சிலுக்குவார்பட்டி சிங்கம்,Silukkuvarupatti Singam

சிலுக்குவார்பட்டி சிங்கம் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஷ்ணு விஷால், ரெஜினா மற்றும் பலர்
இயக்கம் - செல்லா அய்யாவு
இசை - லியோன் ஜேம்ஸ்
தயாரிப்பு - விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்
வெளியான தேதி - 21 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 14 நிமிடம்
ரேட்டிங் - 2/5

நகைச்சுவைப் படம் எடுப்பது என்பது ஒரு கலை. படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை என்றாலும் ஒரு சில காட்சிகளிலாவது ரசிகர்கள் சிரித்தால்தான் அதை நகைச்சுவைப் படம் என்றே சொல்ல முடியும். நகைச்சுவைப் படம் என்று சொல்லிவிட்டு ஒரு காட்சியில் கூட சிரிக்க முடியவில்லை என்றால் அதை எப்படி நகைச்சுவைப் படம் என்று சொல்ல முடியும்.

சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற தலைப்பே இது ஒரு நகைச்சுவைப் படம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆனால், அறிமுக இயக்குனர் செல்லா அய்யாவு தலைப்புக்கேற்றபடி படத்தை நகைச்சுவைப் படமாகக் கொடுக்க முடியாமல் திணறியிருக்கிறார்.

ராட்சசன் படத்தின் மூலம் கிடைத்த வெற்றிக்குப் பிறகு இப்படிப்பட்ட படம் ஒன்றை வெளியிடுவதை விஷ்ணு விஷால் தவிர்த்திருக்கலாம். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற வெற்றிக்குப் பிறகு இப்படித்தான் கதாநாயகன் என்ற சிரிப்பே வராத ஒரு படத்தை நகைச்சுவைப் படம் என வெளியிட்டார் விஷ்ணு விஷால்.

சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சாதாரண கான்ஸ்டபிளாக இருப்பவர் விஷ்ணு விஷால். டீ, டிபன் வாங்கித் தரும் ஆபிஸ் பாய் வேலையைத்தான் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என அவருடைய மாமாவே கிண்டல் செய்கிறார். மாமாவின் மகள் ரெஜினா மீது விஷ்ணுவுக்குக் காதல். ஆனால், ரெஜினாவுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கிறார்கள். இதனிடையே, சென்னையை மிரட்டிக் கொண்டிருந்த தாதா ரவிசங்கர், ஒரு கொலை செய்வதற்காக சிலுக்குவார்பட்டி வருகிறார். எதிர்பாராமல் அவர் விஷ்ணுவிடம் சிக்கி கைதாகிறார். சிறையிலிருந்து தப்பிக்கும் ரவிசங்கர், விஷ்ணு விஷாலைக் கொல்வதுதான் முதல் வேலை என சபதம் எடுக்கிறார். பயந்த சுபாவம் உள்ள விஷ்ணு விஷால் அவரிடமிருந்து ஓடி ஒளிந்து தப்பிக்கிறார். இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தனக்கு நகைச்சுவையும் வரும் என முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் நிரூபித்தவர் விஷ்ணு விஷால். இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பில் குறையில்லை. ஆனால், காட்சிகளில் நகைச்சுவை இல்லாததால் அவர் என்ன நடித்தாலும், அது விழலுக்கு இறைத்த நீராகவே போகிறது.

எந்த அரசுப் பள்ளி ஆசிரியை இவ்வளவு கிளாமராக டிரஸ் செய்து கொண்டு போவார் எனத் தெரியவில்லை. ரெஜினா புடவை அணிந்தே படத்தில் வந்தாலும் பள்ளிக்குச் செல்லும் போது முதுகு தெரியும் அளவிலான ஜாக்கெட்டையும், கிளாமருடனும் தான் செல்கிறார். அதிலும் பள்ளியில் படிக்கும் சிறுமியை வைத்தே அவருக்கு காதல் கடிதங்களை அனுப்புகிறார் விஷ்ணு. காதல் காலம் வாட்சப்பில் மாறி எவ்வளவு காலமாகிவிட்டது, இன்னும் காதல் கடிதங்களா ?.

படத்தில் எப்போதோ ஒரு முறை சிரிக்கலாம் என நம்மை யோசிக்க வைப்பவர் கருணாகரன் மட்டுமே. விஷ்ணு விஷால் செய்யும் ஒரு சில வேலைகளைப் பார்த்து மிரண்டு போகிறார். லிவிங்ஸ்டன் உதவி ஆய்வாளர். இதைவிட ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை தரக் குறைவாக யோசிக்க முடியாது.

வில்லனாக ரவிசங்கர். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் வந்து மிரட்டியவர், இதில் கொஞ்சம் கோமாளியாக ஆக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு உதவியாளராக யோகி பாபு. இவரையும் வீணடித்திருக்கிறார்கள்.

லியோன் ஜேம்ஸ் இசையில் ஒரு பாடல் கூட மனதில் இடம் பிடிக்கவில்லை. கிராமத்துக் கதையாக இருப்பதால் படத்தை ஒளிப்பதிவாளர் பளிச்சென காட்டியிருக்கலாம். ஆனால், பல காட்சிகள் மங்கலாகத் தெரிகின்றன. எப்போதோ எடுத்து முடித்த படத்தை தூசு தட்டி வெளியிட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

ஒரு படத்தை தொடர்ந்து எடுக்க முடிந்தால் எடுத்து உடனே வெளியிடலாம். அதைவிட்டு கதாநாயகன் படம் போன்ற ஒரு அனுபவத்தை மீண்டும் கொடுத்து தன் கதாநாயக அந்தஸ்தைக் கேள்விக்குறியாக்குகிறார் விஷ்ணு விஷால். இது போன்ற படங்களை எடுப்பதைத் தவிர்த்து ராட்சசன் போன்ற படங்களில் கவனம் செலுத்துவது அவருடைய கதாநாயக வளர்ச்சிக்கு நல்லது.

சிலுக்குவார்பட்டி சிங்கம் - பூனை

 

பட குழுவினர்

சிலுக்குவார்பட்டி சிங்கம்

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓