மான்ஸ்டர்,Monster

மான்ஸ்டர் - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்
தயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்
இயக்கம் - நெல்சன் வெங்கடேசன்
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
வெளியான தேதி - 17 மே 2019
நேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும், எல்லா உயிர்களுக்கும், மனைவி, கணவன், குழந்தைகள் என அன்பு செலுத்த ஜீவன்கள் உள்ளது என்ற உயர்ந்த தத்துவத்தை சொல்லியிருக்கும் படம்.

தமிழ் சினிமாவில் நாய், யானை, குரங்கு, பாம்பு என பல உயிரினங்களை வைத்து எடுக்கப்பட்ட பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எலியை மையமாக வைத்து ஒரு படத்தை இந்த அளவிற்குப் பார்த்ததில்லை என தாரளமாகச் சொல்லலாம்.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், எப்போதோ எலியால் அப்படி அவதியுற்றிருப்பார் போலிருக்கிறது. சொந்தமாக அனுபவிக்கவில்லை என்றால் எலி செய்யும் அக்கிரமங்களை இந்த அளவிற்குக் காட்ட முடியாது. முடிந்த வரையில் சுவாரசியமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார். சில காட்சிகளில் கொஞ்சம் சிக்கி, திக்கித் திணறியிருக்கிறார். கடைசியில் எஸ்ஜே சூர்யா போலவே நாமும் அந்த எலி மீது அனுதாபம் வைக்கும் அளவிற்கு படத்தை முடித்திருக்கிறார்.

மின்சார வாரியத்தில் எஞ்சினியர் ஆக வேலை பார்ப்பவர் எஸ்.ஜே. சூர்யா. வாடகை வீட்டில் இருந்து சிரமப்படுவதைவிட சொந்தமாக ஒரு வீடு வாங்கலாம் என நினைத்து 50 லட்ச ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கி குடி போகிறார். அந்த வீட்டிற்குள் இருக்கும் ஒரு எலி சூர்யாவுக்கு அப்படி ஒரு தொந்தரவைத் தருகிறது. சிறுவயதிலிருந்தே வள்ளலார் வழியில் வந்ததால் அந்த எலியைக் கொல்ல முடியாமல் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அந்த எலியைப் பிடிக்கிறார். ஆனால், உயிருடன் கொண்டு போய் விடுகிறார். இருந்தாலும் அந்த எலி மீண்டும் பிளாட்டுக்குள் வந்துவிடுகிறது. அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரியா பவானி சங்கர் ஆசையாகக் கேட்டதால் வாங்கி வைத்த 5 லட்ச ரூபாய் சோபாவைக் கூட கடித்துக் குதறி விடுகிறது. அதனால், எலியைக் கொல்ல முடிவெடுக்கிறார் சூர்யா. அவர் அந்த எலியைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எஸ்.ஜே.சூர்யாவுக்கென்றே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போலிருக்கிறது. ஒரு முதிர்கண்ணனாக அப்படியே அந்தக் கதாபாத்திரத்திற்குள் நுழைந்துவிட்டார். தனக்குத் திருமணம் நடந்துவிடாதா என்ற ஏக்கம், பிரியாவைப் பார்த்ததும் பொங்கி வரும், எலியின் சேட்டைகளைப் பார்த்து பொங்கி வரும் கோபம் என நடிப்பில் மான்ஸ்டர் ஆக மிரள வைக்கிறார்.

பிரியா பவானி சங்கருக்கு காதலிக்க வேலையில்லை. அப்படியே பாந்தமாய் வந்து சூர்யாவைப் பார்த்து காதல் பார்வை பார்த்துவிட்டுச் செல்கிறார். படத்தில் ஒரு அழகான நாயகி இருக்க வேண்டும் என்பதற்காகவே சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

கருணாகரன்தான் காமெடிக்குப் பொறுப்பு. சின்னச் சின்ன ஒன் லைனர்களில் அசத்துகிறார். அதிலும், பால், டீத்தூள், சர்க்கரை வாங்கி வரும் காட்சியில் நம்மையும் மீறி சத்தமாகவே சிரிக்கத் தோன்றுகிறது. இவரை இன்னும் இயக்குனர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று மட்டும் தெரிகிறது.

சூர்யா, எலி, அந்த பிளாட் இதுதான் படத்தின் அதிக நேரத்தை ஆக்கிரமிக்கிறது. அதனால், மற்றவர்கள் கிடைத்த இடங்களில் அவர்கள் இருப்பை நிரூபிக்கிறார்கள். வில்லனாக அனில்குமார், பெரிய வேலையில்லை, இருந்தாலும் சமாளிக்கிறார்.

படத்தின் கலை இயக்குனருக்குத்தான் அதிக வேலை. அவரும் அந்த பிளாட்டுக்குள் காட்சிக்குத் தகுந்தபடி பொருட்களைக் கலைத்து போட்டு புகுந்து விளையாடியிருக்கிறார். ஒரு வீட்டிற்குள்ளேயே எப்படியெல்லாம் ஆங்கிள் வைக்க முடியும் என்பதை தன் ஒளிப்பதிவால் நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பின்னணி இசையும் கூடவே பரபரப்பை ஏற்படுத்துகிறது.

எலியைப் பார்ப்பதற்கு கிராபிக்ஸில் உருவாக்கிய எலி போலவே தெரியவில்லை. எங்கோ ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் தெரிகிறது. அதை உருவாக்கிய குழுவினரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.

ஒரு வரிக்குள் சொல்லிவிடக் கூடிய கதையாக இருந்தாலும் அதை முடிந்தவரை சுவாரசியமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப் பின் திரைக்கதை வீட்டுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வருகிறது. அதனால் கொஞ்சம் நாடகத்தனமாக நகர்கிறது.

வழக்கமான கதைகளைப் பார்த்து போரடித்துள்ள ரசிகர்களுக்கு 'மான்ஸ்டர்' கொஞ்சம் மாறுதலாக இருக்கும்.

மான்ஸ்டர் - மாற்றம்

 

மான்ஸ்டர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மான்ஸ்டர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓