1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சத்யராஜ், வரலட்சுமி, கிஷோர், விவேக் ராஜகோபால், யோகி பாபு மற்றும் பலர்.
இயக்கம் - கே.எம். சர்ஜுன்
இசை - சுந்தரமூர்த்தி
தயாரிப்பு - டைம்லைன் சினிமாஸ்

தமிழ் சினிமாவில் கடத்தல் படங்கள் என்றால் ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், குழந்தை கடத்தல் படங்கள் தான் அதிகம் வரும். இந்தப் படத்தில் ஒரு இளம் பெண்ணை, அதுவும் பணக்காரப் பெண்ணைக் கடத்துகிறார்கள்.

ஒரு கடத்தல் படத்தில் கடத்தப்பட்ட பெண்ணின் அப்பா அல்லது அம்மா பாசத்தைத்தான் காட்டுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் வித்தியாசமாக அந்தக் கடத்தலை விசாரிக்கும் ஓய்வு பெற்ற டிஐஜி அவருடைய குட்டி மகள் பாசத்தைக் காட்டியிருப்பது தான் வித்தியாசம். ஆனாலும், பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாமல் கதை சாதாரணமாகப் பயணிப்பது பெரிய சுவாரசியத்தைத் தரவில்லை.

பரபரப்பாகப் பேசப்பட்ட 'லட்சுமி' என்ற குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் முதல் படம். ஒரு நாயகன், நாயகி, வில்லன் என அவர்களைச் சுற்றிய வழக்கமான சினிமாவாக இந்தப் படத்தைக் கொடுக்காமல் இருப்பதில் வித்தியாசப்படுகிறார். கதாபாத்திரங்களுக்காகத்தான் நடிகர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இருப்பினும் முக்கிய கதாபாத்திரங்கள் பொய்யான மனிதர்களாக இருப்பதால் நமக்கும் ஈடுபாடு வரவில்லை.

கொலைப் பழிக்காக சிறைக்குச் சென்றுத் திரும்பிய கிஷோர், தன் மைத்துனன் விவேக் ராஜகோபாலிடம் வருகிறார். விவேக் பைக்கைத் திருடுவதைத் தொழிலாகக் கொண்டவர். இருவரும் சேர்ந்து ஒருவரைக் கடத்தி வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். பணக்கார வீட்டுப் பெண்ணான வரலட்சுமியைக் கடத்துகிறார்கள். அந்தக் கடத்தலைக் கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற டிஐஜி சத்யராஜிடம் வருகிறார் வரலட்சுமியின் அப்பா. இந்தக் கடத்தலை வைத்து கிஷோர், விவேக் ராஜகோபால், வரலட்சுமி, சத்யராஜ் தனித் தனியாக ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் நாயகன், நாயகி என தனியாக யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஐந்து முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுகள் தான் படத்தின் மையம்.

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சத்யராஜ், திருமணமாகி முப்பது வருடங்களுக்குப் பிறகு பிறந்த அவருடைய நோயுற்ற குட்டி மகளைத் தனியாகக் கவனித்துக் கொள்கிறார். அந்த நிலைமையிலும் வரலட்சுமியைக் கடத்தியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார். சத்யராஜ் நடிக்கிறார் என்றாலே வசனங்களிலாவது ஒரு 'குத்து' இருக்கும். அது படத்தில் ஒரே ஒரு இடத்தில்தான் இருக்கிறது. மற்றபடி சத்யராஜ் எந்தவிதமான பெரிய ஹீரோயிசமும் செய்யவில்லை.

வரலட்சுமியைக் கடத்தும் வேலையை திட்டம் தீட்டி செயல்படுத்தும் மாமா கிஷோர், மச்சான் விவேக் ராஜகோபால். 8 கோடி கேட்டு வரலட்சுமியைக் கடத்துகிறார்கள். அந்தப் பணத்தை வைத்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். ஆனால், இவர்கள் கடத்தல் சம்பவத்தில் எந்த ஒரு பரபரப்போ, விறுவிறுப்போ இல்லை. எல்லாம் ஒரு நாடகத்தனமாகவே நகர்கிறது. அந்த கடத்தலில் உள்ள ஒரே ஒரு டிவிஸ்ட் கூட பின்னர் கதைக்குப் பெரிதாகப் பயன்படவில்லை. கிஷோர், விவேக் ராஜா கோபால் இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்.

கடத்தப்படும் பெண்ணாக வரலட்சுமி. தான் கடத்தப்பட்டுவிட்டோம் என்பதில் கூட அவர் முகத்தில் பெரிய பதட்டம் தெரியவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் லேசாக கண்ணீர் விடுகிறார். இந்த மொத்த கடத்தல் எபிசோடே ஒரு பதட்டத்தை வர வைக்க வேண்டாமா, அது முற்றிலுமாக மிஸ்ஸிங்.

மற்ற கதாபாத்திரங்களில் சில காட்சிகளில் யோகி பாபு தலைகாட்டுகிறார். சத்யராஜின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இயல்பாக நடித்து பரிதாபப்பட வைக்கிறார்.

இப்படிப்பட்ட படத்திற்குப் பாடல்கள் அவசியமில்லை. ஆனால், மிகச் சுமாரான படமாக்கலில், இசையில் பாடல்கள் வேறு வந்து போகிறது. வரலட்சுமி கடத்தப்படும் ஒரு அறை, சத்யராஜ் வீடு என இரண்டு இடங்களில்தான் பெரும்பாலான காட்சிகள் நகர்கிறது. முடிந்தவரை ஒளிப்பதிவாளரும், படத் தொகுப்பாளரும் உழைத்திருக்கிறார்கள்.

'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என பெயரை நீளமாகப் படித்ததும் ஏதோ மிரட்டலான ஒரு த்ரில்லரைக் கொடுக்கப் போகிறார்கள் என்று பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம்.

எச்சரிக்கை - ரசிகர்களுக்கும் சேர்த்துதான்...!

 

பட குழுவினர்

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓