2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப்
இயக்கம் - அஜய் ஞானமுத்து
தயாரிப்பு - கேமியோ பிலிம்ஸ்
இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி

'டிமாண்டி காலனி' என்ற வித்தியாசமான பேய் படத்தைக் கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் 'இமைக்கா நொடிகள்'.

முதல் படத்தில் தன்னை நம்பிய இயக்குனர் இந்தப் படத்தில் நயன்தாராவை நம்பியிருக்கிறார். படத்தின் டைட்டிலில் கூட அதர்வா பெயருக்கு முன்பாக நயன்தாரா பெயர் தான் இடம் பெறுகிறது.

த்ரில்லர் கதை என்று முடிவு செய்துவிட்ட பிறகு அதிலேயே முற்றிலும் பயணிக்காமல், அதர்வா - ராஷி கண்ணா காதல், என இவர்களின் காதல் நிமிடங்கள் திரையில் பார்க்க மணிக் கணக்காகத் தெரிந்து நொடிகளின் விறுவிறுப்பைக் குறைத்து விடுகிறது.

சீரியல் கில்லர் கதைகள் தமிழ் சினிமாவில் அபூர்வமாகத்தான் வரும். அந்த விதத்தில் வந்திருக்கும் படம் இது. ஆனால், யார் அந்த சீரியல் கில்லர் என்பதில் இயக்குனர் வைத்திருக்கும் திருப்பம் தான் படத்திற்குப் புதிது. மற்றபடி காட்சிகள் அமைப்பில் பல இடங்களில் 'காதுல பூ' சமாச்சாராங்கள் நிறையவே உண்டு. அவற்றைத் தவிர்த்திருந்தால் ஒரு நிறைவான தரமான படமாக இந்தப் படம் அமைந்திருக்கும்.

படத்தின் கதை முழுவதும் பெங்களூருவில் நடக்கிறது. எல்லாருமே தமிழிலேயே பேசுகிறார்கள். பெயருக்கு ஒரு சில இடங்களில் மட்டும் கன்னடம் காதில் விழுகிறது.

பெங்களூரு நகரையே அதிர வைக்கும் விஐபி வாரிசுகளின் கொலை வழக்கை சிபிஐ அதிகாரியான நயன்தாரா விசாரித்து வருகிறார். நயன்தாராவின் தம்பி அதர்வாவின் காதலியான ராஷி கண்ணாவை, அந்தக் கொலைகளை செய்து வரும் கொலைகாரன் கடத்தி விடுகிறான். மேலும், அதர்வா தான் அந்த சீரியல் கில்லர் என நம்ப வைக்கும் அளவிற்கு அந்த கொலைகாரன் நாடகமாடுகிறான். காதலியைக் காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் அதர்வா?. அதில் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் இ.....ழுத்து சொல்லப்பட்டிருக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே கதை நயன்தாராவுக்கான முக்கியத்துவத்திலேயே நகர்கிறது. இடைவேளைக்குப் பின் அதர்வாவுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நயன்தாராவை 'வீட்டுச் சிறை'யில் வைத்து விட்டு, அதர்வாவை ஆக்ஷன் ஹீரோவாக்கி விடுகிறார்கள். இடைவேளை வரை படத்தின் 'ஹீரோ' நயன்தாரா, இடைவேளைக்குப் பின்னர் படத்தின் 'ஹீரோ' அதர்வா.

நயன்தாரா, வழக்கம் போல எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார். சிபிஐ அதிகாரிக்குரிய மிடுக்கு, கம்பீரத்தில் அவர் குறை வைக்கவில்லை. இடைவேளைக்குப் பின்னும் அதர்வாவிற்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நயன்தாராவுக்கு சண்டைக் காட்சிகளைச் சேர்த்திருந்தால் ஒரு விஜயசாந்தி படத்தைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.

த்ரில்லர் படத்திற்கு விஜய் சேதுபதி, நயன்தாரா இடையிலான காதல் காட்சிகள் கொஞ்ச நேரமே வந்தாலும் யதார்த்தமாய் நிறைவாக அமைந்துள்ளன. அதே சமயம், அதர்வா - ராஷி கண்ணா இடையிலான காதல் காட்சிகள், அவர்களுக்குள் டூயட் பாடல், காதல் தோல்வி பாடல் படத்தின் வேகத்தை ஆரம்பத்திலேயே குறைத்து விடுகிறது. அதர்வா, ஆக்ஷ்னிலும், காதலிலும் குறை வைக்காமல் செய்திருக்கிறார். ராஷி கண்ணா தமிழுக்கு மற்றுமொரு பளபளப்பான அறிமுகம். இன்னும் கொஞ்சம் நடித்தால் முன்னணிக்கு வரலாம்.

விஜய்சேதுபதியை எப்படியோ கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அவருடைய கதாபாத்திரம் பற்றியெல்லாம் பெரிதாக விளக்கவில்லை. நயன்தாராவின் காதலர் என காட்டிவிடுகிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வந்தவருக்கு இன்னும் சிறப்பு செய்திருக்கலாம்.

ஹிந்தித் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் படத்தின் வில்லன். அவருடைய வில்லத்தனம், புதிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால், நாடகத்தில் நடிப்பது போல நடிக்கிறார். நிறுத்தி நிதானமாக அவரைப் பேச வைத்தது ஏனோ..?.

ஹிப்ஹாப் தமிழா இசையில் விஜய் சேதுபதி, நயன்தாராவின் காதல் பாடல் மட்டும் ஓகே. பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் கடுமையாக உழைத்திருக்கிறார். எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன் படத்தின் விறுவிறுப்பை இன்னும் கூட்டியிருக்கலாம்.

போலீசிடமிருந்து அதர்வா தப்பிப்பதும், போலீஸ் கண்ணில் மாட்டாமல் இருக்க ஒரு மாஸ்க்கை மாட்டிக் கொண்டும், சில காட்சிகளில் அது கூட இல்லாமலும் பல இடங்களில் அவர் பயணிப்பது, எத்தனையோ தமிழ்ப் படங்களில் பார்த்து சலித்துப் போன காட்சிகள்.

காலில் ஒரு குண்டு, மார்புப் பகுதியில் ஒரு குண்டு என வாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர் அடுத்த காட்சிகளிலேயே ஓடுகிறார், குதிக்கிறார், பின்னர் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்கிறார். இவையெல்லாம் தமிழ் சினிமாவின் சாபக் கேடான காட்சிகள். இப்படிப்பட்ட காட்சிகளை இந்தப் படத்தில் எதிர்பார்க்கவில்லை.

ஒரு காட்சியில் உயிரோடு இருக்கும் ராஷி கண்ணாவை 'பாடியை இந்த இடத்திலிருந்துதான் இறக்கினோம்' என சிபிஐ அதிகாரியான தேவன் பேசுகிறார். ஒரு உதவி இயக்குனர் கூடவா அந்தத் தவறை கவனிக்கவில்லை.

'டிமாண்டி காலனி' படத்தின் திரைக்கதையில் பல சாமர்த்தியமான காட்சிகளை வைத்த அஜய் ஞானமுத்து இதில் அப்படி சில காட்சிகளையாவது வைத்திருக்கலாம்.

இமைக்கா நொடிகள் - 'சீரியல்' கில்லரின் சீக்ரெட்ஸ்

 

பட குழுவினர்

இமைக்கா நொடிகள்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓