2.25

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சேத்தன் மற்றும் பலர்
இயக்கம் - சி.எஸ்.அமுதன்
இசை - கண்ணன்
தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோஸ்

“சில படங்களின் டிரைலர் நன்றாக இருக்கும், படம் நன்றாக இருக்காது, சில படங்களின் டிரைலர் நன்றாக இருக்காது, படம் நன்றாக இருக்கும்” என இந்தப் படத்திலேயே ஒரு வசனம் இருக்கிறது. அது இந்தப் படத்திற்கும் நன்றாகவே பொருந்தும்.

படத்தின் முதல் பார்வை, டிரைலர், பாடல் என இந்தப் படத்தைப் பற்றி வெளியீட்டிற்கு முன்பாகவே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், படத்தைப் பார்த்தபின் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதல் பாகத்தில் இருந்த கலகலப்பு இந்தப் படத்தில் மிஸ்ஸிங்கோ மிஸ்ஸிங்.

படத்தின் ஆரம்பத்தில் மட்டும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். அதன் பின் எங்கோ ஒரு இடத்தில் மட்டுமே சிரிப்பு வருகிறது. இந்தக் காலத்தில் யு டியூபில் வரும் ஸ்பூப் வீடியோக்களை படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் அதிகம் பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது. இந்த தமிழ்ப் படம் 2 ஸ்பூப் காட்சிகளை விட அந்த யு டியூப் வீடியோக்கள் எவ்வளவோ பரவாயில்லை.

மனைவி திஷா பாண்டேவைக் கொன்ற வில்லன் பியை பழி வாங்க மீண்டும் போலீஸ் வேலைக்குச் சேர்கிறார் நாயகன் சிவா. யாரென்றே தெரியாத அந்த வில்லன் பி யார் என்பதைக் கண்டுபிடித்து, பழி வாங்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

முதல் பாகத்தில் இருந்த ஒரு புத்துணர்ச்சி இந்த இரண்டாம் பாகத்தில் சிவாவிடமும் இல்லை. சில காட்சிகளில் அவர் என்ன பேசுகிறார் என்பது கூட தெளிவாகப் புரியவில்லை. கிளைமாக்சில் மட்டும் கடைசியில் என்னையும் நடிக்க வச்சிட்டீங்களேடா என அழுகிறார். அந்தக் காட்சியில் கூட அப்படி ஒரு வசனத்தைத்தான் பேசுகிறாரே தவிர நடித்த மாதிரிய தெரியவில்லை. சதீஷைப் பார்த்து உனக்கு நடிக்க வராது, எனக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது” என தங்களைத் தாங்களே கலாய்த்துக் கொள்கிறார்கள்.

முதல் பாகத்தில் நாயகியாக நடித்த திஷா பாண்டே ஆரம்பத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து சிவாவிற்கு ஆரத்தி எடுத்து அப்படியே மேலே, போய்விடுகிறார். அதன்பின் சிவா, ஐஸ்வர்யா மேனன்-ஐக் காதலிக்கிறார். அவரையும் வில்லன் கொன்று விடுகிறார். மீண்டும் ஐஸ்வர்யாவே மற்றொரு கதாநாயகியாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஒரு வேடத்திலேயே நடித்தாரா என்பதே சந்தேகமாக இருக்க, இரட்டை வேடம் வேறு.

சதீஷ் தான் படத்தின் வில்லன். இன்னும் இவரை காமெடி நடிகர் என்றே சொல்ல முடியாது. அப்படியிருக்க வில்லனாக வேறு நடிக்க வைத்திருக்கிறார்கள். அதிலும் கிளைமாக்சுக்கு முன்பாக இவருக்கும் சிவாவிற்கும் ஒரு போட்டி நடனம் வேறு. என்ன கொடுமை சார் இதெல்லாம்.... காமெடி செய்கிறேன் என கொடுமை செய்கிறார்கள்.

முதல் பாகத்தில் இளமைக் கூட்டணியாகத் திரிந்த வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரது இடத்தை இரண்டாவது பாகத்தில் நடித்திருக்கும் சந்தானபாரதி, சுந்தர்ராஜன், மனோபாலா ஆகியோரால் நிரப்ப முடியவில்லை. இவர்களுக்கு படத்தில் காட்சிகளும் குறைவு தான்.

படத்தில் ஓரளவிற்கு தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் என்று சேத்தன்-ஐ மட்டும்தான் சொல்ல முடியும். சிவாவின் பாட்டியாக கலைராணி, சும்மாவே நடித்துத் தள்ளுவார், இந்தப் படத்திலும் அப்படியே. போலீஸ் அலுவலக வளாகத்தில், கட்டுப்பாட்டு அறையில், அலுவலகத்திற்குள் என கஸ்தூரியை ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார்கள். என்ன ஒரு கற்பனை...?.

கண்ணன் இசையமைப்பில் சிவாவின் அறிமுகப்பாடல் நான் யாருமில்ல... மட்டும் ஓகே.

கடந்த சில வருடங்களில் வந்த ஹிட்டான அல்லது பரபரப்பாகப் பேசப்பட்ட சில படங்களின் காட்சிகளைக் கிண்டலடித்திருக்கிறார்கள். அவற்றில் ஒரு சில மட்டும்தான் சிரிக்க வைக்கின்றன. முதல் பாகம் கொடுத்த வெற்றியின் தெம்பில் இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் எப்படியும் ரசித்து விடுவார்கள் என்ற ஓவர் கான்பிடன்ஸ்-ல் எடுத்தது போல் தெரிகிறது. ஒரு சில நடிகர்களை வேண்டுமென்றே கொஞ்சம் ஓவராகக் கிண்டலடித்திருக்கிறார்கள், என்ன காரணமோ...?. இடைவேளைக்குப் பின் படம் தள்ளாடுகிறது, கொட்டாவியும் வருகிறது.

தமிழ்ப் படம் 2 - தடுமாற்றம்

 

பட குழுவினர்

தமிழ்ப்படம் 2

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓