3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா மற்றும் பலர்
இயக்கம் - நாக் அஷ்வின்
இசை - மிக்கி ஜே மேயர்
தயாரிப்பு - வைஜெயந்தி மூவீஸ்

தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் எடுக்கப்பட்டு வெளியான படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. இதுநாள் வரை இந்தப் படத்தை தமிழிலும் நேரடியாக எடுக்கப்பட்ட படம் போல செய்திகளை வெளியிட்டு படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள்.

படம் வரும் வரை இந்தப் படம் இருமொழிப் படம் என்று பொய் சொல்லலாம். ஆனால், வெளியான பின் படத்தைப் பார்க்கும் ரசிகர்களை எப்படி ஏமாற்ற முடியும். தெலுங்குத் திரையுலகம் சாவித்ரியைக் கொண்டாடுவதற்கு முன்னரே தமிழ்த் திரையுலகம் அவரைக் கொண்டாட ஆரம்பித்தது.

சாவித்ரி வாழ்க்கை வரலாற்றுப் படம் என்றால், அதில் சிவாஜி கணேசன் இடம் பெறாமல் எப்படி ஒரு படத்தை எடுக்க முடியும். ஓரிரு வசனங்களில் அவரது பெயரை இடம் பெறச் செய்ததுடன் சிவாஜி கணேசனை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள்.

சாவித்ரி, ஜெமினிகணேசன் இருவரது காதலும், ரகசிய திருமணமும் தமிழ்த் திரையுலகம் சார்ந்து தான் நடந்தது, அவர்களது வாழ்க்கையும் பெரும்பாலும் சென்னையில் தான் கடந்தது. அப்படிப் பார்த்தால் அதன் பின்னணியில் தமிழ்ப் படங்கள் அதிகம் இடம் பெற்றால் தான் தமிழ் ரசிகர்களையும் கவர முடியும். ஆனால், படத்தில் அனைத்து மேற்கோள் படங்களும் தெலுங்குப் படங்களாகவே அமைந்து, நம்மை ஒரு தெலுங்குப் படம் பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது.

தமிழ்த் திரையுலகம் மறக்க முடியாத ஒரு நடிகை சாவித்ரி. அவரைப் பற்றிய காவியப் படைப்பை கொஞ்சம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை என தமிழ் மொழியிலும் நேரடியாக எடுத்து வெளியிட்டிருக்கலாமே என இயக்குனர் நாக் அஷ்வின்-ஐக் கேட்பதில் தவறில்லை.

சிறு வயதில் விதவைத் தாயுடன் தன்னுடைய பெரியப்பாவிடம் வந்து அடைக்கலம் ஆவதில் இருந்து சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ஆரம்பமாகிறது. விஜயவாடாவுக்கு அருகில் ஒரு கிராமத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, பின்னர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து ஒரு படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடனமாடி பின்னர் தேவதாஸ் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்று, உச்சத்துக்குப் போய், தன்னுடைய குடிப்பழக்கத்தால் சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, சொத்துக்களை இழந்து கோமாவில் விழும் வரை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே பிரதி எடுத்து படமாகத் தந்திருக்கிறார்கள்.

இதற்காக இயக்குனர் நாக் அஷ்வின் மற்ற கலைஞர்கள் அனைவரும் எடுத்துக் கொண்ட கவனம், நம்பிக்கை, உழைப்பு அனைத்துமே பாராட்ட வேண்டியவை. சில காட்சிகளில் பின்னணியில் தமிழ் எழுத்துக்களை ஏதோ கடமைக்கு எழுதியிருப்பது போன்ற சின்னச் சின்ன தவறுகள் தவிர படத்தில் பெரிய தவறுகள் எதுவுமில்லை.

அந்தந்த கால கட்டங்களில் நாமும் திரைக்கு உள்ளேயே போய்விட்டது போன்ற ஒரு உணர்வு. அதற்கு முழுமுதற் காரணம் சாவித்ரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ். இனி, இவரைப் பற்றி யாராவது மீம்ஸ் போட்டால் அது அந்த மீம்ஸ்-க்கே அடுக்காது. சமீப கால தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் மிகத் திறமையான நடிகை என இந்த ஒரு படத்திலேயே தன்னை நிரூபித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

நிஜ சாவித்ரியை நாம் திரையில் பார்க்கும் போது அவரிடம் காணப்பட்ட குழந்தைத்தனம், பாசம், பேச்சு, நளினம் என அனைத்தையும் அப்படியே தனக்குள் ஒரு ஆவியாக நுழைத்துக் கொண்டு சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சிறியதான நெற்றித் திலகத்திலிருந்து அவர் அணியும் புடவை வரை அனைத்தும் அப்படியே சாவித்ரியின் ஸ்டைல்ஐ பிரதிபலிக்கிறது.

இனிமேலும், ஹீரோக்களுடன் ஆடிப்பாடும் கதாநாயகி கதாபாத்திரங்களை ஏற்காதீர்கள் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் உங்களுக்கான ஒரு இடம், ஒரு கதாபாத்திரம் காத்துக் கொண்டிருக்கும்.

முகத் தோற்றத்தில் சாவித்ரி தோற்றத்துடன் கீர்த்தி சுரேஷ் பொருந்திப் போகும் அளவிற்கு, ஜெமினி கணேசன் தோற்றத்தில் துல்கர் சல்மான் பொருத்தமாக இல்லை என்றாலும் நடிப்பில் அசத்திவிட்டார். காதல் மன்னன் என ஜெமினி கணேசனை ஏன் அழைத்தார்கள் என்று இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். கீர்த்தி சுரேஷ் நடிப்பின் முன்னால் சில காட்சிகளில் துல்கர் சல்மான் தவித்துப் போயிருக்கிறார் போலவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஜெமினி கணேசனை கொஞ்சம் வில்லனாகவும் சித்தரித்துவிட்டார்கள். கடைசி காலத்தில் சாவித்ரியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஜெமினி கணேசன் இருந்திருக்கிறார் என்பது படத்தில் உள்ள ஆச்சரியமான தகவல்.

சாவித்ரியின் கதையை 80களின் துவக்கத்தில் தொடர் கட்டுரையாக எழுத ஆரம்பிக்கும் பத்திரிகையாளர் ஆக சமந்தா. அவரைக் காதலிக்கும் புகைப்படக் கலைஞர் ஆக விஜய் தேவரகொன்டா. சாவித்ரியின் பெருமையை இவர்களது கதாபாத்திரங்கள் மூலமும் புரிய வைக்கிறார் இயக்குனர். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவ்வளவு டல் ஆகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன ?.

சாவித்ரியின் பெரியப்பாவாக ராஜேந்திர பிரசாத், படத் தயாரிப்பாளர் சக்ரபாணி ஆக பிரகாஷ்ராஜ், எஸ்.வி.ரங்காராவ் ஆக மோகன்பாபு, சாவித்ரியின் தோழியாக ஷாலினி பாண்டே, ஜெமியின் முதல் மனைவி அலமேலுவாக மாளவிகா நாயர் என படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத் தேர்வும் அருமை.

மிக்கி ஜே மேயர் இசையில் ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்ப பின்னணி இசையை அமைத்திருக்கிறார். டானி-சா-லோ ஒளிப்பதிவும், கோட்டகிரி வெங்கடேஸ்வர்ராவ் படத் தொகுப்பும் படத்திற்கு பக்க பலம்.

கீர்த்தி சுரேஷுக்கான ஆடை வடிவமைப்பைச் செய்த கௌரங், அர்ச்சனா ராவ், ஸ்டைலிஸ்ட் இந்திராக்ஷி பட்நாயக் குறிப்பிட வேண்டியவர்கள். அவர்களது உழைப்புதான் கீர்த்தியை சாவித்ரியாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

அவினாஷ் கொல்லா கலை இயக்கம் படத்தின் பழைய காலத் தோற்றத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறது. தமிழ் எழுத்துக்களில் மட்டும் அவர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இம்மாதிரியான படங்கள் சினிமாவுக்கு வரம். அது தமிழிலும் நேரடிப் பதிவாக இல்லாமல் போனது மட்டுமே வருத்தம்.

நடிகையர் திலகம் - நவரசம்

 

பட குழுவினர்

நடிகையர் திலகம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓