந்தாலும் நடிப்பில் பேச வைத்துவிட்டார்.

சுயநலமிக்க இன்ஸ்பெக்டராக பெப்சி விஜயன், திருட்டு வேலை செய்யும் அருண் விஜய்யின் நண்பனாக யோகி பாபு. காவல் நிலயைத்தில் உள்ள ஏட்டு, கான்ஸ்டபிள்கள் என பெயர் தெரியாத சிலரும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். மீரா கிருஷ்ணன் கதாபாத்திரம் கடந்த வரும் வெளிவந்த குலேபகாவலி படத்தின் ரேவதி கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது. அவர், அருண் விஜய், யோகிபாபு ஆகியோர் ஒன்றாக சேர்ந்துதான் திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். யோகி பாபு மட்டும் கதையில் தொடர்ந்து பயணிக்கிறார்.

அறிமுக இசையமைப்பாளர் அருண்ராஜ் இசையில் இணையே.. பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் அறிமுக இசையமைப்பாளர் என்று சொல்ல முடியாதபடி இசைத்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் கதை அதிகமாக நகரும் காவல் நிலையத்தில் கோபிநாத்தின் ஒளிப்பதிவு கதையை போரடிக்காமல் பார்க்க உதவியிருக்கிறது. அவருக்கு உறுதுணையாக படத் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் கைகோர்த்திருக்கிறார்.

மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஒரே உருவம் கொண்ட சிலர் நிகழ்த்திய குற்றங்களைப் பற்றி பட முடிவில் தகவலாகத் தெரிவிக்கிறார்கள். அவை ஆச்சரியமாக இருக்கின்றன. ஒரு ஹாலிவுட் படத்திற்குரிய கதையை தமிழ்ப் படமாகக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். படம் இப்படித்தான் முடியும் என நாம் ஒரு யூகத்திற்குள் வந்தால் அது தவறு என திரைக்கதையை நாம் எதிர்பார்க்காத விதத்தில் அமைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

இடைவேளைக்குப் பின் அருண் விஜய் அம்மா சோனியா அகர்வால் பற்றிய பிளாஷ்பேக் படத்தில் நம்ப முடியாத சித்தரிப்பாக இருக்கிறது. அப்படி கூட ஒரு பெண் கதாபாத்திரம் இருக்குமா என யோசிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் படம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கொலைக்குப் பிறகுதான் படம் என்ன மாதிரியான படம் எனத் தெரிய வருகிறது. தமிழ் சினிமாவில் புதுக் கதைகளே வராதா எனக் கேட்பவர்களுக்கு இந்தப் படம் பதில் தரும்.

தடம் - தரம்

 

தடம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தடம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓