2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி
தயாரிப்பு - நல்லுசாமி பிக்சர்ஸ்
இயக்கம் - சுசீந்திரன்
இசை - இமான்
வெளியான தேதி - 22 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் மண்ணின் வீர விளையாட்டான கபடி விளையாட்டை மையமாக வைத்து தான் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுசீந்திரன். அதற்கடுத்து அவர் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த ஜீவா படமும் ரசிர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த கென்னடி கிளப்பில் பெண்கள் கபடியை மையமாக வைத்து ஒரு நெகிழ்வான படத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஒட்டன்சத்திரத்தில் முன்னாள் ராணுவ வீரர் பாரதிராஜா நடத்தி வரும் கென்னடி கிளப் பெண்கள் கபடி குழுவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழை இளம் பெண்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு ரயில்வேயைச் சேர்ந்த கபடி வீரர் சசிகுமாரும் அவ்வப்போது பயிற்சி கொடுக்கிறார். தேசிய பயிற்சிக்காகச் சென்ற கென்னடி கிளப் வீராங்கனை ஒருவரிடம் தேர்வுக்குழு தலைவர் 30 லட்ச ரூபாய் கொடுத்தால் தேசிய அணியில் இடம் பெற வைக்கிறேன் என்கிறார். அது முடியாததால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவர் காப்பாற்றப்பட்டாலும் மற்ற வீராங்கனைகளின் பெற்றோர் தங்கள் மகள்கள் கபடி ஆடக் கூடாதென சொல்லிவிடுகிறார்கள். இது பற்றி கேள்விப்பட்டு வரும் சசிகுமார் மீண்டும் அவர்களை வரவழைத்து தேசியப் போட்டியில் விளையாட அழைத்துச் செல்கிறார். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பெண்கள் கபடி, கிராமத்துப் பின்னணி, உண்மையான கபடி வீராங்கனைகள் இவை அனைத்தும் படத்தை ரசிக்க வைக்கின்றன. அதே சமயம், தேர்வுக்குழு தலைவரின் அரசியல், தமிழர்களை உதாசீனப்படுத்துவது என இதற்கு முந்தைய விளையாட்டுப் படங்களில் பார்த்த விஷயங்களையே மீண்டும் படத்தில் வைத்திருக்கிறார்கள்.

கபடி கோச்சாக, ரயில்வே கபடி வீரராக சசிகுமார். அவருக்குப் படத்தில் ஜோடி யாருமில்லை. ஒரு டீ ஷர்ட்டை மாட்டி, கழுத்தில் விசிலைத் தொங்க விட்டதிலேயே அவர் கோச் கதாபாத்திரத்திற்குப் அப்படி பொருந்தி விடுகிறார். வழக்கம் போல அமைதியாகப் பேசி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகுமார். சண்டை வேண்டுமென்பதற்காக ஒரு சண்டையைத் திணித்திருக்கிறார்கள்.

கென்னடி கிளப்பின் மொத்த ஜீவனாக பாரதிராஜா. ஆரம்பத்தில் சிறிது நேரமும், கிளைமாக்சிலும் வந்து அழுத்தமாகப் பேசிவிட்டுப் போகிறார். கபடி வீராங்கனைகளாக நடித்திருக்கும் நிஜ வீராங்கனைகள் படத்தையும் விளையாட்டையும் ஒன்றாக சேர்ந்து தாங்கிப் பிடிக்கிறார்கள். வில்லனாக முகேஷ் ஷர்மா. தேர்வுக் குழுத் தலைவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

இமான் இசையில் பின்னணி இசைக்குத்தான் வேலை. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவில் திண்டுக்கல் பகுதியின் இயற்கை அழகு இனிமை.

படத்தில் சுவாரசியமான காட்சிகள் என பல இல்லாதது ஏமாற்றம். கபடிப் பெண் ஒருவரின் திருமணத்தில் மனைவியை அன்றே விளையாட டெல்லிக்கு அனுப்பி வைக்கும் புது மாப்பிள்ளை ஆகியோர் மட்டுமே கலகலக்க வைக்கிறார்கள். தஞ்சாவூர் அணிக்கு கோச்சாக பரோட்டா மாஸ்டர் சூரி இருக்கிறார் என்பதையெல்லாம் நகைச்சுவையில் சேர்த்திருக்கிறார்கள். ஒரு மாநிலப் போட்டியில் ஆட வரும் அணிக்கு கோச்சாக இப்படிக் கூடவா ஒருவரைத் தேர்வு செய்வார்கள்.

கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என நம்மால் முன்கூட்டியே யூகிக்க முடிகிறது. அதில் வைக்கும் ஒரே ஒரு திருப்பமும் சுவாரசியமாக இல்லை. மத்திய அமைச்சரிடம் பாரதிராஜா ஆவேசமாகப் பேசுவதும் நம்பும்படி இல்லை. அதை முழுவதும் உணர்ச்சிபூர்வமாய் அமைத்திருக்கலாம்.

கென்னடி கிளப் - இன்னும் விளையாடியிருக்கலாம்...!

 

பட குழுவினர்

கென்னடி கிளப்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓