2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜீவா, ஷாலினி பான்டே
தயாரிப்பு - ஆல் இன் பிக்சர்ஸ்
இயக்கம் - டான் சான்டி
இசை - சாம் சிஎஸ்
வெளியான தேதி - 13 ஜுலை 2019
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் இயக்குனர் இராம.நாராயணன் காலத்திற்குப் பிறகு மிருகங்களை வைத்து படமெடுப்பது மிகவும் குறைந்து போய்விட்டது. விலங்குகள் நல வாரியம் விதித்த கடும் கட்டுப்பாடுகளால் பலரும் அப்படியான படங்களை எடுப்பதை நிறுத்திவிட்டார்கள்.

அப்படியே எடுக்க வேண்டும் என்றாலும் வெளிநாடுகளுக்குச் சென்று எடுத்து வருகிறார்கள். இருந்தாலும், இராம.நாராயணன் எடுத்த படங்களே பரவாயில்லை என்று சொல்லுமளவிற்குத்தான் இப்போது மிருகங்களை வைத்து படமெடுப்பவர்கள் எடுக்கிறார்கள்.

'கொரில்லா' எனத் தலைப்பு வைத்துவிட்டு, கொரில்லாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எதையெதையோ காட்சிகளாகச் சேர்த்து ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் டான் சான்டி.

ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஜீவா அவருடைய தம்பி போல ஒரு கொரில்லாவை வளர்த்து வருகிறார். ஜீவா, பேருந்தில் டிக்கெட் வாங்குபவர்களிடம் ஏமாற்றுவது, மருந்துக் கடையில் ஏமாற்றுவது, போலி டாக்டராக நடித்து ஏமாற்றுவது என பல பித்தலாட்ட வேலைகளைச் செய்கிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் மூவரும் சேர்ந்து வங்கி ஒன்றில் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டு, நான்காவதாக ஒருவரையும் கூட்டணி சேர்த்துக் கொண்டு, கொரில்லாவுடன் கொள்ளை அடிக்கச் செல்கிறார்கள். அங்கு உள்ளவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு 20 கோடி ரூபாய் வேண்டுமென அரசாங்கத்திடம் கேட்கிறார்கள். பின்னர் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்கிறார்கள். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தக் கதையில் அப்படி என்ன இருக்கிறது என்று இதை படமாக்க முன் வந்தார்கள் எனத் தெரியவில்லை. கொரில்லாவைக் கூட சரியாகக் காட்டவில்லை. அது செய்யும் விஷயங்கள் ஒன்று கூட சுவாரசியமாக இல்லை. கிளைமாக்சில் மட்டும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறது, அவ்வளவுதான்.

ஜீவா இதுவரை நடித்த படங்களில் 'ராம், கோ' ஆகிய இரண்டு படங்களைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியான படங்களிலும், கதாபாத்திரங்களிலும் அவர் நடிக்கவில்லை என்பதுதான் உண்மை. அது இந்தப் படத்திலும் தொடர்கிறது.

வங்கியில் கொள்ளை அடிக்கச் செல்லும் போது பர்தா அணிந்து கொள்வது, முகத்தில் முகமூடி அணிந்து கொள்வது என சிறுபிள்ளைத்தனமான காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். திடீரென பெண் குரலில் பேசுகிறார்கள், திடீரென ஆண் குரலில் பேசுகிறார்கள். எந்த ஸ்கிரிப்டும் எழுதாமல் அப்படியே விளையாட்டாகப் பேசுங்கள் என்று சொல்லி எடுத்தது போல் காட்சிகள் நகர்கிறது.

சதீஷ் தான் பேசுவதுதான் காமெடி என்பதை என்றைக்கு மாற்றிக் கொள்ளப் போகிறாரோ... நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த விவேக் பிரசன்னாவையும் வீணடித்திருக்கிறார்கள். வங்கிக்குள் சென்ற பிறகு திடீரென யோகி பாபு கதாபாத்திரத்தையும் நுழைத்து விட்டார்கள். அவரும் என்னென்னமோ பேசுகிறார். ஆனால், சிரிப்புதான் வரவில்லை.

ஷாலினி பாண்டே படத்தில் நாயகி. ஜீவாவுடன் முதல் காட்சியில் சண்டை போடுகிறார். அடுத்த காட்சியில் சமாதானம் ஆகிறார். மூன்றாவது காட்சியில் டூயட் பாடுகிறார்.

கொரில்லாவாக 'ஙோ' என்ற சிம்பன்சி நடித்திருக்கிறது. யாரைப் பார்த்தாலும் கட்டிப் பிடித்துக் கொள்கிறது. ஆண்களாக இருந்தால் மர்மதேசத்தில் அடிக்கிறது. அதன் பல காட்சிகளை சென்சார் கத்தரித்துவிட்டதாக படக்குழுவினர் சொல்கிறார்கள்.

ஒரு வங்கி, அதன் வெளியே சாலை, சில கடைகள் என போட்டிருக்கும் செட் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். பாடல்களும், பின்னணி இசையும் படத்தில் எங்கிருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது.

விவசாயம், விவசாயி என இன்னும் எத்தனை படங்களில் ஒரு சீரியசான விஷயத்தை எந்த பொறுப்பும் இல்லாமல் பயன்படுத்துவார்களோ தெரியவில்லை. விவசாயிகளைக் கேவலப்படுத்தும் வசனம் கூட படத்தில் இருக்கிறது. எந்தவிதமான பொறுப்புணர்வும் இல்லாமல் தரமில்லாத ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

கொரில்லா - 'கொர்'ரில்லா...

 

பட குழுவினர்

கொரில்லா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓