பேட்ட,Petta

பேட்ட - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை - அனிருத்
தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்
வெளியான தேதி - 10 ஜனவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 52 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக தனக்கென இருக்கும் ரசிகர்களையும், தன் ஸ்டைலாலும், நடிப்பாலும் கவர்ந்து வருபவர் ரஜினிகாந்த். சிவாஜி படத்திற்குப் பிறகு ஒரு துள்ளலான, இளமையான ரஜினியைப் பார்க்க மாட்டோமா என்று ஏங்கித் தவித்த அவருடைய ரசிகர்களுக்காக மட்டுமே இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், இந்தப் படத்தை அவருடைய படமாகக் கொடுக்காமல் முழுக்க, முழுக்க ரஜினிகாந்த் படமாக மட்டுமே கொடுத்திருக்கிறார்.

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ரஜினியின் ஸ்டைல், மேனரிசம், பன்ச் என கடந்த சில வருடங்களாக பார்க்காமல் போன ரஜினியிசத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தின் சிறப்பு என்று சொன்னால் அது ரஜினிகாந்த் மட்டுமே.

மலைப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் ஹாஸ்டல் வார்டனாக வேலைக்குச் சேர்கிறார் ரஜினிகாந்த். அவருடைய அதிரடியால் கேலி, கொண்டாட்டம் எனத் திரியும் மாணவர்களைத் தன்வசப்படுத்துகிறார். ஒரு நாள், ஒரு ரவுடி கூட்டம் ஹாஸ்டலுக்குள் நுழைந்து அங்கு படிக்கும் மாணவர் ஒருவரைக் கொல்ல முயற்சிக்கிறது. அந்த ரவுடிகளிடமிருந்து அந்த மாணவரைக் காப்பாற்றுகிறார் ரஜினிகாந்த். அவர் யார் ?, அவர் ஏன் அந்தக் கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்து வார்டனாக வேலைக்குச் சேர்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

மலைப்பிரதேசத்தில் ஆரம்பமாகும் கதை, பிளாஷ்பேக்கில் மதுரைக்கு நகர்ந்து, வடஇந்தியாவில் வந்து முடிகிறது. படம் முழுவதும் ரஜினி, ரஜினி, ரஜினி என்றுதான் சொல்ல முடிகிறது. அவ்வளவு நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தும் அனைவரும் வந்து போவது படத்திற்கு மைனஸ். இடைவேளைக்குப் பின் கதை எங்கெங்கோ பயணித்து, துப்பாக்கி சத்தங்களுடன், சிலபல சினிமாத்தனமான பழி வாங்கலுடன் முடிகிறது. இன்னும் எத்தனை படத்தில்தான் வில்லன் சுடும் துப்பாக்கி குண்டுகள் நாயகன் மீது மட்டும் படாமல் போகிறது என்பதைப் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.

ஹாஸ்டல் வார்டன் ஆக ஒரு சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுக்கிறார் ரஜினிகாந்த். நடுத்தர வயதுத் தோற்றம், ஆனால், 80, 90களில் பார்த்து, பார்த்து ரசித்த அதே ஸ்டைல், மேனரிசம், அந்தத் துள்ளல் அவைதான் படத்தைக் காப்பாற்றுகிறது. அங்கங்கே அரசியல் பன்ச் வசனங்களம் பேசுகிறார் ரஜினிகாந்த். அவர் நடந்து வருவது, உட்காருவது, நடனமாடுவது, பேசுவது, சண்டை போடுவது என தன்னை ஒரு ரஜினி ரசிகனாக மாற்றிக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதிலும் பிளாஷ்பேக்கில் வரும் அந்த இளமை ரஜினிகாந்த், இன்னும் கொஞ்ச நேரம் வர மாட்டாரா என ரசிகர்களை ஏங்க வைப்பார்.

ரஜினியை ஜோடி இல்லாமல் கூட படத்தில் காட்டியிருக்கலாம். பிளாஷ்பேக்கில் த்ரிஷாவாவது ரஜினியின் மனைவியாக வந்து ஓரிரு வசனம் பேசுகிறார். ஆனால், சிம்ரன், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் எதற்கு என்று தெரியவில்லை. கல்லூரியில் படிக்கும் பெண்ணிற்கு அம்மாவாக இருக்கும் சிம்ரனை, ரஜினி சைட் அடிப்பதெல்லாம் ஓவரோ ஓவர். ரஜினியுடன் நடித்துவிட்டோம் என சிம்ரன், த்ரிஷா இருவரும் பேட்டிகளில் சொல்லிக் கொள்ளலாம். இந்தப் படத்தினால் அவர்களுக்குக் கிடைத்த பலன் அவ்வளவே.

பிளாஷ்பேக்கில் ரஜினியின் நெருங்கிய நண்பராக, தம்பியாக சசிகுமார். இவரின் காதலுக்காக கொலை செய்து சிறைக்கும் செல்கிறார் ரஜினிகாந்த். வில்லனாக நவாசுதீன் சித்திக். மதுரைப் பின்னணிக் குடும்பத்தில் அவருடைய வடஇந்திய முகம் ஒட்ட மறுக்கிறது.

அவரின் மகனாக விஜய் சேதுபதி. இருவரும் வட இந்தியாவில், உத்திரபிரதேசத்தில் இருந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு, கூடவே தமிழ்நாட்டில் இருக்கும் பழைய பகைக்குப் பழி வாங்குகிறார்கள். விஜய் சேதுபதியை இவ்வளவு வீணடித்திருக்க வேண்டாம்.

இளம் காதல் ஜோடிகளாக சனன்த் ரெட்டி, மேகா ஆகாஷ். சீனியல் கல்லூரி மாணவராக பாபி சிம்ஹா. ஒரு சில காட்சிகளில் மகேந்திரன், குரு சோமசுந்தரம், மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன், முனிஷ்காந்த் என பல நட்சத்திரங்கள்.

அனிருத் இசையில் எத்தனை சந்தோஷம் பாடலை ரஜினிகாந்தின் நடனத்திற்காகவே பார்த்து ரசிக்கலாம்.

இடைவேளைக்குப் பின் படம் எதை நோக்கிப் போகிறது என்பது தெளிவில்லாத திரைக்கதையால் அல்லாடுகிறது. நினைத்தால் துப்பாக்கியை எடுத்து தாறுமாறாக சுட்டுத் தள்ளுகிறார்கள். பிளாஷ்பேக்கில் கூட ரஜினிகாந்த் அப்படி துப்பாக்கியை எடுத்து ஒருவரை ஊருக்கு முன்பாக சர்வசாதாரணமாக சுட்டுத் தள்ளுகிறார். வில்லனைத் தேடி ரஜினிகாந்த் உத்திரப் பிரதேசம் சென்றவுடன், காட்சிக்குக் காட்சி லாஜிக் இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

நண்பன் மகனைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் பணயம் வைத்து ரஜினி எதிரிகளை அழிப்பதுதான் படத்தின் கதை. நண்பன் சென்டிமென்ட்தான் படத்தின் மையம். அவனது வாரிசைக் காப்பாற்ற அவர் ஆக்ஷனில் இறங்குகிறார். ஆனால், அதை உணர்வு பூர்வமாக சொல்லாமல் துப்பாக்கி சத்தங்களுடன் ஒரு சாதாரண பழி வாங்கல் கதையைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ரஜினிகாந்த் படத்தில் இருக்கிறார், ஆனால், ரஜினிகாந்துக்கான படமாக இது இல்லை. பாட்ஷா, சிவாஜி போன்ற படங்களைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கக் கூடிய ரஜினிகாந்த் படத்தை அடுத்து யாராவது தருவார்களா என்ற ஏக்கம் தொடர்கிறது.

பேட்ட - ரஜினி ஏரியா உள்ள வராத!

 

பேட்ட தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பேட்ட

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

ரஜினிகாந்த்

1950-வது வருடம் டிசம்பர் 12-ந்தேதி பிறந்தவர் ரஜினி. பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி நடிப்பு தாகத்துடன் சென்னை வந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்தபோது, 1975ம் ஆண்டு தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை வில்லனாக அறிமுகம் செய்தார் கே.பாலசந்தர். அதோடு ஏற்கனவே சிவாஜி என்ற பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்ததால் சிவாஜிராவ் என்ற பெயர் அவருக்கு சரிவராது என்று ரஜினிகாந்த் என்றும் மாற்றி வைத்தார் பாலசந்தர்.


அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்ததால், அவரது நடிப்புக்கு வரவேற்பு ஏற்பட்டது. பின்னர் சில படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, அதையடுத்து ஹீரோவாக அவதரித்தார். சில படங்களிலேயே அவருக்கென்று ஒரு தனி பாணி உருவாகியதால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றார். அப்படி சினிமாவில் நடிக்க வந்த ரஜினி இன்றுவரை முடிசூடா மன்னராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த மன்னனுக்கு இன்று(டிச., 12ம் தேதி) 69வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவரது லிங்கா படமும் வெளிவர இருக்கிறது. அதனால் இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.

மேலும் விமர்சனம் ↓