டுலெட்,ToLet

டுலெட் - பட காட்சிகள் ↓

Advertisement
4

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் மற்றும் பலர்
தயாரிப்பு - ழ சினிமாஸ்
இயக்கம் - செழியன்
வெளியான தேதி - 21 பிப்ரவரி 2019
நேரம் - 1 மணி நேரம் 39 நிமிடம்
ரேட்டிங் - 4/5

திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் படம், தேசிய விருது பெற்ற படம், பல சர்வதேச விருதுகளை வாங்கிய படம் என்றாலே அவை மக்களுக்கான சினிமா அல்ல என்ற ஒரு தவறான கருத்து பலரிடம் உள்ளது. அப்படிப்பட்ட படங்களை கலைப்படம் என ஒதுக்கி வைக்கும் போக்கு திரைப்படத் துறையினரிடமே உள்ளது.

அவை கலைப்படங்கள் அல்ல, கலையை நேர்மையாகவும், மக்களுக்காகவும் ஈடுபாட்டுடன் கொடுக்கும் படங்கள். விழாக்களுக்கான படங்கள் அல்ல, சினிமாவை விழாமல் காக்கும் படங்கள் என்ற எண்ணம் மக்களிடம் அதிகமானால், தமிழ் சினிமா உலகிலும் அது போன்ற மேலும் பல படங்கள் வரும்.

இந்த 'டுலெட்' மக்களுக்கான, மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படம். தமிழ் சினிமாவை பல சர்வதேச விழாக்களில் தலை நிமிர வைத்த படம். சில முக்கிய தமிழ்ப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய செழியன், முதல் முறையாக இயக்கியிருக்கும் படம்.

2007ம் வருடம் ஐ.டி. துறையின் வளர்ச்சியால் சென்னையில் வாடகை வீட்டிற்கான வாடகைத் தொகை அதிரடியாக உயர்ந்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

சினிமாவில் உதவி இயக்குனராக இருப்பவர் இளங்கோ. காதல் மனைவி அமுதா, மகன் சித்தார்த் ஆகியோருடன் ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கிறார். அந்த வீட்டு உரிமையாளர் அவர்களை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வீட்டை காலி செய்யச் சொல்கிறார். அதனால், தங்கள் வருமானத்திற்கேற்ற ஒரு வீட்டைப் பார்த்து குடியேற கணவனும், மனைவியும் வீடு தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தேடலில் அவர்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த டுலெட்.

படத்தின் ஆரம்பத்திலேயே இளங்கோவும், அமுதாவும் அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது அவர்கள் பின்னாடியே நாமும் செல்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விடுகிறார். அதன்பின் அவர்கள் போகும் இடங்களுக்கெல்லாம் நாமும் கூடவே பயணிப்பது போன்று, அவர்கள் பக்கத்தில் இருந்து பார்ப்பது போன்ற ஒரு உணர்வே ஏற்படுகிறது.

ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் வருமானம் என்ன, அவர்களின் தேவை என்ன, அவர்களின் ஆசை என்ன என்பதை அவ்வளவு யதார்த்தமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செழியன். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இந்த சமூகத்தில் உள்ள குறைகளையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

சினிமா என்பதற்காக நடிப்பவர்களுக்கு எந்த ஒப்பனையும் இல்லை. அது போல அவர்கள் இருக்கும் வீட்டைக் கூட உள்ளது உள்ளபடியே அமைத்திருக்கிறார்கள். யதார்தத்த்தை விட்டு எந்தக் காட்சியும் ஒரு அடி கூட விலகியதாகத் தெரியவில்லை. அவ்வளவு ஏன், இந்த டுலெட்டில் டாய்லெட்டின் நிலைமையைக் கூட அப்படியே படம் பிடித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வாடகை வீடுகளில் அந்த டாய்லெட் எவ்வளவு அவசியம் என்பது அதில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.

இளங்கோவாக சந்தோஷ் ஸ்ரீராம். திறமை உள்ள உதவி இயக்குனர் ஒருவனுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது கையில் கிடைக்காது என்பதற்கு அவர் கொடுத்த கதையை மட்டும் விலைக்குக் கேட்கும் தயாரிப்பாளர் மூலம் உணர்த்துகிறார். மனைவி மீது காதல், குழந்தை மீது பாசம் என அதிகம் இருந்தாலும் பணமில்லாத ஒரு கணவனின் கையறு நிலை மிகக் கொடுமையானது. அந்த வெறுப்பை அப்படியே திரையில் காட்டுகிறார் சந்தோஷ்.

இளங்கோ மனைவி அமுதாவாக ஷீலா ராஜ்குமார். மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ் குடும்பத் தலைவிகளுக்குத்தான் வாழ்க்கையில் எவ்வளவு அழுத்தம். ஒரு பக்கம் கணவனையும் கவனிக்க வேண்டும், குழந்தையையும் கவனிக்க வேண்டும், வீட்டிலிருந்தால் வீட்டு உரிமையாளர்கள் தரும் தொந்தரவையும் சமாளிக்க வேண்டும். வாழவும் முடியாமல் தாழவும் முடியாமல் லோயர் மிடில் கிளாஸ் மனைவிகள் படும்பாடு இப்படித்தான் இருக்கும் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்துகிறார் ஷீலா. பல வருடங்களுக்குப் பிறகு ஷோபா மாதிரியான ஒரு நடிகையைப் பார்க்கும் திருப்தி. எந்தக் காட்சியிலுமே துளி கூட மிகையில்லாத நடிப்பு. ஆசாபாசங்களை வெளிப்படுத்துவதில் கூட அளவான, அப்பழுக்கற்ற நடிப்பு.

வீட்டு உரிமையாளர் என்றால் எப்படிப்பட்ட திமிருடன் இருப்பார்கள் என்பதை தன் பேச்சிலும், செய்கையிலும் காட்டிவிடுகிறார் ஆதிரா. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் அருள் எழிலன் சில உண்மை வசனங்களைப் பேசி சிரிக்கிறார்.

ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் எந்த இடத்திலும் கதையை மீறி தன் இருப்பைக் காட்டிக் கொள்ளவில்லை. படத்தின் இயல்புக்கேற்ப அவை அமைந்துள்ளன. படத்தில் பின்னணி இசை என்பது எங்குமே தெரியவில்லை. பின்னணியில் ஒலிக்கும் சினிமா பாடல்களும், ஏனைய சத்தங்களும் அந்தந்த காட்சிக்கான உணர்வை கூடுதலாகத் தருகின்றன.

சின்னச் சின்னதாய் கவனிக்க வேண்டிய, ரசிக்க வேண்டிய விஷயங்கள் பல படத்தில் இருக்கின்றன. அதே சமயம் சில குறைகளும் தென்படுகின்றன. வீட்டு உரிமையாளரை அமுதா கதாபாத்திரம் சந்திக்கும் போதெல்லாம், 'ஹோம் வொர்க்' செய்யாத சிறுமி போல பயந்து, ஒடுங்கி நிற்கிறார். விட்டால் கை கட்டி, வாய் மீது விரல் வைத்துவிடுவார் போலிருக்கிறது. இளங்கோ கதாபாத்திரம் உதவி இயக்குனராக சித்தரிக்கப்படாமல், வேறு ஏதோ ஒரு வேலையில் இருப்பதாக் அமைக்கப்பட்டிருந்தால் அந்த வலியை இன்னும் அழுத்தமாக உணர்ந்திருக்கலாமோ என எண்ணுகிறது. சினிமா வேலை என்பது பெரும்பான்மையோரின் வேலை அல்லவே.

டுலெட் - மனதை நிறைக்கும்

 

பட குழுவினர்

டுலெட்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓