3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி, ஆர்ஜே விக்னேஷ்
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - சரவண ராஜேந்திரன்
இசை - ஷான் ரோல்டன்
வெளியான தேதி - 19 ஏப்ரல் 2019
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் என்றைக்கும் அழியாத கதை காதல் கதைதான். அதைக் கொஞ்சம் உணர்வு பூர்வமாகக் கொடுத்துவிட்டால் நமது ரசிகர்கள் அந்தப் படத்தைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

இந்த மெஹந்தி சர்க்கஸ் படமும் ஒரு காதல் படம்தான், ஆனால், தலைக்கு மேல் இல்லை என்றாலும் தோள் மீதாவது தூக்கிக் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் புதுமுக நடிகர்கள் என்பதால் அது ரசிகர்களிடம் எப்படி பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பது மட்டும்தான் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நமக்குள் எழும் கேள்வியாக இருக்கிறது.

அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன், அவருடைய தம்பியும் இயக்குனருமான ராஜு முருகன் கதை, வசனம் உதவியுடன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். இளையராஜாவின் தீவிர ரசிகர் அவர் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. இளையராஜாவின் பாடல்கள் மட்டும் காதல் உணர்வைத் தந்தால் போதாது, படத்திற்காக உருவாக்கியுள்ள பாடல்களிலும் அந்தக் காதல் உணர்வு அதிகம் இருக்க வேண்டும் என்பதை அவரும், படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டனும் புரிந்து கொண்டு இன்னும் கூடுதலாக உழைத்திருந்தால் இந்த ஆண்டின் சிறந்த காதல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்கும் படமாக இந்தப் படம் அமைந்திருக்கும்.

1992ல் நடக்கும் ஒரு காதல் கதைதான் இந்தப் படம். கொடைக்கானலில் ராஜகீதம் என்ற பெயரில் பாடல்கள் ரிக்கார்டிங் செய்யும் கடை நடத்தி வருபவர் படத்தின் நாயகன் ரங்கராஜ். அங்கு சர்க்கஸ் நடத்த வரும் ஸ்வேதா த்ரிபாதியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். ரங்கராஜின் சாதி வெறி பிடித்த அப்பா மாரிமுத்துவும், ஸ்வேதாவின் அப்பா சன்னி சார்லஸும் அவர்கள் காதலுக்கு எதிராக இருக்க காதலர்கள் பிரிகிறார்கள். 20 வருடங்களுக்குப் பிறகு காதலர்கள் மீண்டும் சந்திக்கும் சூழல் வர அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே வயதான நாயகனையும், வயதான நாயகியையும் காட்டிவிட்ட பிறகு பிளாஷ்பேக்கில் கதையை ஆரம்பிக்கிறார்கள். ஒரு காதல் படத்தில் காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்ற பரபரப்பு படத்தின் ஆரம்பத்திலேயே இல்லாமல் போய்விடுவதால் படத்துடன் ஒன்றுவதற்கு கொஞ்சம் தடுமாற்றம் வருகிறது. போகப் போக அதை இளையராஜாவின் இனிமையான பாடல்கள்தான் நம்மை படத்துக்குள் இழுத்து உட்கார வைக்கிறது.

இளையராஜாவின் பல காதல் பாடல்களைத் தேர்வு செய்து படத்தில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த இசையின் ஜீவனை மீறி இப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை நமக்குள் இறங்க மறுக்கிறது என்பதுதான் வெளிப்படையான உண்மை. ஓ பாப்பா லாலி.. போல இரண்டு பாடல்களைக் கொடுத்து ஷான் ரோல்டனும் அசத்தியிருக்கலாம். பின்னணி இசையில் மட்டும் உணர்வுகளை உள்ளுக்குள் இறக்கிவிடுகிறார்.

அறிமுக நடிகர் ரங்கராஜ், கதாபாத்திரத்திற்கேற்றபடி பொருத்தமாக அமைந்திருக்கிறார். எல்லா உணர்வுகளிலும் ஒரே மாதிரிதான் பார்க்கிறார். அதில் காதல் பார்வை மட்டும் கொஞ்சம் தனித்துத் தெரிவதால் நடிப்பில் தப்பித்து விடுகிறார். போதாததற்கு அவரை அடிக்கடி குடிப்பவர் போலக் காட்டிவிடுவதால் குடித்துவிட்டு நடிக்கும் காட்சியில் நடிப்பு எப்படியிருந்தாலும் அது பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என இயக்குனர் நினைத்திருக்கிறார் போலிருக்கிறது. அடுத்து வரும் படங்களில் நாயகன் இன்னும் பயிற்சி எடுத்துக் கொள்வது அவருக்கு நல்லது.

காதல் படங்களில் நாயகி புதுமுகமாக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், அழகாக இருக்க வேண்டும், அவரைப் பார்த்ததும் நமக்கும் அவர் மீது காதல் வரவேண்டும். அதற்கேற்றபடியே இருக்கிறார் அறிமுக நாயகி ஸ்வேதா த்ரிபாதி. சர்க்கஸ் பெண்ணாக மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறார். ரங்கராஜ் தவறவிடும் காட்சிகளில் இவர் சிறப்பாக நடித்து பேலன்ஸ் செய்துவிடுகிறார்.

காதலர்கள் இருவரும் பிரியும் காட்சியில் நமக்கும் ஒரு துடிப்பு வர வேண்டும், ஆனால், அது வர மறுக்கிறது. இருவருக்குமான காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் வைத்திருந்தால் அது வந்திருக்கலாம்.

மாரிமுத்துவை தொடர்ந்து சாதி வெறியராகவே காட்டி வருகிறார்கள். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை அவர் தவிர்ப்பது நலம். ஸ்வேதாவின் அப்பாவாக நடித்திருக்கும் சன்னி சார்லஸ், கணவராக நடித்திருக்கும் அன்கூர் விகால் பொருத்தமான தேர்வு.

கதாநாயகனின் நண்பனாக ஆர்ஜே விக்னேஷ். நகைச்சுவைக்காக அவரை வைத்திருந்தாலும் காதலுக்கான நண்பனாகத்தான் படம் முழுவதும் இருக்கிறார். காதலர்களுக்கு ஆதரவு தரும் பாதிரியாராக வேலராமமூரத்தி. இருவருமே நிறைவான நடிப்பு.

கொடைக்கானலின் அழகையும், அந்த சிறிய சர்க்கஸின் நிஜமான இயல்பையும் தன் காமராவில் இயல்பாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வக்குமார். ராஜு முருகன் வசனம் என்றதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கதையை மீறிய வசனங்கள் எதுவும் இல்லை.

எத்தனையோ காதல் கதைகளையும், காதலர்கள் கதாபாத்திரங்களையும் பார்த்த தமிழ் சினிமாவிற்கு இந்த மெஹந்தி சர்க்கஸ் புதியதுதான். ஒரு சர்க்கஸ் பெண்ணைக் காதலிக்கும் நாயகன். அதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. அதுவேதான் படத்தின் பிளஸ்ஸும், மைனஸும்.

மெஹந்தி சர்க்கஸ் - சறுக்கவில்லை....!

 

மெஹந்தி சர்க்கஸ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மெஹந்தி சர்க்கஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓