தியா,Diya

தியா - பட காட்சிகள் ↓

தியா - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - நாக சௌரியா, சாய் பல்லவி, பேபி வெரோனிகா மற்றும் பலர்
இயக்கம் - விஜய்
இசை - சாம் சி.எஸ்
தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்

தமிழ் சினிமாவில் இதுவரை பேய் படங்களுக்கென்று ஒரு 'கிராமர்' இருந்தது. இந்த பூமியில் பிறந்து கொஞ்சம் வளர்ந்து அல்லது நிறைய வளர்ந்து யாரோலோ கொல்லப்பட்டவர்கள் தான் பேயாக அலைந்து பழி வாங்கினார்கள் என்று தமிழ் சினிமாவில் கதை சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், பூமியில் பிறப்பதற்கு முன்பே தாயின் வயிற்றில் ஒரு உயிராக உருவான 'கரு' தன்னை ஆரம்பத்திலேயே அழித்தவர்களை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் இந்த 'தியா'.

இயக்குனர் விஜய்யின் சொந்த கற்பனையும் உருவான கதையா அல்லது சுட்ட கதையில் உருவான கற்பனையா என்று தெரியவில்லை. இருந்தாலும் படமாகக் கொடுக்கும் போது ஓரளவிற்கு ரசிக்க வைத்துவிடுவார்.

20 வயதுக்குக் குறைவாக இருக்கும் நாக சௌரியா, சாய் பல்லவி இருவரும் உடல் ரீதியாக இணைய சாய் பல்லவியின் வயிற்றில் ஒரு கரு உருவாகிவிடுகிறது. அடுத்து டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று இருக்கும் சாய்பல்லவி, அதற்குள் தாயானால் அவர் எதிர்காலம் பாதிக்கப்படும் என அவர் அம்மா ரேகா நினைக்கிறார். நாக சௌரியாவின் அப்பா நிழல்கள் ரவியும் சிறு வயதில் மகனுக்குத் திருமணமா என கோபம் அடைகிறார். அதனால் பெரியவர்களாகச் சேர்ந்து அவர்களை 5 வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்கள்.

திருமணம் முடிந்து நாக சௌரியா, சாய் பல்லவி தனி வீட்டுக்கு வந்த பின் நிழல்கள் ரவி, ரேகா, கருக் கலைப்பு செய்த டாக்டர் சுஜிதா, சாய் பல்லவியின் தாய்மாமா ஜெய்குமார், ஆகியோர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இது சாய் பல்லவிக்கு அதிர்ச்சியைத் தருகிறது. ஒரு பக்கம் காவல் துறையும் இதைப் பற்றி விசாரிக்க கொலைகளுக்கான காரணத்தைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

தமிழ் பேசத் தெரிந்த, நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார் சாய் பல்லவி. தமிழில் தான் இவருக்கு முதல் படம். மலையாளம், தெலுங்கில் ஏற்கெனவே நன்றாக நடித்து பெயர் வாங்கிவிட்டதால், இந்த முதல் படத்தில் அவர் பெயர் வாங்குவதில் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்தால் தமிழில் தனி இடத்தைப் பிடித்துவிடலாம்.

தெலுங்கு நடிகர் நாக சௌரியா தமிழில் அறிமுகமாகியிருக்கும் முதல் படம். எப்போதுமே கடுகடுவென இருக்கிறார். உதட்டை அசைக்கிறாரா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அவருக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள். இந்தப் படத்தில் ஏன் தான் நடிக்க சம்மதித்தோமோ என்று நினைத்துக் கொண்டே நடித்திருப்பார் போலிருக்கிறது. ஒரு காட்சியில் கூட அவரது நடிப்பைப் பாராட்ட மனம் வரவில்லை.

குட்டிப் பேய் 'தியா'வாக பேபி வெரோனிகா. பேய் என்றால் வெள்ளை உடைதான் அணிய வேண்டும் என்று யார் எழுதி வைத்தார்களோ?, கருவிலேயே அழிந்தவர் 5 வயது சிறுமி பேயாக வந்தாலும் வெள்ளை கவுனில் தான் வருகிறார். அதிகம் பேசாமல் அம்மாவைப் பார்த்து ரசிக்கிறார், தன்னை அழித்தவர்களைப் பார்த்ததும் ஆவேசப்படுகிறார். இவ்வளவு அழகான குழந்தையாக வர வேண்டியவர்களைக் கருக் கொலை செய்துவிட்டார்களே என நமக்கு அனுதாபவம் வரும் அளவிற்கு ஆரம்பத்திலேயே காட்சியை வைக்கத் தவறிவிட்டார் இயக்குனர்.

நிழல்கள் ரவி, ரேகா, ஜெய்குமார், சுஜிதா ஆகியோர் கொஞ்சமே வந்து பழிவாங்கப்படுகிறார்கள். ஆர்ஜே பாலாஜி பேசுவது எல்லாம் நகைச்சுவை என்று தமிழ் சினிமா தவறான நகைச்சுவைப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

சாம் சிஎஸ் இசையில் 'ஆலாலிலோ...' பாடல் தாலாட்ட வைக்கிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஜெயஸ்ரீ லட்சுமிநாராயணன் கலை இயக்கமும் படத்தில் குறிப்பிட வேண்டியவை. அந்த பிளாட்டை அழகாக இன்டீரியர் செய்திருக்கிறார்கள்.

சென்டிமென்ட்டான படம் என்றால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு இடத்திலாவது 'ஐயோ' என்ற பதற்றம் வர வேண்டும். அதை இந்த 'தியா'வில் தேட வேண்டியிருக்கிறது.

தியா - தீயா வேலை செஞ்சிருக்கலாம்...!

 

தியா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

தியா

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓