பாகமதி,Bhaagamathie

பாகமதி - பட காட்சிகள் ↓

பாகமதி - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அனுஷ்கா, ஜெயராம், ஆஷா சரத்
இயக்கம் - அசோக்
இசை - தமன்
தயாரிப்பு - யுவி கிரியேசன்ஸ், ஸ்டுடியோ க்ரீன்

ரஜினிகாந்த் நடித்து 13 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சந்திரமுகி படமே, மலையாளத்தில் அதற்கு 12 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த மணிச்சித்திரத்தாழ் படத்தின் ரீமேக் தான். அந்த சந்திரமுகி படத்திலிருந்து கொஞ்சம், கார்த்தி, நயன்தாரா நடித்து 2016ல் வெளிவந்த காஷ்மோரா படத்திலிருந்து கொஞ்சம், வழக்கம் போல சில முந்தைய பேய்ப் படங்களிலிருந்து கொஞ்சம் என சேர்த்து கலக்கினால் வருவது பாகமதி.

ஒரு ஊர்ல ஒரு ராஜா என கதை சொன்ன காலம் போய், ஒரு ஊர்ல ஒரு பாழடைந்த பங்களா, அந்த பங்களாவுல ஒரு பேய் என இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி அரதப் பழசாகிப் போன பேய்ப் படங்களைப் பார்ப்பது எனத் தெரியவில்லை. தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் ஆகி வந்துள்ள படம் தான் பாகமதி. சில பல காட்சிகளை தமிழிலும் படமாக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது.

மக்கள் மத்தியில் மக்களுக்காகவே உழைப்பவர் எனப் பெயரெடுத்த மத்திய அமைச்சரான ஜெயராமை, ஊழல் பேர்வழி என முத்திரை குத்த மாநில முதல்வரும், உள்துறை அமைச்சரும் முடிவெடுத்து, அவர் மீது சிபிஐ விசாரணையை ஆரம்பிக்க வைக்கிறார்கள். ஒரு கொலைக் குற்றத்தில் கைதாகி சிறையில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியும், அமைச்சர் ஜெயராமின் தனிப்பட்ட உதவியாளருமான அனுஷ்காவிடம் விசாரித்தால் ஜெயராம் பற்றிய பல மர்மங்கள் வெளியாகும் என நினைக்கிறார் விசாரணையை ஆரம்பிக்கும் சிபிஐ அதிகாரி ஆஷா சரத். காட்டிற்குள் காவல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பாகமதி பங்களாவுக்குள் அனுஷ்காவை தனியாக அடைத்து வைத்து விசாரணையை ஆரம்பிக்கிறார்கள். விசாரணை ஆரம்பமான சில நாட்களில் அனுஷ்காவிற்குள் பாகமதி ஆவி புகுந்து கொள்கிறது. அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் தனக்கென தனிப் பெயரை வாங்கிய அனுஷ்கா இந்த பாகமதி கதாபாத்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது என நடிக்க சம்மதித்தார் எனப் புரியவில்லை. பிளாஷ்பேக்கில் அதிகாரியாக இருக்கும் போது கொஞ்சம் குண்டாகத் தெரிந்தாலும் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். சிறைக் கைதியாக உடல் இளைத்து பழைய அனுஷ்காவாகவே தெரிகிறார். பாகமதி ஆவி புகுந்து கொண்டதும் கொஞ்சமே கொஞ்சம் பயமுறுத்துகிறார். ஆனால், அவரைப் பார்த்தால் துளி கூட பயம் வரவில்லை. கிளைமாக்சில் அனுஷ்கா கதாபாத்திரத்திற்கான டிவிஸ்ட் மட்டுமே படத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று.

அனுஷ்காவிற்குப் பிறகு படத்தில் அதிக காட்சிகளில் வருபவர் ஆஷா சரத். சிபிஐ அதிகாரியாக கம்பீரமாகவும், மிடுக்காகவும் நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கான ஆடைகளில் இயக்குனர் கொஞ்சம் கண்ணியத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.

வழக்கம் போல வெளி உலகிற்கு, மக்களுக்கு நல்லவனாக நடிக்கும் ஜெயராம் தான் படத்தின் வில்லன். ஆனால், அதைக் கடைசி வரை எந்த சந்தேகமும் இல்லாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் அந்த இடத்தை ஜெயராம் கண்டிப்பாக நிரப்புவார்.

அனுஷ்காவின் காதலனாக உன்னி முகுந்தன். பிளாஷ்பேக்கில் கொஞ்சமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கும்படியான கதாபாத்திரம். உதவி போலீஸ் கமிஷனராக முரளி சர்மா. நகைச்சுவைக்கு தெலுங்கு காமெடியன் தன்ராஜ், வித்யுலேகா, கொஞ்சம் கூட சிரிப்பே வரவில்லை.

தமன் இசையில் சத்தம்தான் அதிகமாக இருக்கிறது. இடைவிடாமல் வாசித்துக் கொண்டே இருப்பது பின்னணி இசை அல்ல என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ?. மதியின் ஒளிப்பதிவும், அரங்க அமைப்பாளரின் உழைப்பும்தான் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றுகின்றன.

அந்த பங்களாவுக்குள் அனுஷ்கா சில சத்தங்களைக் கேட்டு மிரண்டு போய், எங்கே அந்த சத்தம் வருகிறது என தேடுகிறார், தேடுகிறார், தேடிக் கொண்டே இருக்கிறார். பேய்ப் படங்களில் வழக்கமா என்னவெல்லாம் செய்து பயமுறுத்துவார்களோ, அதை ஒன்றுவிடாமல் செய்திருக்கிறார் இயக்குனர்.

இந்தப் படத்தில் அனுஷ்கா தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சில வருடங்கள் காத்திருந்தார்கள் என்றார்கள். அது எதற்கு எனப் புரியவில்லை. அனுஷ்கா நடித்திருக்கிறார் எனப் பெரிய எதிர்பார்ப்பில் படத்திற்குச் சென்றால் ஏமாந்து போவது நிச்சயம்.

பாகமதி - பாக லேது...!

 

பாகமதி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பாகமதி

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓