எம்பிரான்,Embiran

எம்பிரான் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ரெஜித் பிரசன்னா, ராதிகா ப்ரீத்தி மற்றும் பலர்
தயாரிப்பு - பஞ்சவர்ணம் பிலிம்ஸ்
இயக்கம் - கிருஷ்ணபாண்டி
இசை - பிரசன்னா
வெளியான தேதி - 22 மார்ச் 2019
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2/5

தமிழ் சினிமாவில் இன்னும் சொல்லப்படாத காதல் கதைகள் நிறையவே இருக்கின்றன. காதலர்களைச் சேர்த்து வைக்க யார், யாரோ உதவி செய்த தமிழ் சினிமாக் கதைகளில் ஒரு 'ஆத்மா' காதலை சேர்த்து வைக்கத் துடிக்கிறது.

இயக்குனர் கிருஷ்ணபாண்டி ஒரு மாறுபட்ட காதல் கதையை யோசித்திருந்தாலும், திரைக்கதையில் வித்தியாசத்தைக் காட்டாமல் கொஞ்சம் சோதனை செய்துவிட்டார். அதிலும் டாக்டர் நாயகனைப் பார்க்க, நாயகி தனக்கு ஏதாவது அடிபட வைக்கவோ, ஜுரம் வர வைக்கவோ முயலும் காட்சியை பதினைந்து நிமிடமாவது காட்டி, நீட்டி முழக்கிவிட்டார்.

படத்தில் மொத்தமாக ஐந்தே ஐந்து கதாபாத்திரங்கள்தான். அவர்களுக்குள்ளாகவே கதை பயணிப்பது ஒரு சீரியல் தன்மையைத் தருகிறது. இருந்தாலும் படத்தின் அழகான நாயகி ராதிகா பிரீத்தியின் நடிப்பு அவற்றைக் கொஞ்சமாகவாவது சரி செய்து விடுகிறது. நாயகன் ரெஜித் மேனன் தமிழ் உச்சரிப்பில் மலையாள வாசம் அடிக்கிறது. இப்படி சிறு சிறு குறைகள் இருந்தாலும், 2 மணி நேரத்திற்கும் குறைவான ஒரு படம் என்பதால் அதற்குள் ஒரு அழகான காதலைக் கொடுத்து ரசிக்க வைக்கிறார் இயக்குனர்.

ரெஜித் மேனன் ஒரு டாக்டர். தாத்தா மௌலி வளர்ப்பான ராதிகா ப்ரீத்தி, ரெஜித் மேனனுக்குத் தெரியாமல் அவரை ஒருதலையாய் காதலிக்கிறார். ஒரு விபத்தில் தாத்தா இறந்துவிட, ராதிகா பலமாக அடிப்பட்டு சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ரெஜித்துக்கு அடிக்கடி கனவில் யாரோ ஒரு பெண்ணும், தாத்தாவும் வருகிறார்கள். அதனால், பாதிக்கப்படுபவர் அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறார். கனவில் வருவது ராதிகா ப்ரீத்தி, மௌலி என்பதைக் கண்டுபிடிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் நாயகன் ரெஜித், அவருடைய அம்மா கல்யாணி நடராஜன், நாயகி ராதிகா ப்ரீத்தி, அவருடைய தாத்தா மௌலி, ரெஜித்தின் நண்பர் ஒருவர் என ஐந்தே ஐந்து பேரைச் சுற்றித்தான் படம் நகர்கிறது. மொத்தமாக படத்தில் பத்தே பத்து காட்சிகளைத்தான் வைத்திருப்பார்கள் போன்றிருக்கிறது.

விக்ரமன் இயக்கிய 'நினைத்தது யாரோ' படத்தில் நாயகனாக நடித்த ரெஜித் மேனன், இந்தப் படத்தின் நாயகன். டாக்டர் தோற்றத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார். நடிப்பைக் கொட்டுவதற்கான காட்சிகள் இல்லை, ஸ்மார்ட்டாக வந்து போகிறார்.

ராதிகா ப்ரீத்தி, அழகான ஒரு அறிமுகம். இயல்பாக, எளிமையாக இருக்கிறார். நாயகனைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் தமிழ்த் திரைப்பட நாயகிகளைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. இடைவேளைக்குப் பின் படுத்த படுக்கையில், எங்கோ பார்க்கும் பார்வையுடன் நோயாளியாகக் கூட பொருத்தமாக நடித்திருக்கிறார். முயற்சித்தால் தமிழில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.

பேத்தி மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கும் தாத்தாவாக மௌலி நடித்திருக்கிறார். வழக்கமான அம்மா கதாபாத்திரத்தில் கல்யாணி நடராஜன். படத்தில் வில்லன்கள் கிடையாது, நகைச்சுவை கிடையாது. காதல் படமாக இருந்தாலும் மனதைக் கவரும் காதல் பாடல்கள் கிடையாது.

ஆத்மா, கனவு என ஒரு காதல் படத்தில் சில 'த்ரில்' ஆன விஷயங்களைச் சேர்த்த இயக்குனர், இன்னும் கொஞ்சம் சுவாரசியமான காட்சிகள், இனிமையான பாடல்கள் என சேர்த்திருந்தால் ஒரு அழகான காதல் படமாக 'எம்பிரான்' வந்திருக்கும். ஆனால், இதுவோ போதும் என்று இயக்குனர் திருப்தியடைந்திருப்பார் போலிருக்கிறது.

எம்பிரான் - காதல் ஏக்கம்

 

பட குழுவினர்

எம்பிரான்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓