களரி,Kalari

களரி - பட காட்சிகள் ↓

களரி - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கிருஷ்ணா, வித்யா பிரதீப், சம்யுக்தா, விஷ்ணு மற்றும் பலர்.
இயக்கம் - கிரண் சந்த்
இசை - வி.வி. பிரசன்னா
தயாரிப்பு - நக்ஷத்ரா மூவி மேஜிக்

தமிழ் சினிமாவில் அண்ணன், தங்கை பாசக் கதைகளுக்குப் பஞ்சமேயில்லை. இந்தப் படமும் அண்ணன், தங்கை பாசக் கதைதான். கதையின் பின்னணி மட்டும்தான் படத்தில் வித்தியாசம். கேரளாவின் கொச்சி மாநகரில் உள்ள தமிழ் மக்கள் வசிக்கும் இடத்தில் கதை நடப்பதாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அது படத்திற்கு எந்த விதத்திலும் வலிமை சேர்ப்பதாக இல்லை.

இயக்குனர் கிரண் சந்த், ஒரு சென்டிமென்ட் கதையைக் கொடுத்து பெண்களைக் கவர முயற்சித்திருக்கிறார். அண்ணன், தங்கை பாசத்தை உணர்வு பூர்வமாய் காட்டுவதிலும், கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் அக்கறை கொண்டு செய்திருக்கிறார். குடும்பக் கதைகளை ரசிக்கும் மக்களுக்கு இந்தப் படம் ஓரளவிற்குப் பிடிக்கலாம்.

முழுநேரமும் குடித்துக் கொண்டேயிருக்கும் அப்பாவால் சிறு வயதிலிருந்தே மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர் கிருஷ்ணா. எந்த வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் கடை உண்டு என்று இருக்கிறார். அவருடைய தங்கை சம்யுக்தா, கார் டிரைவரான விஷ்ணுவைக் காதலிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விஷ்ணு, சம்யுக்தாவைப் பெண் கேட்டுவர நடக்கும் சண்டையில் காதலர்களான சம்யுக்தா, விஷ்ணு பிரிகிறார்கள். தங்கை சம்யுக்தாவிற்கு, அந்தப் பகுதி பெரிய மனிதரான ஜெயப்பிரகாஷிடம் வேலை செய்யும் கிருஷ்ண தேவாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் சம்யுக்தாவை, விஷ்ணுவுடன் பார்க்கிறார் கிருஷ்ணா. அந்தப் பிரச்சினையில் சம்யுக்தா தற்கொலை செய்து கொள்கிறார். தன் தங்கை மரணத்திற்குக் காரணமான விஷ்ணுவை பழி வாங்க நினைக்கிறார் கிருஷ்ணா. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பாசமான, அப்பாவியான அண்ணனாக கிருஷ்ணா. இதுவரை இவர் நாயகனாக நடித்த படங்களில் இந்தப் படத்தில் நடித்த அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை. இதை அவரே ஒத்துக் கொள்வார். தங்கை மீது பாசத்தை வெளிப்படுத்துவதிலும், தன்னுடைய அப்பாவி குணத்தை வெளிப்படுத்துவதிலும் அந்த முருகேசன் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

அண்ணன், தங்கை பாசக் கதைகளில் கதாநாயகிக்கான முக்கியத்துவத்தை புறம் தள்ளிவிடுகிறார்கள் இயக்குனர்கள். அப்படித்தான் இந்தப் படத்தின் கதாநாயகி வித்யாவின் கதாபாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு காதல் பாடல்களுக்கு மட்டும் நாயகியாக ஆடிப்பாடுகிறார்.

மற்றபடி தங்கையாக நடித்திருக்கும் சம்யுக்தாவிற்குத்தான் படத்தில் முக்கியத்துவம் அதிகம். தமிழ்ப் பெண்ணாகத் தெரிவதைக் காட்டிலும், மலையாளப் பெண்ணாகத்தான் தெரிகிறார். தோற்றத்தில் இருக்கும் எளிமையான அழகு, நடிப்பிலும் இருக்கிறது.

அப்பா கதாபாத்திரத்தில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அச்சு அசல் குடிகாரனாக மாறியிருக்கிறார் எம்.எஸ். பாஸ்கர். சிகப்பான அம்மா மீரா கிருஷ்ணாவிற்கு கருப்பு மேக்கப் போட்டு நடிக்க வைத்திருப்பதற்குப் பதிலாக, கருப்பான அம்மாவையே தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கலாம். பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ், அவருடைய உதவியாளர் கிருஷ்ண தேவா திருப்பமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆபீஸ் விஷ்ணு, சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இந்தப் படத்தில் வில்லனாகிவிட்டார்.

பிரசன்னா இசையில் பாடல்களை ஹிட்டாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். கொச்சிப் பின்னணியில் கதை நகர்ந்தாலும் கொச்சி நகரின் அழகை எந்த இடத்திலும் படத்தில் காட்டவில்லை. நம் ஊர் கிராமத்துப் பக்கம் எடுத்த மாதிரிதான் இடங்கள் இடம் பெறுகின்றன.

கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு குடும்பப் பாங்கான கதைகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர்கள் இம்மாதிரியான சிறிய படங்களையும் ரசித்தால் இப்படிப்பட்ட படங்களும் ஓரளவிற்கு வசூலைப் பெறும்.

களரி - கண்ணீர்

 

களரி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

களரி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓