2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பலர்
தயாரிப்பு - மாதவ் மீடியா
இயக்கம் - ரஞ்சித் ஜெயக்கொடி
இசை - சாம் சிஎஸ்
வெளியான தேதி - 15 மார்ச் 2019
நேரம் - 2 மணி நேரம் 33 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள காதல் படங்கள் கணக்கில் அடங்காத ஒன்று. ஒவ்வொரு இயக்குனரும் அவரவர் படங்களில் புதிய காதல் கதையாகவோ, கதாபாத்திரங்களாகவே படைத்து ரசிகர்களைக் கவர முயற்சிப்பார்கள்.

இந்தப் படத்தில் காதல் அதே காதல்தான், ஆனால், காதலர்களின் கதாபாத்திரங்கள் தான் புதிது. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி வித்தியாசமான காதல் கதையைக் கொடுக்க முயற்சித்து கொஞ்சம் வரம்பு மீறிய காதல் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

படத்தில் நாயகன் குடிக்க மாட்டார், சிகரெட் பிடிக்க மாட்டார் என்று ஆரம்பத்திலிருந்தே காட்சிகளை வைத்ததெல்லாம் சரிதான், ஆனால், கடைசியில் அவரை கஞ்சா அடிக்க வைத்தது, எந்த விதத்தில் சரி ?. அந்தக் காட்சிகள் படத்தில் இல்லை என்றால் கூட படத்தின் கதையோட்டத்திற்கு எந்த பாதகமும் இல்லை. இயக்குனரே அந்தக் காட்சியில் ஒரு காதல் பைத்தியமாக வந்து, நாயகனை கஞ்சா அடிக்க வைப்பதற்குப் பதில், நல்வழிப்படுத்த புத்திமதி சொல்லியிருக்கலாமே?.

சிறு வயதிலேயே தன் அம்மா தன்னை விட்டு ஓடிப் போனதால் அதீத வெறுப்புடன் இருப்பவர் ஹரீஷ் கல்யாண். முரட்டுத் தனம், கோபம், யாரையும் மதிக்காத குணம் என ஒரு விசித்திரமான இளைஞர். அவருக்கும் பணக்காரப் பெண்ணான ஷில்பா மஞ்சுநாத்துக்கும் காதல். ஹரிஷின் முரட்டுத்தனத்தைப் பார்த்தே அவரைக் காதலிக்க ஆரம்பித்த ஷில்பா, ஒரு கட்டத்தில் அதனாலேயே அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார். ஆனால், ஹரிஷ், ஷில்பாவை விடாமல் துரத்துகிறார். இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கதை.

ஏற்கெனவே வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட அல்லது அவருக்குத்தான் இந்தப் பெண் என பெற்றோர்கள் முடிவு செய்த கதாநாயகின் கதாபாத்திரம் கொண்ட பல படங்களைப் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்திலும் அப்படித்தான். ஒரு மேல்தட்ட வர்க்கத்தின் பெண்ணாக படத்தின் கதாநாயகி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அப்படியே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத். விஜய் ஆண்டனியுடன் 'காளி' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்தவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார். படத்திலும் தன் சொந்தக் குரலில்தான் பேசியிருக்கிறார் போலிருக்கிறது.

சிறு வயதில் தன்னையும், அப்பாவையும் விட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, தன் கண் எதிரிலேயே மகிழ்ச்சியாக வாழும் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு இளைஞன் எப்படியிருப்பான். அவ்வளவு கோபத்துடன் இருக்கும் இளைஞனாக ஹரிஷ் கல்யாண். வெறுப்பான பார்வை, கோபமான முகம், தெனாவெட்டான உடல் மொழி, தப்பென்றால் யோசிக்காமல் அடிக்கும் வேகம், கூடவே ஒரு நல்ல குணம் என தன் நடிப்பில் இன்னும் ஒரு படி உயர்ந்திருக்கிறார் ஹரிஷ். சில காட்சிகளில் நடிகர் கார்த்தியை ஞாபகப்படுத்துகிறார், அந்தச் சாயல் வருதைத் தவிர்ப்பது நலம்.

நாயகனாக இருந்து காமெடியனாக இறங்கியிருக்கிறார் மகாபா ஆனந்த். யு டியூப் விமர்சகராக நடித்திருக்கிறார். அந்த விமர்சகர்கள் மீது இயக்குனருக்கு என்ன கோபமோ ?. அவர்களை வறுத்தெடுத்திருக்கிறார். மற்றொரு நண்பராக பாலசரவணன். ஹரிஷின் உண்மையான நண்பராக இருக்கிறார்.

நாயகியின் தோழியாக புதுமுகம் திவ்யா. இந்தக் காலத்து இளைஞிகள் எவ்வளவு தையரியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இவரது கதாபாத்திரம் ஒரு உதாரணம். காதலைப் பற்றி இந்தக் கதாபாத்திரத்தின் புரிதல்தான் இன்றைய உண்மை நிலை. பொன்வண்ணன், பரிதாபமான அப்பாவாகவும், கணவராகவும் நடித்திருக்கிறார். தன்னால்தான் ஹரிஷின் அம்மா ஓடிப் போய்விட்டார் என்றும், பல முறை அம்மா ஹரிஷைப் பார்க்க வந்ததாகவும் கிளைமாக்சில்தான் சொல்கிறார். ஏன், அதை அவ்வப்போது சொல்லவில்லை. சரி, ஹரிஷுக்கு புரிந்து கொள்ளும் வயதிலாவது, அதை சொல்லியிருந்தால் ஹரிஷ் இவ்வளவு முரட்டுத்தனமானவராக மாறியிருக்க மாட்டாரே?.

சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் மனதில் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. இம்மாதிரியான காதல் படங்களுக்கு அருமையான பாடல்கள்தான் அவசியம். பின்னணி இசையை விட பாடல்கள்தான் படத்தை முன்னிறுத்தும். படத்தில் பெரும்பாலும் இரவுக் காட்சிகள்தான். ஒளிப்பதிவாளர் கவின் ராஜ் படம் முழுவதும் ஒரு விதமான கலரை பொருத்தமாக பின்பற்றியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் வித்தியாசமாக திரைக்கதை சொல்கிறோம் என இயக்குனரும், படத் தொகுப்பாளரும் நிறையவே குழப்பியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் யாராவது ஒருவர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அதிலும், ஹரிஷுக்கும், ஷில்பாவுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் கூட பேச்சுதான் அதிகம் இருக்கிறது.

முத்தக் காட்சிகள் தமிழ் சினிமாவில் சர்வ சாதாரணமாக வர ஆரம்பித்துவிட்டன. காதல் கொலைகள் தற்போது அதிகமாகி வரும் நிலையில், காதலியைக் கொல்ல காதலன் துடிக்கிறான் என்பது போன்ற காட்சிகளை சமுதாய நலனுடனும் இயக்குனர்கள் பார்க்க வேண்டியது அவசியம். சினிமாதான், அது வணிகம்தான், கூடவே கொஞ்சம் பொறுப்பும் படைப்பாளிகளுக்குத் தேவை.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - கலைந்த சீட்டுக் கட்டு

 

பட குழுவினர்

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓