1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சசிகுமார், நந்திதா ஸ்வேதா, வசுமித்ரா மற்றும் பலர்
இயக்கம் - மருதுபாண்டியன்
இசை - கோவிந்த் மேனன்
தயாரிப்பு - 7 ஸ்கீரீன் ஸ்டுடியோ

தமிழ் சினிமா இளைஞர்களின், புதியவர்களின் வரவுகளால் எவ்வளவோ மாறிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் புதுமையான கதைகளைச் சொல்கிறோம் என சிலர் நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறார்கள். அப்படி நம் பொறுமையை சோதிக்கும் ஒரு படம்தான் இந்த அசுரவதம்.

ஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடக்கும் கதை. கெட்டவன் என்று சொல்வதைவிட வாழத் தகுதியற்றவன் என்று கூட அந்த கெட்டவனைச் சொல்லலாம். அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்ட கதாபாத்திரங்களை சினிமாவில் கூட காட்டுவதைத் தவிர்ப்பதே இந்த சமுதாயத்திற்கு செய்யும் நல்லது எனலாம்.

ஒரு வரிக் கதை, மளிகைக் கடை வைத்திருக்கும் வசுமித்ரா பயப்படும்படியாக இரவு, பகல் பார்க்காமல் சசிகுமார் திடீர் திடீரென பயமுறுத்துகிறார். தன்னை சசிகுமார் எதற்காக இப்படி செய்கிறார் என்று தெரியாமல் மிரண்டு போகிறார் வசுமித்ரா. நண்பன் ராஜசிம்மன் உதவியுடன் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித்ரவியிடம் அடைக்கலம் ஆகிறார். அவரது திட்டப்படி சசிகுமாரை மடக்கிப் பிடிக்கிறார்கள். வசுமித்ராவை சசிகுமார் எதற்காக அப்படி பயமுறுத்துகிறார் என்பதுதான் மீதிக் கதை.

பத்து நிமிடத்திற்குள் சொல்லி முடிக்க வேண்டிய ஒரு கதையை 2 மணி நேரத்திற்கு இ.....ழுத்து சொல்லியிருக்கிறார்கள். படத்தின் இடைவேளை வரை வில்லன் வசுமித்ராவை நாயகன் சசிகுமார் துரத்துகிறார், துரத்துகிறார், துரத்திக் கொண்டே இருக்கிறார். எதற்காக அந்தத் துரத்தல் என்பதை சீக்கிரம் சொல்லி முடிங்கப்பா என தியேட்டரில் குரல் கேட்கிறது. இடைவேளைக்குப் பின்தான் அவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை என்பதை சொல்கிறார்கள். அந்தப் பிரச்சினைக்கான காரணத்தை திரையில் பார்ப்பதற்குக் கூட ஒரு மன தைரியம் வேண்டும்.

சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது படத்தை இயக்கிய மருதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் இது. ஒவ்வொரு காட்சியையும் மிக நீளமாக எழுதியிருக்கிறார். அதில் சில வரி வசனங்கள் மட்டுமே. மொத்தமாக பத்து நீளமான காட்சிகளில் படத்தை முடித்துவிட்டது போன்ற ஒரு உணர்வு. இதுவே ஒருவித அலுப்பை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்து என்ன என்ற வேகத்தில் திரைக்கதை நகராமல் அப்படியே ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கிறது. படத்தின் இடைவேளை வரை ஒரு வீடு, ஒரு கடை, இடைவேளைக்குப் பின் ஒரு லாட்ஜ், ஒரு மலைப் பிரதேசம் மொத்த படத்தையும் முடித்துவிட்டார்கள். குறும்பட காலத்தில் ஒரு குறும்படத்தையே முழுநீளப்படமாக எடுத்திருக்கிறார் மருதுபாண்டியன்.

சசிகுமார் இடைவேளை வரை சிகரெட் புகைத்துக் கொண்டே வசுமித்ரா வீட்டின் முன் நிற்கிறார், கடை முன் நிற்கிறார், வயல்வெளியில் நிற்கிறார், சாலையில் துரத்துகிறார், ஒரு நாலு வரியாவது டயலாக் பேசியிருப்பாரா என்பது சந்தேகம்தான். இப்படி ஒரு கதையை அவர் எப்படி தேர்வு செய்து நடித்தார் என்பது ஆச்சரியம்தான். ஒருவேளை பிளாஷ்பேக்கில் வரும் அவரது குடும்பக் காட்சிகளும், அந்த கொடுமையான ஒரு காட்சியும் அவரை நெகிழ வைத்திருக்கும் போலிருக்கிறது. நாடோடிகள் 2விற்காகக் காத்திருக்கிறோம் சசிகுமார் அவர்களே.

சசிகுமாரின் மனைவியாக நந்திதா ஸ்வேதா, நான்கு காட்சிகள், இரண்டு வரி வசனங்கள் அத்துடன் அவருடைய வேலை முடிந்துவிடுகிறது.

அனைவருக்குமாக சேர்த்து வில்லன் வசுமித்ரா பேசுகிறார், கதறுகிறார், துடிக்கிறார், ஆவேசப்படுகிறார், நமக்கு புரியாதபடி என்னென்னமோ உளறுகிறார், அனைத்துமே ஓவர் ஆக்டிங். சைக்கோத்தனமான கதாபாத்திரம் என்பதால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ராஜசிம்மன், ஸ்ரீஜித் ரவி , நமோநாராயணன் வில்லனுக்கு உதவி செய்பவர்களாக சில காட்சிகளில் நினைவில் நிற்கும் அளவிற்கு வந்து போகிறார்கள். சசிகுமாரின் செல்ல மகளாக பவித்ரா, படபடப்பைக் கூட்டுகிறார்.

நீளமான காட்சிகளில் வசனம் இல்லாததால் பின்னணி இசையால் அவற்றை நிரப்புகிறார் கோவிந்த் மேனன். எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் பிரேமிங்குகள் அருமை. ஆனால், படத்தைப் பார்ப்பதற்கு பழைய படம் போன்ற கலர் டோனை வைத்ததன் காரணம் என்னவோ ?.

வழக்கமான பழி வாங்கும் கதைதான், எதற்காக நாயகன் பழி வாங்குகிறார் என்பதை மட்டும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. சினிமாத்தனமான கொடூரமான கிளைமாக்சாக முடிப்பதற்குப் பதிலாக மாற்றி யோசித்திருக்கலாம்.

அசுரவதம் - பேரதிர்ச்சி

 

பட குழுவினர்

அசுரவதம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓