2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி
இயக்கம் - ஆறுமுககுமார்
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
தயாரிப்பு - 7 சிஸ் என்டர்டெயின்மென்ட், அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட்

சினிமா என்பதே கற்பனையின் ஒரு திரைவடிவம். அதிலும் நிஜ வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்களை, கதைகளை படமாக்கி ரசிக்க வைப்பார்கள். கற்பனையிலும் அதீத கற்பனையாக உருவாக்கப்படும் படங்கள் பேன்டஸி வகைப் படங்கள். அப்படிப்பட்ட படங்களை இங்கு ரிஸ்க் எடுத்து யாரும் படமாக்குவதில்லை. எப்போதோ ஒரு முறைதான் அப்படிப்பட்ட படங்கள் வருகின்றன.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை அப்படி ஒரு ரிஸ்க் எடுத்து துணிச்சலாக படமாக்கி வெளியிட்டும் இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆறுமுககுமார். விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் என புதிய கூட்டணியை வைத்து வித்தியாசமாக முயற்சித்ததற்கு மட்டும் பாராட்டும், சொல்ல வந்ததை ரசிக்கும்படியாகச் சொல்லாமல் விட்டுவிட்டதற்கு கொஞ்சம் திட்டும் ரசிகர்களிடத்திலிருந்து கிடைக்கும்.

ஆந்திர மாநில மலைப் பிரதேசத்தில் உள்ள மலைக் கிராமமான எமசிங்கபுரம் என்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் வசிக்கும் மலைவாழ் மக்களின் தலைவி மகன் விஜய் சேதுபதி. கொலை செய்யாமல், பெண்களை துன்புறுத்தாமல் திருடுவதை மட்டும தொழிலாகக் கொண்டவர்கள் அந்த ஊர் மக்கள். திருடுவதற்காக சென்னைக்கு வரும் விஜய் சேதுபதி, ஒரு வீட்டில் ஒரு குடும்பத்து போட்டோவைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். அந்த போட்டோவில் இருக்கும் இளம் பெண்ணான நாயகி நிஹரிகாவை கடத்திக் கொண்டு அவர் கிராமத்திற்குச் செல்கிறார். நிஹரிகாவைக் காதலிக்கும் கௌதம் கார்த்திக் காதலியைத் தேடி அந்த கிராமத்தைத் தேடிப் போகிறார். விஜய் சேதுபதியின் கூட்டத்திலும் சிக்கிக் கொள்கிறார். நிஹரிகாவை விஜய் சேதுபதி ஏன் கடத்தினார் ?, கௌதம் கார்த்திக் அந்தக் கூட்டத்திலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

விஜய் சேதுபதி பலவித தோற்றங்களில் வந்து காமெடி செய்கிறேன் என சமயங்களில் கோமாளித்தனமாகவும் செய்கிறார். அவருடைய தோற்றங்கள் சிரிக்க வைப்பதை விட கொஞ்சம் பயமுறுத்தவும் செய்கின்றன. அவருக்குத் துளியும் பொருத்தமில்லாத ஒப்பனைகளும், தோற்ற மாற்றங்களும் அவருடைய நடிப்பையும் சேர்த்து பதம் பார்த்து விடுகின்றன. இருந்தாலும் ஆங்காங்கே விஜய் சேதுபதியின் தனி முத்திரை இருப்பதால் கொஞ்சம் தப்பிக்க முடிகிறது.

கௌதம் கார்த்திக்கை, படத்தில் உள்ள பல கதாபாத்திரங்களும் லூசு என திட்டுகின்றன. அதற்கேற்றாற் போல் அவருடைய கதாபாத்திரமும் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்திலிருக்கும் கதாபாத்திரங்கள் மட்டும் அப்படி திட்டாமல், படம் பார்க்கும் ரசிகர்களும் திட்டினால், அதுவே அவருடைய கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வெற்றி. நகைச்சுவை நடிப்பிலும் நிறைய முயற்சிக்கிறார் கௌதம். படத்திற்குப் படம் மோல்ட் ஆகி வருகிறார்.

இரண்டு நாயகிகள், ஒருவர் நிஹரிகா, மற்றொருவர் காயத்ரி. விஜய் சேதுபதி என்ன செய்தாலும் அதை வெறுப்புடன் பார்க்கும் பேசும் கதாபாத்திரத்தில் நிஹரிகா. விஜய் சேதுபதி என்ன செய்தாலும், அதை ரசித்துப் பார்க்கும், பேசும் கதாபாத்திரத்தில் காயத்ரி. சினிமா நடிகையருக்கென்றே இருக்கும் தனியான முகங்கள் இல்லாமல் யதார்த்தமான முகமாக தன் அறிமுகத்தில் தடம் பதிக்கிறார் நிஹரிகா. காயத்ரிக்கு அதிகம் வேலையில்லை, வரும் காட்சிகளிலும் நிறைவு.

நகைச்சுவையில் விஜய் சேதுபதியின் உதவியாளர்களாக வரும் ரமேஷ் திலக், ராஜ்குமார் ஆகியோரை விட, கௌதம் கார்த்திக்கின் நண்பராக வரும் டேனி சிரிக்க வைக்கிறார். மலைகிராமத்திற்கு அவரும் கௌதமும் சென்ற பின் படத்தைக் கலகலப்பாக்குவதே அவர்தான்.

படத்தின் உருவாக்கத்தில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணன், கலை இயக்குனர் ஏ.கே.முத்து தங்களது உழைப்பை அதிக ஈடுபாட்டுடன் கொடுத்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் நகைச்சுவைப் படத்திற்குரிய பின்னணி இசை பலமாய் அமைந்துள்ளது.

பேன்டஸி கதை என்றாலே எந்த லாஜிக்கும் பார்க்க முடியாது. நம்ப முடியாத கதையில் நம்ப முடியாத பல சம்பவங்கள் நடக்கும். அதையெல்லாம் படத்தில் மேஜிக்காக மாற்றி ரசிக்க வைக்க வேண்டும்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் எந்த மேஜிக்கையும் திரையில் நிகழ்த்தாமல், அப்படியே கொண்டு போயிருக்கிறார்கள். அதிலும் இடைவேளைக்குப் பின் படம் எப்போது முடியும் என்று பொறுமையை சோதிக்கிறது. கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியப் போகிறது என்று நம்மால் முன்கூட்டியே தீர்மானிக்க முடிவது படத்திற்கு மைனஸ்.

ஒரு நல்ல நாளில் மட்டும் யோசித்து கதை, காட்சிகளை, கொஞ்சமே கொஞ்சம் காமெடிகளை யோசித்தவர்கள், இன்னும் பல நாள் யோசித்து, டிஸ்கஷன் செய்து களத்தில் இறங்கியிருக்கலாம்.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - கொஞ்சம் சொல்லல், கொஞ்சம் கொல்லல்...!

 

பட குழுவினர்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓